Published : 24 Mar 2019 02:53 PM
Last Updated : 24 Mar 2019 02:53 PM
நான் பாஜகவில் சேர்ந்ததால் என்னிடம் என் அப்பா பேசவே இல்லை. அதுதான் எனக்கு மாறாத வடுவாக, வலியாக இன்னமும் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் அவரின் கணவர் டாக்டர் சவுந்தர்ராஜனும் இணைந்து, தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தனர்.
இதில் அரசியல் கடந்தும் பல விஷயங்கள் குறித்து இருவருமே மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்கள்.
பாரம்பரியம் மிக்க கட்சியில் பல வருட காலம் பணியாற்றிக்கொண்டிருக்கும் உங்கள் அப்பா குமரி அனந்தன், அதற்கு நேர்மாறாக உள்ள பாஜகவில் சேர்ந்ததை எப்படி எடுத்துக்கொண்டார்? என்று தமிழிசையிடம் கேள்வி கேட்கப்பட்டது.
தன் தந்தை குறித்தும் இந்தக் கேள்வி குறித்தும் தமிழிசை பகிர்ந்துகொண்டதாவது:
'எனக்கு என் அப்பாதான் எல்லாமே. சிறு வயதில் இருந்தே அவரின் அரசியல் செயல்பாடுகளில் நானும் உடனிருந்திருக்கிறேன். அவருடைய பாதயாத்திரை முதலான விஷயங்களில் நானும் சென்றிருக்கிறேன்.
ஏதேனும் அறிக்கைகள் தயார் செய்யவேண்டுமென்றால், ‘இசை, பேப்பர், பேனாவை எடுத்துக்கோ’ என்பார் அப்பா. அவர் சொல்லச் சொல்ல, நான் கார்பன் வைத்து எழுதித் தருவேன். அப்பா என்னை ‘இசை இசை’ என்றுதான் கூப்பிடுவார்.
அவருடைய பல அரசியல் நிகழ்வுகளில் நானும் கூடவே இருந்திருக்கேன். எனக்கும் அப்பாவுக்கும் அப்படியொரு நெருக்கமும் பிணைப்பும் அரசியலில் இருந்தது. அவருடைய உயரத்தை அவர் அடையவில்லை என்ற வருத்தம் எனக்குள்ளே உண்டு.
ஆனால், ஒருகட்டத்தில், அரசியலுக்கு வரவேண்டும் என நான் நினைத்தேன். பாஜகவைத் தேர்ந்தெடுத்தேன். இதைக் கண்டு என் கணவர் உட்பட எல்லோருமே அதிர்ந்துபோனார்கள். நான் கட்சியில் சேர்ந்த நாளின் போது, கணவர்தான் இன்னும் பதட்டமாகிப் போனார்.
’அப்பாவுக்குத் தகவல் தெரியறதுக்குள்ளே நாமளே சொல்லிடலாம்’னு என் அப்பாவுக்குப் போன் செய்தார். அதைக் கேட்டதும் அப்பா ரொம்பவே அப்செட்டாகிவிட்டார். ‘அப்பா ஒரு கட்சியில, பொண்ணு ஒரு கட்சியில. என் மானமே போச்சு’ என வருத்தப்பட்டார். அதன் பிறகு பல மாதங்கள் என்னுடன் பேசவே இல்லை. அதுதான் எனக்கு மாறாத வடுவாக, வலியாக இன்னமும் இருக்கிறது.
பாஜகவின் தமிழக தலைவராகப் பொறுப்பேற்ற அன்றைக்கு, ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று எனக்காக வேண்டிக்கொண்டு, பிரசாதத்தை எடுத்து வந்து, வீட்டில் வந்து கொடுத்துவிட்டு, அவர் பாட்டுக்குச் சென்றுவிட்டார். அதுதான் அப்பா.
அப்படியொரு ஒழுக்கமானவர் அப்பா. நேர்மையானவர். யாருடைய காசுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டதே இல்லை அவர். ஆனால், அவருக்கான அங்கீகாரமோ பெருமையோ கிடைக்கவில்லை. அவரின் பெயரைக் காப்பாற்றும் விதமாக, ‘குமரி அனந்தன் பொண்ணு’ன்னு பேர் எடுக்க வேண்டும். அப்பாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். இதுதான் என் ஆசை''.
இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT