Published : 12 Mar 2019 10:44 AM
Last Updated : 12 Mar 2019 10:44 AM

சித்திரை திருவிழாவால் மதுரையில் வாக்குப்பதிவு குறையும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்: ஆட்சியரிடம் அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்சித்திரைத் திருவிழா தேரோட்டமும், கள்ளழகர் எதிர் சேவையும் தேர்தல்நாளில் நடப்பதால் தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறையும் அபாயம் உள்ளது. எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சியினர் விடுத்த கோரிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க உள்ளார்.

தமிழகம், புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் திருவிழா நடக்கும் அதே நாளில் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டமும், மற்றொரு முக்கிய நிகழ்வான கள்ளழகர் எதிர் சேவையும் நடப்பதால் மதுரை மட்டுமின்றி தென் மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இத்திருவிழாவில் சுவாமியை தரிசிக்க தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரளுவார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தற்போதுதேர்தல் நாளும், சித்திரைத் தேரோட்டமும் ஓரே நாளில் வருவதால் போலீஸார் இரு நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தேர்தல் வேண்டாம், திருவிழாதான் முக்கியம் என்று முடிவெடுத்தால் தேர்தலில் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளது.

பொதுவாக தேர்தல் நடத்தும் தொகுதிகளின் முக்கிய திருவிழா நாட்களைப் பார்த்துதான் தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் வழக்கம். மாவட்ட நிர்வாகங்களும், தேர்தல் அறிவிக்கும் நாட்களில் முக்கிய திருவிழாக்கள் இருந்தால் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்கும். ஆனால், மாவட்ட நிர்வாகம் சித்திரைத் திருவிழா குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்கவில்லையா? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. அதனால், சித்திரைத் திருவிழா விவரங்களை அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். இதில் போலீஸார் தரப்பில் ‘‘சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரையில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பது சிரமம். பக்கத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடக்கும் என்பதால் அங்கிருந்தும் போலீஸாரை வரவழைக்க இயலாது. கூடுதல் ஏற்பாடாக துணை ராணுவத்தை வரவழைக்கலாம்’’ என்றனர்.

கூடுதல் துணை ராணுவத்தை வரவழைப்பது குறித்து பரிசீலிப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். அனைத்துக் கட்சியினரும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று ஒரே கோரிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர். இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் எஸ்.நடராஜன் கூறியதாவது: தேர்தல் ஆணையம், உள்ளூர் திருவிழாக்களைப் பற்றிக் கேட்டனர். நாங்கள் ஏப்ரல் 19-ம் தேதி சித்திரைத் திருவிழா முக்கியம் என்பதால் அன்று உள்ளூர் விடுமுறை குறித்து மட்டும் தகவல் தெரிவித்தோம். அவர்கள், முந்தைய நாள் 18-ம் தேதி தேர்தலை அறிவித்து விட்டார்கள்.

தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சியினர் விடுத்துள்ள கோரிக்கை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஏப்ரல் 18-ம் தேதி தேர்தலை சிறப்பாக நடத்துவதைப் பற்றித்தான் சிந்திக்கமுடியும். அதற்கு தயார் நிலையில் உள்ளோம். தேரோட்டம் நடக்கும் நாளில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றார்.

தேரோட்டத்தன்று தேர்தல் நடத்தினால் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x