Published : 31 Mar 2019 06:53 AM
Last Updated : 31 Mar 2019 06:53 AM
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர்மக்களவைத் தொகுதியில் 42 வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தப்பட்டிருப்பது, இதன் பின்னணியில் பிரதான அரசியல் கட்சிகள் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 49 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், மாற்று வேட்பாளர்களின் வேட்புமனு, அகில இந்திய மக்கள் கழக வேட்பாளர் பி.சுப்ரமணியன் (53) மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளரின் மனு ஆகியவை பரிசீலனையில் நிராகரிக்கப்பட்டன.
சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், அமமுக வேட்பாளர் பிஎஸ்என் தங்கவேலுவுக்கு மாற்றாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த அவர் மனைவி டீ.பிரபா மட்டுமே மனுவை வாபஸ் பெற்றார். இதனால் கரூர் தொகுதியில் மொத்தம் 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
10 ஆண்டுகள் தொடர்ச்சியாக எம்.பி.யாக இருக்கும் மக்களவை துணைத் தலைவரான மு.தம்பிதுரை இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி போட்டியிடுகிறார்.
பொதுவாக, எதிர் தரப்பில் நிற்கும்வேட்பாளரின் வாக்குகளை சிதறச் செய்யும் நோக்கிலும், ஓட்டு போடும் வாக்காளர்களை குழப்பும் நோக்கிலும், அதே வேட்பாளரின் பெயர் கொண்ட ஒருவரை தேடிப் பிடித்து சுயேச்சையாக நிறுத்துவது அரசியல் கட்சிகளின் வழக்கம்.
வசதிகள், சலுகைகள்
இது மட்டுமின்றி, கட்சி வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகள், சலுகைகள் ஆகியவை சுயேச்சை வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும். வாக்குச்சாவடியில் அவர்களும் தங்களது முகவர்களை பணியாற்ற வைக்கலாம். பெயரளவுக்கு சுயேச்சைகளின் முகவர்கள் என்றாலும், மறைமுகமாக பிரதான கட்சிகளுக்கு ஆதரவாகவே அவர்கள் செயல்படுவார்கள். தவிர, கட்சி வேட்பாளர்களின் செலவுக் கணக்கை ‘சரிசெய்வதற்கும்’ சுயேச்சைகள் உதவுவார்கள். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டே, சுயேச்சைகளை பிரதான கட்சிகள் களமிறக்கும்.
கரூர் தொகுதியிலும் மு.தம்பிதுரை என்ற பெயரில் சுயேச்சையாக ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார், ஆனால், பரிசீலனையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
கடந்த முறை அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரையின் வெற்றிக்காக தீவிரமாகப் பணியாற்றிய செந்தில்பாலாஜி, தற்போது எதிரணியில் இருக்கிறார். இதனால், இரு தரப்பு ஆதரவிலும் சுயேச்சைகள் அதிக அளவில் களமிறக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உண்மையாகவே ஜனநாயகத்தில் ஆர்வம் கொண்டு, மக்கள் பணியில் சுயேச்சை வேட்பாளர்கள் ஈடுபட விரும்புவது வரவேற்கத்தக்கது. அதேநேரம், பிரதான கட்சிகளின் வெற்றிக்காகவும், வசதிகள், சலுகைகளுக்காகவும், வாக்காளர்களை குழப்பும் நோக்கத்திலும் சுயேச்சைகள் நிறுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். மேலும், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கேற்ப உரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யவேண்டும். அது ஆணையத்தின் கடமை. அதேநேரம், தேவையின்றிஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில் சுயேச்சைகள் களமிறக்கப்படுவது தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் பணிச்சுமையையும், நாட்டுக்கு வீண் செலவையும் ஏற்படுத்தும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT