Published : 30 Mar 2019 07:06 PM
Last Updated : 30 Mar 2019 07:06 PM

தென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்யாதது ஏன்? - ஜெயவர்தன் பேட்டி

அதிமுகவின் தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடுகிறார் டாக்டர் ஜெயவர்தன். கடந்த முறை தென்சென்னையின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இங்கு இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் இவர்.

தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்த ஜெயவர்தன், ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது...

எப்போதும் சிரித்த முகத்துடன் சாந்தமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு கோபமே வராதா?

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை மக்களுக்கு நல்லது பண்ணிக்கொண்டு மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அந்த வகையில், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதுதான் நல்லது.

கடந்த 5 வருடங்களில், எம்.பி.யாக உங்களின் செயல்பாடு உங்களுக்குத் திருப்தி அளித்துள்ளதா?

புரட்சித்தலைவி அம்மா நல்லாசியுடன், கடந்த 5 ஆண்டுகளில் எம்.ஆர்.டி.எஸ், வெள்ளத் தடுப்பு போன்ற பல்வேறு திட்டங்கள். இதற்கெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தொடர்ந்து முயற்சி எடுத்ததன் காரணமாகத்தான் விதையாக விதைக்கப்பட்டு, நிதி பெறப்பட்டு, பல்வேறு கட்டங்களில் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

10 மதிப்பெண்களுக்கு, உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் மதிப்பெண்கள் எவ்வளவு?

கண்டிப்பாக 10க்கு 10 மதிப்பெண்கள் கொடுப்பேன். உண்மையான மனசாட்சிப்படி கடுமையாக உழைக்க வேண்டும். அரசுப்பதவி என்பது பொறுப்பு. அதில், 100 சதவீதம் அர்ப்பணிப்பு இருக்க வேண்டு. அதனால்தான், மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றும், அதை விட்டுவிட்டு, சேவை மனப்பான்மையுடன் இங்கு செயல்படுகின்றேன்.

மருத்துவம் படித்த உங்களுக்கு, மருத்துவத் தொழிலைப் பார்க்க வேண்டும் என்று எப்போதாவது ஆசை வந்திருக்கிறதா?

மக்கள் பணியில் இருந்துகொண்டே தொழிலைப் பார்ப்பது என்பது அநீதி இழைப்பது போன்றது. அதனால், என்றென்றைக்கும் அதைப்பற்றி சிந்தித்தது கூட கிடையாது.

தெரிந்த முகமாக இருக்கக்கூடிய திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து வெற்றிபெற, என்னென்ன உத்திகளை வைத்துள்ளீர்கள்?

தொடர்ந்து 5 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள திட்டங்கள், வகுத்திருக்கக்கூடிய திட்டங்கள், பெறப்பட்டிருக்கும் நிதி - இதெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறேன். பல விஷயங்களுக்காகத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், நாடாளுமன்றத்தின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து. அதில் வெற்றியும் கண்டுள்ளேன். புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் தொடர்ந்து இதையெல்லாம் செய்து, இப்போது அனைத்துமே மக்களிடத்தில் எடுத்துச் சென்று, வாக்கு சேகரித்து, ‘மறுபடியும் வாய்ப்பு தாருங்கள், உங்களுக்கு சேவையாற்ற’ என்று அவர்களிடத்தில் வாக்கு சேகரிக்கின்றோம்.

தென்சென்னையின் தண்ணீர்ப் பிரச்சினையை ஏன் முழுவதுமாகத் தீர்க்க முடியவில்லை?

நல்ல கேள்வி இது. ஒட்டுமொத்தமாக இந்தக் குடிநீர்த் தட்டுப்பாடு எதிர்வரும் காலத்தில் இல்லாத சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்றால், அதற்கு பாராளுமன்றத்தினால்தான் முடியும். அந்த வகையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால், நாம் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். 150 எம்.எல்.டி. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டு, நகர்ப்புறத்துறை அமைச்சரைச் சந்தித்து, இசைவுபெற்று, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் நிலையில் உள்ளது. அது அமைக்கப்படும் சூழ்நிலையில், ஒட்டுமொத்தமாகத் தொகுதியின் தண்ணீர்த் தட்டுப்பாடு பிரச்சினை தீர்ந்துவிடும்.

இதுதவிர, தொலைநோக்குத் திட்டமாக 6025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 450 எம்எல்டி தண்ணீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் வலியுறுத்தி, நகர்ப்புறத்துறை அமைச்சரைச் சந்தித்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், நாடாளுமன்றத் தொகுதியில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15-க்கும் மேற்பட்ட ஏரிகளை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி நீராதாரங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோல் பல்வேறு விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெருங்குடி குப்பைக் கிடங்கை அகற்றுவதாக இந்தத் தேர்தலில் வாக்குறுதியை முன்வைத்துள்ளீர்கள். கடந்த முறை நீங்கள் எம்.பி.யாக இருந்தபோது குப்பைக் கிடங்கை ஏன் அகற்றவில்லை?

இது ஒட்டுமொத்தமாகத் திடக்கழிவு மேலாண்மை சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருக்கக்கூடிய பெருங்குடி குப்பைக்கிடங்கில், குப்பை எதனால் சேர்கிறது? திடக்கழிவு மேலாண்மையில் சரியாகத் திட்டம் வகுக்கப்படாததால்தான் குப்பை சேர்கிறது. அதற்காகத்தான் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், முதல்வரைச் சந்தித்து, 1200 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மைக்கு என பிரத்யேகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அனைத்துக் குப்பைகளும் இந்தப் பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு வராது. 70 சதவீதக் குப்பைகள், தெருக்களிலேயே பிரித்து எடுக்கப்பட்டுவிடும்.

மீதமுள்ள 30 சதவீத குப்பைகள் மட்டுமே பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு வரும். 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் உடனுக்குடன் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்தத் திடக்கழிவு மேலாண்மையை நீங்கள் கையாளவில்லை என்றால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நீங்கள் மேம்படுத்த முடியாது. அதைத்தவிர, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மேம்படுத்த, பாராளுமன்றத்திலும் சுற்றுச்சூழல் அமைச்சரைச் சந்தித்து, 25 கோடி ரூபாய் மத்திய, மாநில அரசு நிதியுடன் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எந்த நம்பிக்கையில் இரண்டாவது முறையாகத் தென்சென்னையில் போட்டியிடுகிறீர்கள்?

தொடர்ந்து தெருத்தெருவாக நடந்திருக்கக் கூடியவன், மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டு அறிந்திருக்கக் கூடியவன், அதற்காகப் போராடி வெற்றி கண்டிருக்கக் கூடியவன். தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி, குரல் கொடுத்து நாடாளுமன்றத் தொகுதிக்காகப் பல திட்டங்களை வகுத்திருக்கக் கூடியவன்.

உங்கள் தந்தை அமைச்சர் ஜெயக்குமார், உங்களுக்காகப் பிரச்சாரம் செய்யாதது ஏன்?

புரட்சித் தலைவி அம்மா கற்றுக் கொடுத்த பாடங்கள். தேர்தல் களத்தில் கழக உடன்பிறப்புகள் எப்படியெல்லாம் செயல்பட வேண்டுமென்று எங்களுக்குத் தெளிவாக வகுத்துத் தந்துள்ள பாதைகள் இருக்கின்றன. கழகத்தைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும் திறமையாகச் செயல்பட்டு, வெற்றி என்பது எங்கள் குறிக்கோள். புரட்சித் தலைவி அம்மாவிடம் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து அதற்காகச் செயல்பட்டு வெற்றி காண்போம் என்ற வகையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அம்மா கத்துக் கொடுத்த பாடமே போதும்.

ஜெயலலிதா இல்லாத இந்தத் தேர்தல் களத்தை, எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

புரட்சித் தலைவி அம்மா என்னென்ன நினைத்தார்களோ, நம்முடைய மாநிலம் முன்மாதிரி மாநிலமாக ஆக்கப்பட வேண்டும். புரட்சித் தலைவி அம்மா மறைந்ததற்குப் பின்னாலும் நமது கழக உறுப்பினர்கள் ஒருமித்தக் குரலுடன் மேற்கொண்டுள்ள எண்ணம், கழகத்தை வலுப்படுத்த வேண்டும். இந்தியத் திருநாட்டில் அதிமுக வெற்றி முகட்டில் இருக்க வேண்டும். அதற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்கிற எண்ணத்தில், கண்டிப்பாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறும்.

மக்கள் எளிதில் அணுகக்கூடிய எம்.பி.யாக நீங்கள் இருந்தீர்களா?

ஃபேஸ்புக்கில் என்னை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள். என்னுடய ஃபேஸ்புக் பக்கத்திலேயே என்னுடைய செல்போன் நம்பரைப் போட்டு வைத்துள்ளேன். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எளிதாகப் போன் செய்யலாம். எளிதாக அணுகக்கூடியவனாக இருக்க வேண்டும். அந்த வகையில், என்னுடைய அலுவலகமும் எந்நேரமும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து அவர்களுடைய பிரச்சினைகளைச் சொல்லலாம். உடனுக்குடன் சந்திக்கலாம். அவர்களுடைய பிரச்சினைகள் தீரும்வரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் பேட்டியின் வீடியோ இதோ...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x