Published : 16 Sep 2014 12:37 PM
Last Updated : 16 Sep 2014 12:37 PM
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படாததால், அப்பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 47-வது வார்டு ஓரிக்கை பகுதியில் பல்லவா நகர், ஆசிரியர் நகர், ராஜம் நகர், பி.வி.ரத்தினம் நகர் பகுதிகள் அமைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமப் பகுதியாக விளங்கி வந்த இப்பகுதிகள் காஞ்சி நகரை ஒட்டிள்ள காரணத்தினால் நகரமாக வளர்ந்துள்ளது.
இதையடுத்து 2011-ல் இப்பகுதி காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகராட்சியுடன் இணைக்கப் பட்டாலும் மழைநீர் வடிகால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மழைநீர் வழிந்தோட வழியின்றி சாலைகளிலும் தெருக்களிலும் தேங்குகிறது. சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் ஓரிக்கை பகுதி தீவு போல காட்சியளிக்கிறது.
மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீருக்குள் இறங்கி செல்கின்றனர். இதுபோக கொசு உற்பத்தியாகும் இடமாக இவை மாறியுள்ளதால் சுகாதார சீர்கேடுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, ‘மழைநீர், கழிவுநீர் வெளியேற வழியில்லாததால் வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் அச்சத்துடன் தவிக்கிறோம். தண்ணீருக்குள் மேடு பள்ளம் தெரியாமல் பலர் விழுந்து காயமடைகின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்காக போராட்டம் நடத்தும்போது அரசு அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் எம்எல்ஏக்கள் சமாதானம் கூறுகின்றனரே தவிர பிரச்சினையை தீர்த்தபாடில்லை’ என்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் விமலாவிடம் கேட்டபோது, ‘காஞ்சிபுரம்- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைத்தால்தான் தேனம்பாக்கம் வழியாக நத்தப்பேட்டை ஏரிக்கு ஓரிக்கை பகுதியில் தேங்கும் மழைநீரை கொண்டு செல்ல முடியும்.
நெடுஞ்சாலைதுறையினர் அப்பகுதியில் கால்வாய் அமைத்தால் மட்டுமே இந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியும். இருப்பினும் தற்காலிக கால்வாய்கள் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியபோது ஒருசிலர் தங்களின் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, நெடுஞ்சாலைதுறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைத்தால் நகராட்சியும் விரைவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கும்’ என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
“காஞ்சிபுரம், செங்கல்பட்டு சாலையில் மழைநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாக, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பட்டுள்ளது. இருப்பினும் தற்காலிகமாக கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி இன்னும் ஒருசில நாட்களுக்குள் தொடங்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT