Last Updated : 18 Mar, 2019 01:53 PM

 

Published : 18 Mar 2019 01:53 PM
Last Updated : 18 Mar 2019 01:53 PM

அச்சுறுத்தும் சென்னை மண்டலம்: கூட்டணிக்கு ஒதுக்கிய அதிமுக; நேரடியாக களம் இறங்கும் திமுக

திமுக வலிமையாக இருப்பதாகக் கூறப்படும் சென்னை மண்டலத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 4-ஐ கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. அதேசமயம், 6 தொகுதிகளில் திமுகவே நேரடியாக களமிறங்கியுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த 7 தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. இருப்பினும் தமிழகத்தின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில், மத்திய சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் என்பது குறைவாகவே இருந்தது.

ஆனால் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிலைமை அதிமுகவுக்கு சாதகமாக இல்லை. முந்தைய தேர்தல்களில் ஒரளவு செல்வாக்கு பெற்றிருந்த அதிமுக, சென்னை பெருவெள்ளத்தால் அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பைச் சந்தித்தது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (எஸ்சி), பூந்தமல்லி, ஆவடி தொகுதிகளில் அதிமுக வென்றது. ஆவடியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது. திருவள்ளூர், மாதவரம் தொகுதிகளை திமுக கைப்பற்றியது.

வடசென்னை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில், ராயபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரும், ஆர்.கே.நகரில் ஜெ. ஜெயலலிதாவும் வெற்றி பெற்றனர்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். திருவிக நகர் (எஸ்சி), திருவொற்றியூர் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது.

மத்திய சென்னையில் உள்ள துறைமுகம், எழும்பூர் (எஸ்சி), ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, அண்ணாநகர், வில்லிவாக்கம் என ஆறு தொகுதிகளையும் 2016-ல் திமுகவே கைப்பற்றியது.

தென் சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், விருகம்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளை அதிமுகவும், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகளை திமுகவும் கைப்பற்றின.

அதுபோலவே, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 3 தொகுதிகளில் 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வென்றது. ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி), மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக வென்றது.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும், கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம் (எஸ்சி), செய்யூர் (எஸ்சி) என 5 தொகுதிகளிலும் திமுகவே வென்றது. திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட, அரக்கோணம் (எஸ்சி), சோளிங்கர், திருத்தணி ஆகிய 3 தொகுதிகளில் 2016 தேர்தலில் அதிமுக வென்றது. ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி தொகுதிகளில் திமுக வென்றது.

6 தொகுதிகளில் திமுக போட்டி

2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய 7 தொகுதிகளில் திருவள்ளூர், தென் சென்னை, காஞ்சிபுரம் என 3-ல் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. மற்ற 4 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. வட சென்னையில் தேமுதிகவும், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம் தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

அதேசமயம் திமுக வலிமையாக உள்ள இந்தப் பகுதியில் திமுக கூட்டணியில் திருவள்ளூர் தொகுதி மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை மற்ற 6 மக்களவைத் தொகுதிகளில் திமுக நேரடியாக களம் இறங்குகிறது.

மத்திய சென்னை - தயாநிதி மாறன், தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு என அக்கட்சியின் சார்பில் பிரபலமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

அதிமுக செல்வாக்கு

அதிமுகவைப் பொறுத்தவரையில் திருவள்ளூர் மற்றும் தென் சென்னை தொகுதிகளில் 2009-ம் ஆண்டும் வெற்றி பெற்றது. தென் சென்னையில் பாஜகவுக்கும் சற்று வாக்கு வங்கி உள்ளது. இதனால் சாதகமான இந்த இரு தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. காஞ்சிபுரத்தில் பலமான திமுகவை எதிர்கொள்கிறது. மற்ற 4 தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x