Published : 28 Mar 2019 05:07 PM
Last Updated : 28 Mar 2019 05:07 PM
தன்னை 'கோமாளி' என விமர்சிப்பவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சமீபத்தில் பிரதமர் மோடியை 'டாடி' என்று சொன்னதால், சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாக்கப்பட்டார். இந்நிலையில், இதுபோன்ற கருத்துகளால் அவர் 'கோமாளி' என விமர்சிக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் ராஜேந்திர பாலாஜியிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "கோமாளி இல்லையென்றால் நாடகமே விளங்காது, மக்கள் அதனை ரசிக்க மாட்டார்கள். நாடகங்களில் கோமாளி உண்மையைத் தான் சொல்லுவார். யார் கோமாளி, யார் ஏமாளி என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்", என்றார்.
இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:
"உழைப்பவர்களுக்குத் தான் அதிமுகவில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மகன் ஜெயலலிதா இருக்கும்போதே கட்சி பணியாற்றியுள்ளார். திமுகவில் எல்லாருமே வாரிசுகள் தான். அடுத்த தேர்தலில் எல்லா தொகுதிகளுக்கும் வாரிசுகளையே திமுக களமிருக்கும் போலிருக்கிறது.
அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் கொடுக்க முடியாது, அப்படி கொடுப்பது தவறான முன்னுதாரணமாகி விடும். இரட்டை இலை சின்னத்தை பெறுவோம், குக்கர் சின்னத்தை பெறுவோம் என, தினகரன் தொடர்ச்சியாக அவரது தொண்டர்களை ஏமாற்றி வருகிறார்.
ராதாரவியை திமுகவில் இருந்து நீக்கியதன் மூலம் ஸ்டாலின் அவரை பழிவாங்கி விட்டார். திமுகவில் இணைந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை ராதாரவி உணர்ந்திருப்பார்.
திமுக தொடுத்த வழக்கால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் ஜெயலலிதா இறந்தார்.
திமுக ஆட்சியில் ரவுடிகளின் ராஜ்ஜியம் நடைபெற்றது. இப்போது அதிமுக ஆட்சியில் மக்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடியை ஸ்டாலின் இழிவாக பேசுகிறார். மோடியை 'டாடி' என சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. இந்திரா காந்தியை அவர்கள் 'அன்னை' என்று அழைக்கிறார்களே. முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதற்கும் யார் காரணம்? என்னிடம் புத்தகம் இருக்கிறது. அதற்கு திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தான் காரணம்", என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT