Last Updated : 10 Mar, 2019 09:36 AM

 

Published : 10 Mar 2019 09:36 AM
Last Updated : 10 Mar 2019 09:36 AM

கூட்டணி கட்சிகள் கேட்டு வந்த நிலையில் திருச்சி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறது திமுக?- விருப்ப மனு அளித்தவர்கள், தொண்டர்களிடையே உற்சாகம்

திருச்சி மக்களவைத் தொகுதியை கூட்டணிக் கட்சிகள் கேட்டு வந்த நிலையில், தற்போது திமுகவே நேரடியாக களமிறங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் அக் கட்சியின் தொண்டர்கள் உற்சாக மடைந்துள்ளனர்.

திமுகவின் அரசியல் வரலாற் றில் ‘திருப்புமுனை நகரம்' என அழைக்கப்படுகிறது திருச்சி. அன்பில் தர்மலிங்கம் தொடங்கி, தற்போதைய மாவட்டச் செயலா ளரான கே.என்.நேரு வரையி லான காலகட்டம் வரை இங்கு திமுகவுக்கு வலுவான கட்ட மைப்பு இருந்தபோதிலும், திருச்சி மக்களவை தொகுதியில் அக்கட்சி பெரும்பாலும் நேரடியாக போட்டியிடுவதில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக என கூட்டணிக் கட்சிகளுக்கே அளித்து வந்துள்ளது.

வெற்றியும், தோல்வியும்...

இதற்கு மாறாக கடந்த 1980-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாக களமிறங்கியது. அக்கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கிய முன் னாள் அமைச்சர் என்.செல்வராஜ் 2,78,485 வாக்குகள் பெற்று, 73,599 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.கே.ரங்கராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றார். அதன்பின் 1984-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அடைக்கலராஜிடம் 1,02,905 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் என்.செல்வராஜ் தோல்வியடைந்தார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு...

அதன்பின் 30 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2014-ம் ஆண்டில் மீண்டும் இத்தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டது. அக்கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் துணைமேயர் அன்பழகன் 3,08,002 வாக்குகளைப் பெற்று 1,50,476 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ப.குமாரிடம் தோல்வியடைந்தார். இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதி திமுகவின் கூட் டணிக் கட்சிக்கே ஒதுக்கப்படலாம் என பேச்சு எழுந்தது.

கூட்டணி கட்சிகளுக்கு ஆர்வம்

இதன்படியே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் மகன் லூயிஸ் உள்ளிட்டோர் திமுக கூட்டணி சார்பில் இத்தொகுதியில் போட்டியிட முயற்சித்து வந்ததாக கூறப்பட்டது. அந்த சூழலில் மதிமு கவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒதுக்கப்பட்டதால், வைகோ திருச்சியில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், திருச்சி தொகுதியில் மீண்டும் திமுகவே களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாவதால் அக்கட்சித் தொண்டர்களும், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களும் உற்சாக மடைந்துள்ளனர்.

திமுக போட்டியிட வலியுறுத்தல்இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியபோது, “திருச்சி தொகுதி ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டை யாக விளங்கியது. அதைத் தகர்த்து, 1980-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் என்.செல்வராஜ் வெற்றி பெற்றார். எனினும் அடுத்த தேர்தலிலேயே அவர் தோல்வியைச் சந்தித்தார். எனவே, அதற்குப்பின் நடைபெற்ற தேர்தல்களில் திமுக இங்கு நேரடியாக போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ், மதிமுக என கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது. 2014-ம் ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது.

தோல்வியைக் கருத்தில் கொண்டு, இத்தொகுதியை மீண்டும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிடாமல், திமுகவே நேரடியாக போட்டியிட வேண்டும் என திமுக தலைமையிடம் தெரிவித்துள்ளோம். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி திருச்சியைக் கேட்பதாகவும், இம்முறை திமுக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. எனவே தேர்தல் பணிகளை முடுக்கி விடுமாறு கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து வட்ட, கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வரப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

திமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், திருவெறும்பூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் நவல்பட்டு விஜி, புதுக்கோட்டை மாவட்ட அவைத் தலைவர் த.சந்திரசேகரன், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார், பொறியாளர் அசோகன், முன்னாள் அமைச்சர் ரகுபதியின் மகன் அண்ணாமலை என 10-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். இவர்களில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் இம்முறை திருச்சி தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x