Published : 11 Mar 2019 07:34 PM
Last Updated : 11 Mar 2019 07:34 PM

3 தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை மட்டுமே கணக்கில் எடுக்கும்: முன்னாள் ஆணையர் கோபால்சாமி பேட்டி

அரவக்குறிச்சி ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைத்திருப்பதற்கு குறிப்பிட்ட காரணம் இல்லை, நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் அதை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்தார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக கடிதம் கொடுத்ததாக கொறடா அளித்த புகாரில் சட்டப்பேரவைத்தலைவர், அவர்களை தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று பின்னர் உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு நீக்கம் உறுதியானது.

அவர்கள் நீக்கத்தால் 18 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று திருவாரூர் எம்எல்ஏ திமுக தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை ஒட்டி இரு தொகுதிகளும், ஓசூர் சட்டப்பேரவைத் உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதியிழப்புக் காரணமாக அந்த் தொகுதியும் சேர்ந்து 21 தொகுதிகள் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் சில மாதங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அதைத்தவிர மற்ற தொகுதிகளில் தேர்தல் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதனிடையே நேற்று தேர்தல் அறிவிக்கப்பட்டதில் திடீரென 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் என அறிவிப்பு வெளியானது.

அரவக்குறிச்சியில் சுயேச்சை வேட்பாளர் கீதா என்பவர் இரு கட்சிகளும் காசுகொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள் என வழக்குப்போட்டிருப்பதாகவும், ஒட்டப்பிடாரத்தில் 400 வாக்குகளில் தான் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத கிருஷ்ணசாமி வழக்குப்போட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மேற்கண்ட இரண்டுத்தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாள் இதுகுறித்த தகவல் யாரிடமும் இல்லை, திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில், “வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூன்று தொகுதி இடைத் தேர்தல்களை நடத்தவில்லை” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பதற்கு எவ்வித முகாந்திரமோ, ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.

குறிப்பாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த தகுதி நீக்கம் ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இறுதிக்கு வந்துவிட்டது. அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வேறு தேர்தல் வழக்குகளில் “தேர்தலை நடத்தக் கூடாது என்று எவ்வித தடையுத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் வழக்கிலும் அவ்வாறு தடையுத்தரவு ஏதும் இல்லை. ஆகவே இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான வாக்காளர் விரோத நடவடிக்கை.

அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட செயலும் அல்ல   ஆகவே அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும்”  என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது.

திமுகவின்கூற்று சரியா? தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றமே உத்தரவிட்டப்பின்னும் அதற்கு முன்னர் உள்ள வழக்குகளை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைப்பது சரியான நடவடிக்கையா என ஓய்வுப்பெற்ற தேர்தல் ஆணையர் கோபால் சாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தகுதி நீக்கம் செய்து தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்தப்பின்னர் வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைத்துள்ளதே தேர்தல் ஆணையம்?

வழக்கு இல்லை என்று நீங்கள் சொல்ல முடியுமா? 3 தொகுதிகளிலும் வழக்கு இருக்கிறது அல்லவா.

ஆனால் தகுதி நீக்கமே செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் வழக்கை காரணம் காட்டி ஒத்திவைப்பது சரியாக இருக்குமா?

ஆனால் வழக்கு இன்னும் இருக்கிறது அல்லவா? எதிர்த்து நின்ற வேட்பாளர் யாராவது வழக்கு போட்டிருப்பார்கள் அல்லவா? அந்த வழக்கு நிலுவையில் இருக்கும். அதனால்தான் செய்திருப்பார்கள். தேர்தல் ஆணையம் விஷயமில்லாமல் செய்ய மாட்டார்கள்.

வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது அவர்களுக்கு தெரியும், அதைத்தான் தேர்தல் ஆணையம் கருத்தில்கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x