Published : 28 Mar 2019 12:23 PM
Last Updated : 28 Mar 2019 12:23 PM
மிஷன் சக்தி குறித்து பிரதமர் மோடி அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாக இருந்தாலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. பிரதமரின் ஆளுகைக்குள் தேர்தல் ஆணையம் சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன் காட்டமாகப் பேசினார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை(இஸ்ரோ) மிகப்பெரிய மைல்கல் சாதனையாக, செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சியில் எதிரிநாட்டு செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளதைக் குறிப்பிட்டார். இந்த மிஷன் சக்தி திட்டம் வெற்றிகரமாக செய்யப்பட்டது என்று பெருமிதம் அடைந்தார்.
தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்தை விதமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது பிரதமர் மோடி இதுபோன்ற மக்களிடம் உரையாடுவது விதிமுறை மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பீட்டர் அல்போன்ஸ் தி இந்து தமிழ்திசைக்கு (ஆன்-லைன்) பேட்டி அளித்தார்
பிரதமர்மோடி பேசியது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாக இருந்தால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
தேர்தல் ஆணையம் தனது சுதந்திரமான செயல்பாட்டை இழந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. தேர்தல் ஆணையம் முழுக்க பிரதமரின் ஆளுகைக்குள்ளும், வழிகாட்டுதலின், படி செயல்படுகிறது என்பது அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் ஒட்டுமொத்தமான புரிந்து கொள்ளுதல். பிரதமர் அறிவிப்புகளை வெளியிட்டு, சுற்றுப்பயணம் முடிக்கும் வரை தேர்தல் தேதியை வெளியிடாமல் காத்திருக்கும் தேர்தல் ஆணையத்திடம் எதையும் எதிர்பார்க்க முடியாது
ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் 20 நிமிடங்களாக மோடி நேற்று தன்பக்கம் திருப்பிவிட்டார். இதை பிரதமராக இருந்து பேசினாரா அல்லது பாஜக தலைவராக பேசினாரா?
ஒருநாட்டின் பிரதமராக இருந்து தனக்கு இருக்கும் அரசியல் அதிகாரத்தை, பாஜகவின் வெற்றிக்காக தவறாக பயன்படுத்துகிறார் என்பதுதான் உண்மை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜிக்கோ அல்லது கர்நாடக, கேரள முதல்வருக்கோ இத்தகைய வாய்ப்பை, அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்குமா.
நாங்கள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாநில முதல்வர்கள் கோரினால், தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குமா. தேர்தல் ஆணையத்தைக் கேட்காமல் இதுபோன்ற அறிவிப்பை அவர்கள் வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுமா.
நாட்டு மக்கள் கவனத்தை 20 நிமிடங்கள் தன்பால் வைத்திருக்கவேண்டும் என்று சொன்னால், மற்ற கட்சிகள் எவ்வளவு செலவிட வேண்டும். எந்த கோணத்தில் இருந்துபார்த்தாலும், நியாயமான, சுதந்திரமான தேர்தல் களத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கிக்கொடுக்குமா எனத் தெரியவில்லை
தொடக்கமே இப்படியென்றால், இன்னும் போகப்போக தேர்தல் ஆணையம், அரசியல் சாசனத்துக்கு விரோதமாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் செயல்படப் போகிறதோ எனும் அச்சம் நடுநிலையாளர்களுக்கு இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குறைந்தபட்ச ஊதியத்துக்கு மாற்றாக மிஷன் சக்தி அறிவிப்பை மோடி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் கருத்து வருகிறதே?
மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இதுபோன்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டு இருக்கலாம். இந்த அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் ஏதும் இப்போது இல்லை. ஆகவே, நாளேடுகளின் தலைப்புச் செய்தியை தன்பக்கம் வைத்துக்கொள்ள எந்தவிதமான யுக்தியையும் பிரதமர் பின்பற்றுவார் என்பதைத்தான் காட்டுகிறது. தலைப்புச்செய்தியில் வேறுஎதுவும் இடம்பெற்றுவிடக்கூடாது.
ராகுல்காந்தி வெளியிட்ட அறிவிப்புகளின் தாக்கத்தைப் பார்த்து பயந்து இந்த அறிவிப்பை மோடி செய்திருக்கலாம். ராகுல்காந்தியின் திட்டத்துக்கு நாடுமுழுவதும் பெரும் வரவேற்பு எழுந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT