Last Updated : 29 Mar, 2019 07:13 PM

 

Published : 29 Mar 2019 07:13 PM
Last Updated : 29 Mar 2019 07:13 PM

மேட்டூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை; பொதுமக்கள் அச்சம்: வனத்துறை கண்காணிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஊருக்குள் புகுந்த சம்பவத்தால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றறனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூரில் கத்திரிமலை, ஐயங்காடு, தார்க்காடு, காரைக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. சுட்டெரிக்கும் கொடை வெயில் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல், வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டேனீஷ்பேட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட காட்டில் இருந்து ஊருக்குள் வந்த புள்ளிமான், கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு கொளத்தூர் அருகே உள்ள ஐயங்காடு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்தது. ராஜேஷ்குமார் என்பவர் வளர்த்து வந்த நாயை, சிறுத்தை கவ்வியுள்ளது. நாய் குரைப்பு சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த ராஜேஷ், சிறுத்தை பிடியில் நாய் சிக்கியிருப்பதை அறிந்து கூச்சலிட்டுள்ளார். நாயை விடாமல் பிடித்து கடித்துக் குதறிய சிறுத்தையை விரட்ட பட்டாசு வெடித்தனர். இருப்பினும் நாயை விடாமல் சிறுத்தை கடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்றது. வானவெடி உள்ளிட்ட பட்டாசுகளை தொடர்ந்து வெடிக்கவும், நாயை புதருக்கு அருகே விட்டு விட்டு சிறுத்தை காட்டுக்குள் சென்று மறைந்தது.

இதுகுறித்து ஐயங்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்ததில், சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருந்ததைக் கண்டனர். ஊருக்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்க நேற்று  கூண்டு வைத்து, வனத்துறையினர் கண்காணித்தனர். ஆனாலும், கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை. இரண்டாவது நாளாக ஐயங்காடு பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு, சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x