Published : 21 Mar 2019 01:37 PM
Last Updated : 21 Mar 2019 01:37 PM
காங்கிரஸ் கட்சியில் தொகுதியை வாங்கிவிட்டு வலிமையான வேட்பாளரை தேடும் குழப்பத்தால் வேட்பாளர் அறிவிக்க தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்குப்பின் காங்கிரஸை மிகவும் மதித்து கேட்டதொகுதிகளை கொடுத்தார் ஸ்டாலின். கரூர், கிருஷ்ணகிரி, திருச்சி, விருதுநகர், தேனி உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுத்ததில் திமுகவினருக்கு ஏக வருத்தம். ஆனாலும் ஏற்றுக்கொண்டார்கள்.
கரூர், கிருஷ்ணகிரியில் காங்கிரஸுக்கு வலுவான வேட்பாளர் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் பிடிவாதமாக இந்த தொகுதிகளை கேட்டு வாங்கியதாக காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசப்பட்டது.
ஜோதிமணிக்காக கரூர் தொகுதியையும், டாக்டர் செல்லக்குமாருக்காக கிருஷ்ணகிரி தொகுதியையும் கேட்டு வாங்கியது டெல்லி தலைமை என்கிறார்கள். இதில் மாநில தலைமையை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் கிருஷ்ணகிரியில் ஏற்கெனவே தோற்றுப்போன டாக்டர் செல்லக்குமார், இந்த முறை அதைவிட வலுவான கே.பி.முனுசாமியை எதிர்கொள்ள முடியாது என்றும், கரூரில் தம்பிதுரையை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஜோதிமணி பலம் இல்லாதவர் என்ற கருத்தும் காங்கிரஸுக்குள் ஓங்கி உள்ளது.
இதனால் தொகுதிகளை சண்டைப்போட்டு வாங்கிய காங்கிரஸார் இப்போது கரூரில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என யோசித்து வருவதாக கூறப்படுகிறது. பழையபடி ஈவிகேஎஸ் இளங்கோவனை கேட்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கரூரில் செல்வாக்குமிக்க தம்பிதுரைக்கு எதிராக குஷ்புவை களமிறக்க யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று தேனியில் ஜே.எம்.ஹாரூண் வேண்டாம் என்பதில் அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்க அந்த இடத்தில் சிறுபான்மை பிரிவு அஸ்லம்பாஷா கேட்கிறார். அஸ்லம் பாஷாவை நிறுத்துவதா? அல்லது அங்கும் குஷ்புவை நிறுத்துவதா? அல்லது ஹாருணுக்கே கொடுக்கலாமா? என்கிற கடும் குழப்பம் ஓடுகிறதாம்.
அதேபோன்று சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் வாய்ப்பு வழக்கு காரணமாக குறைந்து வருவதால் விருதுநகரில் போட்டியிட உள்ள மாணிக் தாகூரை அவரது தொகுதியான சிவகங்கையில் நிறுத்தலாம் என எண்ணுகிறார்களாம்.
அங்கு சுதர்சன நாச்சியப்பனும் கேட்கிறார், சிவகங்கையில் மாணிக்தாகூர் நிறுத்தப்பட்டால் ஈவிகேஎஸ் இளங்கோவனை விருதுநகரில் நிறுத்தலாம் என எண்ணுவதாகவும் தகவல்.
வெற்றி வாய்ப்புள்ள கன்னியாகுமரியிலும் ராபர்ட் புரூஸ் மீது சிஎஸ்ஐ வாக்காளர்கள்கோபத்தில் இருப்பதால் பழைய காங்கிரஸ் எம்.பி.மறைந்த டென்னிஸ் குடும்பத்தில் ஒருவரை நிறுத்தலாம் என்று பேசி வருவதாக கூறப்படுகிறது. ரூபி மனோகரனும் திருநாவுக்கரசர ்மூலம் முயல்வதாகவும் அதற்கு வாய்ப்பு குறைவு என்கின்றனர்.
இடியாப்பச்சிக்கலைவிட மிகப்பெரிய சிக்கலாக காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு உள்ளது. வேட்புமனு தாக்கல் இறுதி நாளுக்கு முன் வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா? என்று கேட்டபோது இன்றுதான் ராகுல் பட்டியலை பார்வையிடுகிறார், நாளை கட்டாயம் வெளியாகும் என தெரிவித்தனர்.
இறுதியாக கரூரில் குஷ்புவுக்கும், கிருஷ்ணகிரியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், சிவகங்கையில், விருதுநகரில், தேனியிலும், கன்னியாகுமரியிலும் மாற்றம் வரலாம் என்கின்றனர்.
பேசாமல் கிருஷ்ணகிரியையும், கரூரையும் திமுகவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு கௌரவமாக 7 தொகுதிகளில் நிற்கலாம் என காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அரசியலில் எதுவும் நடக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT