Published : 31 Mar 2019 03:41 PM
Last Updated : 31 Mar 2019 03:41 PM
எப்படியிருந்த திமுக, இன்று இப்படியாகிவிட்டது? என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சைக் கிண்டலாக குறிப்பிட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு
மக்களவைத் தேர்தலில் மதுரை கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக கூட்டணியை கடுமையாக தாக்கிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரையில் ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஆட்களே இல்லை. சேர்கள் முழுக்க காலியாக தான் இருந்தது. இதற்கு காரணம் அவருடைய பேச்சு தான். முன்பெல்லாம், கலைஞர் அவர்கள் பேச வருகிறார் என்றால், அவரது பேச்சைக் கேட்கவே ஒரு கூட்டம் இருக்கும்.
ஸ்டாலின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது என்று, அவரது பேச்சை காது கொடுத்துக் கூட கேட்பதில்லை. முன்னாள் பிரதமர் சோனியாஜி என்று உளறிக் கொட்டுகிறார். எப்படியிருந்த திமுக, இன்று இப்படியாகிவிட்டது?.
முன்பு, திமுகவின் பேச்சாளர்கள் யார் வந்தாலும், அவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இன்று ஒன்றுமே பேசத் தெரியாத ஒரு தலைவரை அறிமுகப்படுத்துறோமே என்று திமுகவில் மூத்த தலைவர்களே மனம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மக்கள் விரோதக் கூட்டணி.
இன்னொன்று பரிசுப் பெட்டி கூட்டணி. அவர்கள் பரிசுக் கொடுத்தே பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு அதுவே சின்னமாக கிடைத்துள்ளது. டிடிவி தினகரனை ஒரு பொருட்டாகவே மக்கள் கருதவில்லை. கமல், சீமான் எல்லாம் கட்சித் தொடங்கி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் டிடிவி தினகரனின் கட்சியையும் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT