Published : 22 Mar 2019 06:23 AM
Last Updated : 22 Mar 2019 06:23 AM
கழிவுநீர் சுத்திகரிப்பில் தமிழகத்துக்கு முன்மாதிரியாக விளங்கும் குளச்சல், குடிமனை சுத்திகரிப்பு முறையை மத்திய அரசு பாராட்டி சான்று அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு கோடிக்கணக்கில் செலவிடுகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், பல கிராமங்களில் நீண்டதூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. விவசாயத்துக்கும் போதிய நீர் இல்லாததால் மகசூல் பாதிக்கிறது.
இந்நிலையில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை இயற்கையாக சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் நவீனமுறை கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், குடிமனை கிராமங்களில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகர்ப்புறங்களில் கழிவுநீர் செல்வதற்கு பாதாள சாக்கடையும், மழைநீர் செல்வதற்கு மழைநீர் வடிகால் கால்வாயும் தனித்தனியாக கட்டி பராமரிக்கப்படுகின்றன. இதற்கு கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. நகரங்களுக்கு இதுபோன்ற கட்டமைப்புகள் அவசியம். கிராமங்களில் வீடுகள்தோறும் செப்டிக் டேங்கில் கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது. டேங்க் நிரம்பியதும், லாரி வரவழைத்து கழிவுநீரை அகற்றுவதற்கு ரூ.2,000 வரை செலவிடுகின்றனர். கிராமங்களில் திறந்தவெளியில் கழிவுநீர் செல்வதால் சுகாதாரச் சீர்கேடும், கொசுத் தொல்லையும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மற்றும் குடிமனை மீனவ கிராமங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நவீன முறையில் இயற்கையாக சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
சுனாமிக்குப் பிறகு
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது: 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியதில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அப்போது வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வீடுகள் கட்டிக் கொடுத்தன. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மற்றும் குடிமனையில் உள்ள மீனவர் காலனிகளில் ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சேவை நிறுவனங்கள், வீடுகளை மட்டும் கட்டித் தராமல், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை இயற்கையாக சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் நவீனமுறையை நடைமுறைப்படுத்தியது சிறப்பம்சம்.
வீடுகளில் கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உடனுக்குடன் வெளியேறும் வகையில் சிறிய செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சமையலறை, குளியலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் உடனுக்குடன் மூடப்பட்ட அமைப்பு கொண்ட கால்வாயில் போய்ச் சேருகிறது. விவசாயத்துக்கு ஏற்ற நீர்இக்கழிவுநீர் அறிவியல் முறைப்படி கழிவுநீர் குட்டையில் (Oxidation pond) போய்ச் சேருகிறது. அங்கு உருவாகும் பாசியும், பாக்டீரியாக்களும் இயற்கையாகவே கழிவுநீரை சுத்தப்படுத்துகின்றன. அந்தத் தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கு ஏற்றது என்று மத்திய அரசும் சான்று அளித்துள்ளது.
இரட்டைக் கால்வாயில் ஏதாவது ஒரு பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் சிமென்ட் ஸ்லாப்புகளை எளிதாக எடுத்து அங்குள்ள மக்களே அடைப்பைச் சரிசெய்கின்றனர். இக்கால்வாய்களை அமைப்பதற்கான செலவு, பாதாள சாக்கடை அமைக்க ஆகும் செலவில் 15 சதவீதம் மட்டுமே ஆகும். பாதாள சாக்கடை பராமரிப்புக்கு ரூ.100 செலவு ஆகிறது என்றால், மின்சாரம், இயந்திரம் என எதுவும் தேவைப்படாததால் இரட்டை கால்வாயைப் பராமரிப்புக்கு ரூ.8 மட்டுமே செலவாகும்.
தட்டுப்பாட்டை தடுக்கலாம்
1,000 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டையைச் சுற்றி அகழி கட்டி கழிவுநீர் இயற்கையாக சுத்திகரிக்கப்பட்டதைப் போல, கிராமங்களில் நவீன முறையில் கால்வாய் அமைத்து கழிவுநீரை இயற்கையாக சுத்திகரித்து அத்தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தி, தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க முடியும். இவ்வாறு சுந்தரமூர்த்தி கூறினார்.
குளச்சல், குடிமனையில் செயல்படும் இரட்டைக் கால்வாய்களைப் போல தமிழ்நாட்டில் உள்ள 16,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும் அமைத்தால் கழிவுநீரை இயற்கையாக சுத்திகரித்து தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT