Published : 16 Mar 2019 10:35 AM
Last Updated : 16 Mar 2019 10:35 AM
வெண்ணெயின்னா வெண்ணெய் இது...ஊத்துக்குளி வெண்ணெயிது... என்று ஊத்துக்குளிக்கே பெருமை தேடித் தந்திருக்கிறது வெண்ணெய். போடா.. வெண்ணெய்.. என்று இங்கிருப்பவர்களை யாரும் சொல்லிவிட முடியாது. கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு, நெய்க்கு அலைகிறான் பார் என்பார்கள். அந்த வெண்ணெயே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.
எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு பிரசித்தி பெற்ற அல்லது சுவை மிக்க உணவுகளை தேடிப் பிடித்து உண்பதில் சிலருக்கு அலாதிப் பிரியம் இருக்கும். இந்தப் பட்டியலில் திருப்பதி லட்டும், திருநெல்வேலி அல்வாவும், சேலத்து மாம்பழமும் இருப்பதுபோல, ஊத்துக்குளி என்றாலே நினைவுக்கு வருவது வெண்ணெய்தான். அந்த அளவுக்கு பாரம்பரியத் தரம் மிக்கதாகத் திகழ்கிறது ஊத்துக்குளி வெண்ணெய்.
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் நிறைந்த பகுதியான ஊத்துக்குளியில், சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் குடிசைத் தொழிலாகத் தொடங்கியது வெண்ணெய் தயாரிப்புத் தொழில்.
வெண்ணெய், நெய் உற்பத்தி எங்கு நடைபெற்றாலும், மாறாத சுவை மற்றும் மணம் காரணமாகவே ஊத்துக்குளி வெண்ணெய், நெய்க்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.
ஊத்துக்குளியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் வெண்ணெய், நெய் மொத்தமாக அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல, கேரள மாநிலத்துக்கும், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கும் இங்கிருந்து தயிர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வாரத்துக்கு 10 முதல் 15 டன் வரை வெண்ணெய் வியாபாரம் நடைபெற்ற நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் இத்தொழில் சமீபத்தில் தள்ளாடத் தொடங்கியுள்ளது. ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் இருந்த வெண்ணெய், நெய் ஆகியவற்றுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி-யை மத்திய அரசு விதித்துள்ளது. ஆனால், ஏற்கெனவே தமிழகத்தில் இத்தொழிலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. வரியே விதிக்கப்படாத நிலையில், ஜிஎஸ்டி-யில் 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெண்ணெய் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக, கிலோவுக்கு ரூ.10 லாபம் கிடைத்தால், ரூ.40 வரை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டியுள்ளதாகவும், வரி விதிப்பால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், விலை உயர்வால் மலிவான, தரம் குறைந்த வெண்ணெய், நெய் ஆகியவற்றை மக்கள் வாங்கத் தொடங்கி விட்டனர். இதனால், விற்பனை சரிந்துவிட்டது. வரி விதிப்புக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய பண்டிகை நாட்களில் விற்பனை சரிபாதியாக குறைந்து விட்டதாகவும் ஊத்துக்குளி வெண்ணெய், நெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறும்போது, “ஊத்துக்குளி வெண்ணெய், நெய் ஆகியவை பாரம்பரிய சுவை, மணம் மாறாமல் இருப்பதற்கு, முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதே காரணம். அரைவை இயந்திரங்கள் மூலமாக பாலில் இருந்து எடுக்கப்படும் கிரீம் உரிய பக்குவத்துக்காக இருப்பு வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகே அதிலிருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. கிரீம் எடுக்கப்பட்ட பாலில் இருந்து, தயிர், மோர் தயாரிக்கப்படுகிறது.
சுவைக்காகவும், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும் பொருட்களை சேர்ப்பதோ, பாலில் இருந்து பாக்டீரியாக்களை நீக்குவதோ கிடையாது. மேலும், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, அவிநாசி, குன்னத்தூர், பல்லகவுண்டம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில், கறவை மாடுகளுக்கு கொடுக்கப்படும் கொழுக்கட்டை புல், சோளத்தட்டு தீவனங்கள் ஆகியவையும், அடர்த்தியான பாலும், அதிலிருந்து தரமான கிரீமும் கிடைக்க முக்கியக் காரணங்களாகும்.
எருமைப் பால் அடர்த்தி அதிகமாகவும், பசும் பால் அடர்த்தி குறைவாகவும் இருக்கும். அதனால், இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய்யில் சுவை வேறுபாடு இருக்கும்.
ஊத்துக்குளியைப் பொருத்தவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை 40 வெண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தன. தற்போது 20 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. தற்போதைய தலைமுறையினர் விவசாயம், மாடு வளர்ப்பில் உரிய கவனம் செலுத்துவதில்லை. பராமரிக்க ஆட்களும் இல்லை என்பதாலும், கறவை மாடுகள் விற்கப்படுகின்றன.
மேலும், கூலி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில், லாபம் இல்லாத காரணத்தால், பலர் இத்தொழிலை விட்டு வேறு வேலைகளுக்குச் செல்லத் தொடங்கி விட்டனர். எனவே, பாரம்பரிய ஊத்துக்குளி வெண்ணெய்த் தொழில் அழியாமல் பாதுகாக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT