Published : 17 Mar 2019 10:16 AM
Last Updated : 17 Mar 2019 10:16 AM
தேர்தல் ஆணையம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால் சிவகாசியில் போஸ்டர்கள் அச்சடிக்கும் அச்சகங்கள் ஆர்டர்கள் இன்றி தவித்து வருகின்றன. கட்சிக் கொடிகள், பேட்ஜ்கள், தொப்பிகள் விற்பனையும் சரிவடைந்துள்ளன.
முன்பெல்லாம் தேர்தல் என்றவுடனேயே வீதிதோறும் கட்சிக் கொடி தோரணங்கள், போஸ்டர்கள் என திருவிழா போன்று ஊரே களைகட்டும். கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்களின் படங்கள், சின்னங்கள் பொறித்த பேட்ஜ்கள் தயாரிப்பது, கட்சி சின்னங்கள் பொறித்த தொப்பிகள் தயாரிப்பது என அச்சகங்கள் அதிக அளவில் உள்ள சிவகாசியும் பரபரப்பாகிவிடும்.
கூட்டணிகள் குறித்து அரசியல் கட்சிகள் முடிவு செய்தவுடன், அந்தந்த கட்சியினர் தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் போஸ்டர்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க அச்சக நிறுவனங்களுக்கு முன்பணத்துடன் ஆர்டர்கள் கொடுக்கத் தொடங்கிவிடுவர். இதனால் சிவகாசியில் எங்கு பார்த்தாலும் அரசியல்வாதிகளின் தலைகளாகத்தான் இருக்கும்.
ஆனால், தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால் சிவகாசி பகுதியிலுள்ள அச்சகங்கள் மற்றும் கொடி தயாரிப்பு நிறுவனங்கள் வேலைவாய்ப்பின்றி தற்போது வெறிச்சோடி உள்ளன.
இதுகுறித்து, சிவகாசியில் கட்சிக் கொடிகள் மொத்த வியாபாரம் செய்துவரும் ஈஸ்வரன் கூறியதாவது: எங்களுக்கு இது சீசன் தொழில்தான். வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏராளமான ஆர்டர்கள் வரும். ஆனால், பொது இடங்களில் கட்சிக்கொடிகள் கட்டக் கூடாது, பொதுமக்களுக்கு கட்சி சின்னங்கள் பொறித்த தொப்பிகள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விதி எண் 127-ஏ-வின்படி போஸ்டரில் அச்சகத்தின் முழு முகவரி,தொலைபேசி எண் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆர்டர் கொடுப்போருடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு அதன் ஒரு நகலை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும். அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் 3 பிரதிகளை அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அனுமதிபெற்ற எண்ணிக்கைக்கு மேல் அச்சிடக் கூடாது.
விதிமுறைகளை மீறினால் 6 மாதசிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போஸ்டர்கள் அச்சடிப்பதில் கட்சியினரிடையே இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது.
முதலீடு திரும்ப கிடைக்குமா?
கடந்த தேர்தலைவிட, இந்த முறை கட்சிக் கொடிகள், போஸ்டர்கள் விற்பனை 50 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால், முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால் கட்சியினர் முன்புபோல் போஸ்டர்கள் அச்சிடுவதிலும், கொடிகள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கொடிகள், பேட்ஜ்கள், தொப்பிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன என்றார்.
அச்சக உரிமையாளர் மாரியப்பன் கூறியதாவது: பொதுவாக தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்பிருந்தே கொடிகள், போஸ்டர்கள், தொப்பிகள், பேட்ஜ்கள் தயாரிக்கும் பணியை தொடங்கிவிடுவோம்.
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கும் இங்குதான் லட்சக்கணக்கில் போஸ்டர்கள் அடித்துக்கொடுத்து வந்தோம். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது.
உள்ளூரிலேயே குறிப்பிடும் படியாக போதிய ஆர்டர்கள் வரவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து சுத்தமாக எந்த ஆர்டரும் இதுவரை வரவில்லை.
போஸ்டர் அடித்தால், அது கட்சி கணக்கு அல்லது வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்பதால் போஸ்டர்கள் ஒட்டுவதை கட்சியினர் தவிர்த்து வருகின்றனர். 50 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த அச்சகங்களில் தற்போது 15 அல்லது 20 பேர் மட்டுமே பணியாற்றும் சூழ்நிலை உள்ளது. அச்சகத் தொழில் நலிவடைந்து வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT