Published : 08 Mar 2019 07:26 AM
Last Updated : 08 Mar 2019 07:26 AM

வனப்பகுதியில் கேரள போலீஸார் துப்பாக்கிச் சூடு: மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை; மற்றொருவர் தப்பியதால் தமிழக பகுதியில் தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்மாவோயிஸ்ட் என சந்தேகிக்கப் படும் நபர் உயிரிழந்தார். சம்பவத் தின்போது, காயங்களுடன் மற்றொ ருவர் தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் மருத்துவமனைகளில் தமிழக போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்ட எல்லையில் கேரள பகுதியில் உள்ள வனத் தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் பல ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. இவர்கள் தமிழகஎல்லையில் உள்ள பழங்குடியினர் கிராமங்கள் மட்டுமின்றி, நகருக்குள்ளும் வர வாய்ப்புள்ளது. இதனால், மாநில எல்லைகளில் உள்ள கிராமங்கள் மற்றும் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் அதிரடிப்படை போலீஸார் மற்றும் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதகை அருகேயுள்ள கிண்ணக்கொரை, அப்பர்பவானி, முள்ளி ஆகிய பகுதிகளில் அதிரடிப்படை முகாம்கள் உள்ளன. அதேபோல், கூடலூர் அருகேயுள்ள பாட்டவயல், தாளூர், ஓவேலி உள்ளிட்ட எல்லை யோர கிராமங்களில் முகாமிட்டு கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்

இந்நிலையில், நேற்று அதிகாலை கேரள மாநிலம் வயநாடுமாவட்டம் வைத்திரி பகுதியில், மாவோயிஸ்ட்கள் என சந்தேகிக்கப்பட்ட கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயத்துடன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் தமிழகத் தைச் சேர்ந்த சி.பி.ஜலீல் என தெரிவித்த கேரள போலீஸார், அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

வைத்திரி தமிழக எல்லையில் உள்ள நிலையில், காயமடைந்த மற்றொரு நபர் தமிழக எல்லை யோர கிராமங்களுக்கோ அல்லது மருத்துவமனைகளுக்கோ வரவாய்ப்புள்ளது என கருதப்படு கிறது. இதனால், மாநில எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் தற்போது கூடுதல்போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முதல் ரோந்துப்பணிகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே மாவட்டத்துக்குள் வர அனுமதிக் கப்படுகின்றன.

நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கூறும்போது, ‘வயநாடு மாவட்டம் வைத்திரியில் மாவோ யிஸ்ட் என சந்தேகிக்கப்படும் நபர்களை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் தமிழக எல்லைக்குள் வரவாய்ப்புள்ளது. அவர் சிகிச்சைபெறவும், தப்பவும் வாய்ப்புள்ள தால் எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும்சோதனைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன.

மேலும், எல்லையில் உள்ள 25 அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் நீலகிரி மாவட்டத்துக்குள் மாவோயிஸ்ட்கள் ஊடுருவ வாய்ப்பில்லை. மாநில எல்லைப் பகுதிகள் அனைத்திலும் அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார், ஆயுதப்படை போலீஸார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x