Published : 08 Mar 2019 02:00 PM
Last Updated : 08 Mar 2019 02:00 PM
வரும் மக்களவைத் தேர்தலுக்காக ஆயத்தப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பரிசோதனை, தேர்தல் அலுவலர்கள் நியமனம் என தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அரசு தரப்பு சுறுசுறுப்படைந்துள்ளது.
அதேவேளையில், ஆளும் அரசியல் கட்சிகளும், எதிர்கட்சியும் கூட்டணி வியூகம் அமைத்து, தொகுதி பங்கீடு விஷயத்தில் முனைப்பு காட்டி வருகின்றன. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பொதுச் சுவர்களில் விளம்பரம் செய்ய தொடங்கியுள்ளன.
மத்திய, மாநில அரசு அலுவலக சுவர்கள், மேம்பாலம், பள்ளி, ஆலயங்கள், ரயில்வே உள்ளிட்ட பொதுச் சுவர்களில் எவ்வித விளம்பரமும் செய்யக் கூடாது என கண்டிப்பான உத்தரவு அமலில் உள்ளது. அதேபோல, தனியார் சுவர்களில் தேர்தல் விளம்பரங்களை செய்யும் கட்சிகள், முறையாக தனியாரிடம் அனுமதி பெற்றே தேர்தல் விளம்பரங்களை எழுத வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து விதிமுறைகளையும் வழக்கம்போல அரசியல் கட்சிகள் காற்றில் பறக்கவிட்டு, பொதுச் சுவர்களை ஆக்கிரமித்து கட்சி தலைவர்கள் வருகை முதல் தேர்தல் விளம்பரங்கள் வரை சுவர் விளம்பரம் செய்து வருகின்றன.
சேலத்தின் பல பகுதிகளில் உள்ள பொதுச் சுவர்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆக்கிரமித்து, சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் பொதுச் சுவர்கள் அரசியல் கட்சியினரால் அசிங்கப்படுவதை தடுக்கும் விதமாக தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவகர்கள் ‘விழிப்புணர்வு சுவராய்’ மாற்றி வருகின்றனர்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள ரயில்வே சுவர்களில் அடிக்கடி ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரச்சாரம், பொதுக்கூட்டம், தலைவர் வருகை என சுவரில் கட்சி விளம்பரம் செய்து வந்தனர். மத்திய அரசுக்கு சொந்தமான பொதுச் சுவரில் விதிமீறி அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் செய்வதை தடுக்கும் விதமாக, ‘குழந்தை தொழிலாளர் தடுப்பு, தண்ணீர் சேமிப்பு, ஓட்டளிப்பதன் முக்கியம் என விழிப்புணர்வு வரைபடங்களும், வாசகங்களும் அடங்கிய சுவர் விளம்பரமாய் மாறியுள்ளது.
ஏற்கெனவே, மோகன் குமாரமங்கலம் அரசு பொதுமருத்துவமனை, காந்தி விளையாட்டு மைதானம் சுற்றுசுவர், அரிசிபாளையம் தெப்பகுளம் சுற்றுச் சுவர்கள் விழிப்புணர்வு சுவர்களாய் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மாற்றியுள்ள நிலையில், தற்போது, முள்ளுவாடி ரயில்வே கேட் சுற்றுச்சுவரும் ‘விழிப்புணர்வு சுவராய்’ மாற்றப்பட்டுள்ளதற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
அதேபோல, சேலம் ஆனந்தா பாலத்தில் பாஜக சார்பில் ‘மீண்டும் மோடி’ என்ற தேர்தல் விளம்பரத்தை பக்கவாட்டு சுவரில் எழுதி வைத்தள்ளனர். இதுபோன்ற அரசு பொது சுவர் அனைத்தையும் ‘விழிப்புணர்வு சுவராய்’ மாற்றிவிட வேண்டும் என ஒட்டு மொத்த மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT