Published : 04 Mar 2019 08:15 PM
Last Updated : 04 Mar 2019 08:15 PM

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கும் திமுக: அதிருப்தியில் நிர்வாகிகள்

திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை வழங்கிவிட்டு குறைவான தொகுதிகளில் போட்டியிடுவதால் திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் ஏற்பட்ட பிணக்கில் திமுக தனியாகப் போட்டியிட்டது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் மதிமுக, தேமுதிக, பாமக கட்சிகள் சென்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓட்டுகளைப் பிரித்ததில் திமுக படுதோல்வி அடைந்தது.

அதன் பின்னர் 2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமைய, திமுக அணிக்குள் வரவேண்டிய தேமுதிக வெளியேறி மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததால் வாக்குகள் சிதறியதில் சொற்ப வாக்குகளில் திமுக பல இடங்களில் தோல்வியைத் தழுவியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 35 இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாமக சென்றது திமுகவை சற்று யோசிக்க வைத்தது. கடந்த தேர்தல்களைப் போன்றதொரு நிலை மீண்டும் வரக்கூடாது என்கிற எண்ணம் தற்போது திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவு தேமுதிகவை திமுக அணிக்குள் கொண்டுவர பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அது தற்போதுவரை இழுபறியாக உள்ளது. அதிமுக அணிக்குச் செல்கிறார் விஜயகாந்த் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு இடம் மட்டுமே என திமுக தலைமை கூறிவந்த நிலையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள், ஐஜேகே, முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காங்கிரஸுக்கு 10 தொகுதிகளைச் சேர்த்து 17 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி மிஞ்சியுள்ளது. அவர்களுக்கும் தலா 2 தொகுதிகள் அளித்தால் 21 தொகுதிகள் ஆகிவிடும். இதன் மூலம் திமுக 19 தொகுதிகளில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த திமுக நிர்வாகிகள் சோர்வடைந்து போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேவையில்லாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதன் வெளிப்பாடு கூட்டணிக்காக வேலை செய்வதில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. எங்கள் கட்சியின் வேட்பாளர் நின்றால் அவர்கள் பணம் செலவழிப்பார்கள், நாங்களும் எங்கள் வேட்பாளர் என உற்சாகத்துடன் வேலை செய்வோம். ஆனால் பணமும் செலவழிக்கும் நிலையில் இல்லாத கட்சிகளுக்கு நாங்களே பணம் செலவழித்த வெற்றிபெற  வைக்க உழைக்க வேண்டுமா? என பெயர் சொல்ல விரும்பாத கட்சி நிர்வாகி ஒருவர் கேள்வி கேட்டார்.

கூட்டணி தர்மம் அதுதானே? யார் வென்றாலும் கூட்டணி என்றுதானே கூறுவார்கள் எனக் கேட்டபோது, சர்க்கரை என பேப்பரில் எழுதி சாப்பிட்டால் இனிக்குமா? கூட்டணி தர்மத்துக்கு ஒரு தொகுதி கொடுக்கலாம், வெல்லும் நிலையில் நாம் இருக்கும்போது எதற்காக இரண்டு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோபத்துடன் அவர் கேட்டார்.

நாளை காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தாலும் அதை கட்டுப்படுத்தும் விதத்தில் நமக்கு எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினார் அவர்.

திமுக கூட்டணியில் விசிக உள்ளிட்ட கட்சிகள் 5 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில்தானே நிற்கிறார்கள் எனக் கேட்டதற்கு, அதனால் கட்சிக்கு என்ன லாபம்? 2011 முதல் ஆட்சிப் பொறுப்பில் வராமல் தொண்டர்கள், இந்த முறையாவது வெல்வோம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படி அள்ளிக்கொடுத்தால் எப்படி என பதில் கேள்வி கேட்டார்.

திமுக அணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கியதில் நிர்வாகிகள் தரப்பிலும், தொண்டர்கள் தரப்பிலும் சோர்வு இருப்பதைக் காண முடிகிறது. இதில் விரும்பிய தொகுதிகள் கூட்டணிக்கு செல்வது, தலைவர்களின் வாரிசுகள் தேர்தலில் நிற்பது, விஐபிக்கள் தொகுதிகளில் அவர்கள் நிற்பது எனப் போக புதியவர்களுக்கான வாய்ப்பு இல்லாத நிலையில் அடுத்தடுத்த சோர்வு தரும் நிகழ்ச்சிகளும் நடக்கத்தான் போகிறது பாருங்கள் என அவர் தெரிவித்தார்.

வெல்ல வேண்டும் என்கிற முனைப்பில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகளைக் கொடுத்தது தவறு என்கிற விமர்சனமும் கட்சிக்குள் வைக்கப்படுகிறது. கூட்டணிக்கு வெளியே போர் நடப்பது மட்டுமல்ல, கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளையும் சமாளிக்கும் பொறுப்பு திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளதை நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x