Last Updated : 11 Mar, 2019 09:54 AM

 

Published : 11 Mar 2019 09:54 AM
Last Updated : 11 Mar 2019 09:54 AM

திருச்சிக்காக மல்லுக்கட்டும் திருநாவுக்கரசர்

திமுக கூட்டணியில்,  திருச்சி தொகுதியைப் பெற காங்கிரஸ் - மதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இந்த சூழலில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை எம்.பி.

பதவி வழங்குவதாக உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, மதிமுக திருச்சியில் போட்டியிடவில்லை என்பது உறுதியானது. எனினும், இத்தொகுதியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியுடன் நேற்று முன்தினம் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு, திருச்சி தொகுதியில் திமுக மீண்டும் நேரடியாக களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனால், இத்தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

மேலும், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், நேற்று முன்தினமே சென்னைக்குச் சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து தங்களுக்கு 'சீட்' பெறும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நேற்று அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினர்.

இந்த சூழலில், திருச்சி தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என திமுக தொகுதி ஒதுக்கீட்டு குழுவினரிடம் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், ஆரம்பத்திலேயே தனக்காக திருச்சி தொகுதியை குறிவைத்து பணியாற்றினார். ஆனால், இங்கு வைகோ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானதால், அவர் ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்திருந்தார். தற்போது அந்த தொகுதி  திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

எனவே, திருநாவுக்கரசர் எப்படியாவது திருச்சி தொகுதியைப் பெற்று, போட்டியிட வேண்டும் என நினைக்கிறார். இதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்து திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருச்சியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். தற்போதுள்ள சூழலில், இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்கு பிறகே முடிவு தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x