Published : 26 Mar 2019 04:01 PM
Last Updated : 26 Mar 2019 04:01 PM
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்தது. மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக ஓபிஎஸ் வைத்த நிபந்தனைகளுள் ஒன்று டிடிவி தினகரனை ஓரங்கட்டுவது. அந்தக் கோரிக்கை ஏற்று செயல்படுத்தப்பட ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் ஒன்றாகின.
தனித்துவிடப்பட்ட டிடிவி தினகரன் இணைப்பு வியூகத்தை எல்லாம் முறியடித்து ஆர்.கே.நகரில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குக்கர் சின்னமும் பிரபலமானது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக சுமார் 10 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், மற்றவர்களின் வெற்றி- தோல்வியைப் பாதிக்கும் கட்சியாக உருவெடுத்தது.
அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் அக்கட்சிக்கு சவாலாக இருக்கக்கூடும் என கூறப்படும் நிலையில் இதுகுறித்து அரசியல் விமர்சகரும், சமூக ஆய்வாளருமான ரவீந்திரன் துரைசாமியைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
மக்களவைத் தேர்தலில் தினகரனின் அமமுக எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்தத் தேர்தலில் தினகரன் மிகப்பெரிய அளவில் வாக்குகளைப் பெறும் சக்தியாக உருவெடுப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக பிரிந்து சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒரணியாகவும் இருந்தபோது மத்திய அரசின் தலையீடு மற்றும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் அவர் சார்ந்துள்ள முக்குலத்தோர் சமூகத்திடம் தினகரனுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் ஆணையத்தின் தலையீடு, வருமான வரித்துறை சோதனைகள் என பலவும் தினகரன் ஆதரவு சமூகத்திடம் மோடிக்கு எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது. positive social justice என்ற அடிப்படையில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் தினகரனுக்கு அவரது சமூகத்தினரிடையே நேர்மையான அனுதாபத்தைக் கொண்டுள்ளது.
குறிப்பாக முக்குலத்தோரில் மறவர், பிறமலைக்கள்ளர், கள்ளர் சமூகத்தினரிடம் பெரும் ஆதரவைத் தேடித்தந்துள்ளது. இதனால் அந்த சமூக வாக்காளர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தினகரனின் அமமுகவை ஆதரிக்கவே அதிகம் வாய்ப்புள்ளது.
இதன் தாக்கம் எந்தெந்த தொகுதிகளில் இருக்கக்கூடும்?
தென்பகுதியில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தஞ்சாவூர், திருச்சி தொகுதிகளில் தினகரன் சதவீத அடிப்படையில் இரட்டை இலக்கத்தில் வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.
இதற்கு அடுத்தபடியாக திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, கரூர், நாகை போன்ற தொகுதிகளில் தினகரன் ஓரளவு வாக்குகளைப் பெறக்கூடும்.
இதனால் எந்த அணிக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடும்?
இத்தொகுதிகளைப் பொறுத்தவரை அதிகமான அளவு அதிமுகவின் வாக்குகளையே தினகரன் பிரிக்கக்கூடும். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியே அதிகமான அளவு பாதிப்பைச் சந்திக்கும்.
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் கணிசமானோர் தினகரனை ஆதரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறதே? அப்படியானால் திமுகவின் வாக்குகளும் கணிசமாக பாதிக்குமே?
மோடிக்கு எதிரான தினகரனின் நிலைப்பாடு அவருக்கு சிறுபான்மை மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான். எனினும் அவர்கள் வாக்குகள் என்பது மோடியின் எதிர்மறையான வாக்குகள். அதனால் தேசிய அளவில் மோடியின் பாஜகவுக்கு மாற்றாக ஒரு அரசு அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள் இறுதியாக திமுக - காங்கிரஸ் கூட்டணியையே ஆதரிக்க வாய்ப்புண்டு. தேசிய அளவில் ராகுல் காந்தியின் தலைமையை விரும்பும் அவர்கள் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கே வாக்களிப்பார்கள் என எண்ணுகிறேன்.
இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT