Last Updated : 18 Mar, 2019 12:13 PM

 

Published : 18 Mar 2019 12:13 PM
Last Updated : 18 Mar 2019 12:13 PM

தேர்தல் அறிக்கைகளில் பெண்களுக்கு 33%; சீட் ஒதுக்குவதில் பாரபட்சம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தக் கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

திமுக தான் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இவர்களில் தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், தூத்துக்குடியில் கனிமொழி என இருவர் மட்டுமே பெண்கள். கனிமொழி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து மாநிலங்களவையில் வலியுறுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அறிவித்துள்ள 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலிலும் ஒருவர்கூட பெண் வேட்பாளர் இல்லை.

அதிமுகவும் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிட்டிங் எம்.பி.யான மரகதம் குமரவேலுக்கு மீண்டும் காஞ்சிபுரம் (தனி) தொகுதியிலிருந்து போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இருவர் மட்டுமே பெண்கள். ஓசூர், நிலக்கோட்டை தனி தொகுதிக்கு மட்டும் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பாமக முதல் கட்டமாக 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ஒருவர்கூட பெண் வேட்பாளர் இல்லை.

அமமுகவின் டிடிவி தினகரன் முதற்கட்டமாக 24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார். இவர்களில் சாருபாலா தொண்டைமான், பொன்னுத்தாய், செங்கொடி ஆகிய மூன்று பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகள் எல்லாம் தங்களுக்குக் கிடைத்த ஒன்றிரண்டு சீட்டை மகளிருக்கு ஒதுக்கவில்லை.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வசந்தி, வனரோஜா, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் களம் கண்டனர். திமுக சார்பில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 2 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

எல்லா கட்சிகளுமே மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி பேசும் கட்சிகள்தான் என்பதுதான் முரண்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதுமிருந்து 61 பெண்கள் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றனர். இதுதான் அதிகபட்ச எண்ணாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் பெண் எம்.பி.க்களே இல்லை.

தேர்தல் நேரத்தில் தேடாதீர்கள்?

அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கள் அறிக்கைகளில், பொதுக்கூட்ட மேடைகளில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக முழங்கினாலும்கூட வேட்பாளர்கள் அறிவிப்பில் அதனைக் கிடப்பில் போடுவது ஏன்? என்று சமூகச் செயற்பாட்டாளர் ஓவியாவிடம் கேள்வி எழுப்பினோம். அவர் தேர்தல் அரசியல் தொடங்கி அரசியல் யதார்த்தம் வரை பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியவதாவது:

கடந்த 2008-ம் ஆண்டு முதலே தேர்தல் அரசியலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறோம். இதுவரை எந்த பிரதான கட்சியும் அதனைச் செயல்படுத்தவில்லை.

இதற்கு இரண்டு பிரச்சினைகளை நான் காரணமாகக் குறிப்பிடுகிறேன். என்னைப் போன்ற செயற்பாட்டாளர்களின் குரல் தனித்த குரலாகவே இருக்கிறது. இதை ஒரு பொது இயக்கமாக மாற்ற வேண்டும். இதை தேர்தல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பது தவறு. இதில் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். இங்கிருந்து கோரிக்கைகள் எழும்போதுதான் மேலிருந்து பரிசீலனைகள் வரும்.

 

 

இரண்டாவது பிரச்சினை தேர்தல் அரசியலை முன்வைத்துப் பார்க்க வேண்டியது. திமுகவில் இரண்டு பெண் வேட்பாளர்கள். இந்த இருவருமே ஆண் இயக்கத்தின் பின்னிலிருந்து மேலெழுந்தவர்கள். இவர்களுக்கு குடும்பப் பின்புலம், செல்வாக்கு இருக்கிறது. இவர்களைத் தேர்தலில் நிறுத்தினால் எதிர்க்கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சரிசமமாகப் போட்டியிட முடியும். ஆனால், இப்படிப் பின்புலம் உள்ள பெண்கள் இங்கே எத்தனை பேர் அரசியலில் இருக்கிறார்கள். செல்வாக்கு இல்லாத பெண்களைக் களத்தில் இறக்கினால் தேர்தல் அரசியலில் எடுபடாது.

தேர்தல் வேளையில் கட்சிகளின் இலக்கு வெற்றி மட்டுமே. எனவே, தேர்தல் நேரத்தில் மட்டும் பெண்களைத் தேடாதீர்கள்.

மாவட்டச் செயலாளர் தொடங்கி அனைத்துப் பதிவுகளும் ஆண்களிடமே குவிந்திருக்கின்றன. இப்படி இருக்கும்போது பெண்களை எப்படி வேட்பாளர்களாகக் களம் இறக்க முடியும்?

இந்தத் தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளில் இருந்தே அடுத்த தேர்தலுக்கான பெண் வேட்பாளர்களை உருவாக்க முயற்சி செய்யுங்கள் என்பதே அரசியல் கட்சிகளுக்கான எங்களது கோரிக்கை.

பெண்களுக்கு தொகுதி ஒதுக்கீடு.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேர்தலில் ரிசர்வ் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதுபோல் பெண்களுக்கும் பிரத்யேக தொகுதி ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு பெண்களைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கும் பழக்கம் இல்லை. அதனைப் பழக்கப்படுத்த இப்படியான நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

சமூக சீர்திருத்தமும் தேவை:

அரசியல் கட்சிகள் பெண் தொண்டர்களை வளர்த்தெடுப்பதில் இருக்கும் சிக்கல் பெண்களால் எளிதில் வீட்டுக் கடமைகளை உதறிவிட்டு பொது வேலைக்கு வர இயலாத சூழல்.

ஒரு பெண் வீட்டில சம அதிகாரம் பெற இயலாவிட்டால் அவளால் எப்படி பொது வாழ்வில் ஈடுபட இயலும்? இதை வீட்டிலிருந்து பெண்கள் தான் சீர் செய்ய வேண்டும். தனக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

அதேபோல் தேர்தல் அரசியலுக்குப் பணம் தேவைப்படுகிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெண்களின் பொருளாதார சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது தெரிந்ததே?

சமூக சீர்திருத்தங்கள் ஏற்பட்டால்தான் பெண் பொது வாழ்வில் தன்னை ஆணுக்கு நிகராக ஈடுபடுத்த இயலும். அப்போதுதான் முக்கியப் பொறுப்புகளில் அரசியல் கட்சிகளாலும் பெண்களை நியமிக்க இயலும்.

நாம் தமிழருக்கு சபாஷ்

நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர்களில் 50% பெண்கள் என அறிவித்திருக்கிறது. கொள்கை அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் இந்த முடிவுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சிறந்த முன்னுதாரணம். தங்கள் கட்சியை வளர்த்தெடுக்க இதை அவர்கள் ஓர் அடையாளமாகக் கொள்ளலாம். ஆனால், தேர்தல் அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட கட்சிகளுக்கு உடனே இது சாத்தியமில்லை என்றாலும் அடுத்த தேர்தலுக்குள்ளாவது பெண்களை ஆயத்தப்படுத்தலாம்.

இப்போது இருக்கும் சூழலில் எந்தக் கட்சி பெண் வேட்பாளர்களை நிறுத்தினாலும், எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் நான் ஆதரிப்பேன். குறைந்தபட்ச குரல்களாவது நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும்''.

இவ்வாறு ஓவியா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x