Published : 31 Mar 2019 06:51 AM
Last Updated : 31 Mar 2019 06:51 AM
கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக கிணற்று நீரில் யோகாசனம் செய்தபடி இரண்டரை மணி நேரம் மிதந்து வியக்க வைத்தார்.
கோவை அருகே உள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் யுஎம்டிராஜா (48). தங்க நகைத் தொழிலாளி. தங்கத்தைக் கொண்டு நகைகளை மட்டுமின்றி, பல்வேறு நுண்ணிய பொருட்களையும் உருவாக்கி வருகிறார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
‘புதிய வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்து, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தி, பென்சிலில் மனித உருவம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
‘உங்கள் பொன்னான வாக்குகளை..’ என்பது பிரச்சாரம் செய்பவர்கள் பரவலாக பயன்படுத்தும் வாசகம். நம் ஒவ்வொருவரின் வாக்குகளும் உண்மையிலேயே ‘பொன்னான வாக்குகள்தான்’ என்பதைதெரிவிக்கும் விதமாக, 5 பிரதான கட்சிகளின் சின்னங்களை தங்கத்திலேயே உருவாக்கி, ரத்தினக் கற்களை பட்டன்கள்போல பதித்து, மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளார். ஜியாமெட்ரி பாக்ஸை வாக்குப்பதிவு இயந்திரம் போல மாற்றியுள்ளார்.
இதுகுறித்து யுஎம்டி ராஜா கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தாலிக்கு தங்கம் திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில், ஒரு பவுன் தங்கத்தில் ‘அம்மா’ என்ற வாசகம் அடங்கிய தாலியை வடிவமைத்தேன்.
100 யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், குண்டு பல்புக்குள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வரைந்தேன்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவப்படம் பொறித்த தங்க நாணயம் தயாரித்தேன். ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்தபோது, தீக்குச்சி நுனியில் 100 மி.கி. தங்கத்தில் ஜல்லிக்கட்டு காளை உருவத்தை உருவாக்கினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் தங்க நகைகள் மட்டுமல்லாது, யோகாசனம் செய்வதிலும் வல்லவர். அதிமுக தொண்டரான இவர். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டி சமீபத்தில் பத்மாசனம் செய்தபடி கிணற்று நீரில் இரண்டரை மணி நேரம் மிதந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT