Published : 08 Mar 2019 02:32 PM
Last Updated : 08 Mar 2019 02:32 PM
திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி எனவும், துரைமுருகன் கீழ்த்தரமான அரசியல் செய்வதாகவும் தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (வெள்ளிக்கிழமை) கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஓரிரு தினங்களில் தேமுதிக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். எந்த இழுபறியும் இல்லை. குழப்பமும் இல்லை.
தேமுதிக, திமுக - அதிமுக இருதரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளதே?
இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதாக உங்களிடம் யார் சொன்னது? நேற்று சுதீஷும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முருகேசனும், சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவும், தங்களுடைய கருத்துகளை விளக்கியுள்ளனர்.
ஆனால், திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக துரைமுருகன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளாரே?
திமுக பொருளாளருக்கு தேமுதிக பொருளாளராக நான் பதில் சொல்கிறேன். துரைமுருகன் ஒரு மூத்த அரசியல்வாதி, வயதில் மூத்தவர். ஒரு மரியாதை நிமித்தமாக வீட்டுக்குப் போனால் தமிழகத்தின் கலாச்சாரம் என்ன? எதிரியாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தால் உபசரிக்க வேண்டும். வந்தாரை வாழ வைப்பது தமிழ்நாடு என்று தான் தமிழ்நாட்டுக்குப் பெயர்.
பெரிய மனிதர் என்று நம்பிதானே தேமுதிகவினர் அவருடைய வீட்டுக்கு சென்றனர். அவர்களுக்கு காண்பிக்கும் நம்பிக்கை இதுதானா?தேமுதிக மாற்றிப் பேசுவதாக துரைமுருகன் சொல்கிறார். துரைமுருகன் திமுக குறித்துப் பேசியதை சுதீஷ் மறைமுகமாக ஏற்கெனவே சொல்லியுள்ளார். இதற்கு முதலில் துரைமுருகன் விளக்கம் சொல்லட்டும். தனிப்பட்ட முறையில் தான் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதை அரசியல் ரீதியாக தேமுதிகவை பழிவாங்க திமுக சூழ்ச்சியாக கையாண்டுள்ளனர். திமுக தில்லுமுல்லு கட்சி என்று எப்போதும் உரக்க சொல்லுவேன். வந்தவர்களை இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா?. இது அரசியல் சூழ்ச்சி. இதைவிட அநாகரிகமானது வேறு எங்காவது நடக்குமா? விஜயகாந்தும் நானும் அமெரிக்காவில் இருந்தபோதே தேர்தல் குழு அமைத்தாகி விட்டது. கூட்டணி குறித்து அப்போதிலிருந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஸ்டாலின் வீட்டுக்கு வந்து விஜயகாந்தை பார்த்தார். நாங்கள் நினைத்திருந்தால் அவரை தடுத்திருக்க முடியாதா? கருணாநிதி உடல்நிலை சரியில்லாதபோது அவரைக் காண முதலில் அனுமதி கேட்டது விஜயகாந்த் . கடைசி வரைக்கும் ஸ்டாலின் அனுமதி தரவில்லை. ஆனால், ரஜினிகாந்த் எங்கள் வீட்டுக்கு வந்த உடனேயே சுதீசுக்கு அழைப்பு வருகிறது. விஜயகாந்தை ஸ்டாலின் உடனேயே பார்க்க வேண்டும் என கூறினர். நாங்கள் பெரிய மனதுடன் அவரை வரச் சொன்னோம். எங்களுக்கு திருமணம் செய்து வைத்தவர் கருணாநிதி. அந்த தனிப்பட்ட முறையில் அந்த குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல நட்பு உள்ளது. அரசியல் என்று வரும்போது தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்துடன் திமுக கையாள்கிறது.
ஸ்டாலினை எங்கள் வீட்டில் நன்றாக கவனித்தோம். உடல்நிலை குறித்து விசாரிக்க வந்ததாக ஸ்டாலின் சொன்னார். இரு தலைவர்கள் பேசும்போது அரசியல் பேசுவது யதார்த்தம் என்று தான் நான் சொன்னேன். கூட்டணி குறித்து பேசினார்கள் என்று நான் சொன்னேனா?
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை என்ன?
துரைமுருகன் பேசியது முற்றிலும் உளறல். முதலில் தேமுதிகவை சேர்ந்த இரண்டு பேரும் யார் என்றே தெரியாது என்றார். யார் என்றே தெரியாத ஆட்களை வீட்டுக்குள் விடுவாரா துரைமுருகன்? அவர் ஒரு எம்எல்ஏ. அமைச்சராக இருந்தவர். இதுவரை நான் அவரை பார்த்ததில்லை. எங்கள் தொகுதிதான். நான் அந்த தொகுதியில் தான் படித்தேன். வேலூரில் பிறந்தவர் இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் செய்வாரா என்பது வெட்கக்கேடு.
தொகுதி பங்கீடு முடித்து மாநாட்டுக்குக் கிளம்பிய கட்சியுடன் எந்த கட்சியாவது முட்டாள்தனமாக கூட்டணி குறித்து பேசுமா?
ஸ்டாலின் தூங்குகிறார் என துரைமுருகன் சொல்கிறார். அது எவ்வளவு பெரிய அவச்சொல். ஸ்டாலினை துரைமுருகன் கேவலப்படுத்துகிறார். தூக்கத்தில் பேசினாரா என தெரியவில்லை. வயது மூப்பினால் அப்படி பேசினாரா?அவர் சொல்வது போன்று கூட்டணிக் குறித்து பேசினாலே கூட, மரியாதையாக சொல்லி அனுப்புவது தான் அழகு. திமுக என்பது திருட்டுக் கட்சி என எம்ஜிஆர் சொல்லியிருக்கிரார்.
தேமுதிகவுக்கு கொள்கை இல்லை என விமர்சனம் உள்ளதே?
தேமுதிக மீது மக்களுக்கு 100% நம்பிக்கை உள்ளது. தேர்தல் நேரத்தில் எல்லா கட்சிகளும் கூட்டணிக்காக பேசும். இதை வைத்து கொள்கை என்ன என கேட்கக் கூடாது. முதலில் தனித்து போட்டியிட்ட கட்சி தேமுதிக. 37 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து என்ன பயன்? அதிமுக யாருடனும் முந்தைய தேர்தலில் கூட்டணி இல்லாததால், தமிழக நலன்களை கேட்டுப் பெற முடியவில்லை.
அதிமுகவை முன்பு விமர்சனம் செய்ததிலிருந்து இப்போது மாறுபடுகிறீர்களா?
ஜெயலலிதா விஜயகாந்தை இதைவிட கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜெயலலிதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் குரல் எழுப்பியவர் விஜயகாந்த். கிழியாத சட்டையை கிழித்து போட்டோ எடுப்பவர் விஜயகாந்த் அல்ல.கடந்த தேர்தலைப் போன்று பாஜக கூட்டணி, அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக இணைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். அதுதான் வருத்தம்.இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT