Published : 09 Mar 2019 07:42 PM
Last Updated : 09 Mar 2019 07:42 PM
திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் இழுபறியாக உள்ளன. அவைகளை பேசித்தீர்க்க இன்னும் சற்று நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன்தான் முதன் முதலில் கூட்டணியை இறுதிப்படுத்தியது. இதில் புதுச்சேரி தொகுதி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதிகளை ஒதுக்கியது.
இதில் காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் என அறியப்பட்ட தொகுதிகள் தவிர திமுக தொகுதிகள் சிலவற்றையும் கேட்பதாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளை கேட்க இருப்பதாலும் குழப்பம் நீடிக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு என உள்ள தொகுதிகள் கன்னியாகுமரி, ஆரணி, சேலம், சிவகங்கை ஆகிய தொகுதிகளை கூறுகிறார்கள். மேற்கண்ட தொகுதிகள் கிட்டத்தட்ட இறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் மீதமுள்ள 5 தொகுதிகளில் காங்கிரஸ் கேட்பது தென் சென்னை, திருச்சி, ஈரோடு, விருதுநகர், தென்காசி ஆகிய தொகுதிகள் ஆகும். இந்த தொகுதிகளில் சென்னையில் ஒரு தொகுதியில் காங்கிரஸுக்கு எப்போதும் இடம் ஒதுக்கப்படுவது வாடிக்கை. அதுவும் தென் சென்னை அதிகம் இருக்கும்.
தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் நிற்க விருப்பமனு அளித்துள்ளார். அதனால் தென் சென்னையிலும் திமுக நிற்க விரும்புகிறது. ஆனால் பேச்சுவார்த்தை முடிவில் காங்கிரஸ் தொகுதியை கேட்டுப்பெறும் என தெரிவிக்கிறார்கள்.
அடுத்து ஈரோடு தொகுதியை காங்கிரஸ் கேட்கிறது. இந்தத்தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்பது வழக்கம். ஆனால் ஒரே தொகுதியை மதிமுகவுக்கு கொடுத்துள்ளதால் ஈரோடு தொகுதியை மதிமுக கேட்க அதை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதால் அதையும் ஒதுக்க வாய்ப்பில்லை.
இதேப்போன்று தென்காசி தொகுதியை காங்கிரஸ் கேட்பதாக கூறப்படுகிறது. இந்தத்தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்க உள்ளதால் அதையும் தர வாய்ப்பில்லை என்கின்றனர். இதேப்போன்று விருதுநகரையும் காங்கிரஸ் கேட்டிருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் விருதுநகரில் இம்முறை திமுக போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும், அங்கு அதற்கான ஆயத்தவேலைகள் நடந்துள்ளதால் தர வாய்ப்பில்லை என திமுக வட்டார தகவல் தெரிவிக்கிறது.விருதுநகரில் மாணிக்தாகூர் நிற்க உள்ளதால் அதை விட்டுக்கொடுக்க காங்கிரஸும் தயாராக இல்லை என்கின்றனர்.
அடுத்து திருச்சி தொகுதியை காங்கிரஸ் கேட்டுள்ளது. இங்கு முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிற்க உத்தேசித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பு தகவல் உண்டு. ஆனால் இங்கும் திமுக நிற்கவே விரும்புவதால் இந்த தொகுதியும் இழுபறியில் உள்ளது.
ஆகவே காலையில் நடந்த பேச்சுவார்த்தை முழுமை பெறவில்லை. ஆகையால் ஆலோசித்துவிட்டு மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை துவக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முதலில் இரண்டு இடது சாரிகட்சிகளை முடித்துவிடுவதற்காக பேச்சுவார்த்தை நடக்கிறது. பின்னர் காங்கிரஸ் தரப்பு நடக்கும்.
இதில் தென் சென்னையும் ஒதுக்கப்பட்டால் 5 தொகுதிகள் பிரச்சினை இல்லை. மீதமுள்ள 4 தொகுதிகள் எவை என்பதே தற்போதுள்ள பிரச்சினை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT