Published : 11 Mar 2019 11:44 AM
Last Updated : 11 Mar 2019 11:44 AM
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரை மாவட்டத்தில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மேலும் அதேசமயத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்றும் அறிவித்தது.
இந்தநிலையில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா, மதுரையில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவும் தேர்தல் தேதி அறிவித்துள்ள நாளில் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏப்ரல் 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திருத்தேரோட்டம், அழகர் எதிர்சேவை, வைகையில் கள்ளழகர் இறங்குதல் எனும் நிகழ்வுகள் 19ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்தநிலையில், மதுரையில் சித்திரைத் திருவிழா எப்போது தொடங்கி எப்போது நிறைவுறுகிறது எனும் விவரங்களை, இன்று மாலைக்குள் (11.3.19) சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் தேர்தலை தள்ளிவைக்கவேண்டும் என பார்த்தசாரதி என்பவர், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இன்று மனு அளித்தார்.
இந்த மனுவைப் புகாராக எடுத்துக்கொண்ட நீதிபதிகள், இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி தெரிவித்தனர். மேலும் நாளைய தினம் 12ம் தேதி இந்த மனு மீதான விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT