Last Updated : 22 Mar, 2019 10:48 AM

 

Published : 22 Mar 2019 10:48 AM
Last Updated : 22 Mar 2019 10:48 AM

தேனியில் ஓபிஎஸ் அரசியலை வீழ்த்த வியூகம்: தங்க தமிழ்ச்செல்வனை களம் இறக்கிய தினகரன்

தேனி மக்களவைத் தேர்தலில் துணை முதல்வர் ஓ.பி.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள சூழ்நிலையில், அவரை வீழ்த்த அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ்ஸின் அரசியல் வளர்ச்சிக்கு தடைபோட தினகரன் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தேனி மக்களவைத் தொகுதியில் கடந்த 2014-ல் அதிமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றார். தற்போது அதிமுக சார்பில் துணைமுதல்வரும் அக்கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் களம் இறக்கப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு செல்வாக்கான தொகுதிதேனி.

இதனால் அங்கு தனது செல்வாக்கை நிருபிப்பதுடன், தனது அரசியல் எதிரியாக விளங்கும் ஓபிஎஸின் அரசியல் வளர்ச்சிக்கு தடை போடவும் தினகரன் வியூகம் வகுத்து வந்தார். இதனால்  ‘‘தேனியில் நானேகூட நிற்கலாம்’’ என்று தினகரன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதனால் தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது.

இந்தநிலையில், அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனை தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக தினகரன் களம் இறக்கியுள்ளார். ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு அவர் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் புதிய திருப்பமாக தேனி மக்களவைத் தொகுதியில் தங்க தமிழ்ச் செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அரசியல் செய்பவர். தினகரனும் தங்க தமிழ்ச்செல்வனும் அரசியல் ரீதியாக ஓபிஎஸ்ஸுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள். அதனால், அவர்கள் தேனி தொகுதியில் நிற்கும் ரவீந்திரநாத்குமாரை வீழ்த்துவதன் மூலம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அரசியலில் சறுக்கலை ஏற்படுத்த நினைப்பதாக கூறப்படுகிறது.

தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் என்பதோடு உள்ளூரில் செல்வாக்கும் பெற்றவர் தங்க தமிழ்ச்செல்வன் என்பது கூடுதல் பலம். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இதே  தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். எனினும் அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம் ஆருண் வெற்றி பெற்றார்.

தங்க தமிழ்ச்செல்வனை நிறுத்தி  ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை வீழ்த்தலாம் என்பது அமமுகவினரின் கணக்கு. அதன் மூலம் ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலத்துக்கும் சரிவை ஏற்படுத்த தினகரன் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் மகனை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவது தேனி தொகுதி அதிக கவனத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x