Published : 04 Mar 2019 09:12 AM
Last Updated : 04 Mar 2019 09:12 AM
வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (32). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி அண்மையில் திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டு, குழந்தைகளுடன் பஸ்ஸில் வண்டலூர் திரும்பினார்.
பஸ்ஸிலிருந்து அவர் இறங்கும்போது தன்னுடைய கைப்பை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புதிய செல்போன், சுவாமி சிலை, நகை, பணம் ஆகியவை இருந்தன. உடனே ஆர்த்தியின் கணவர் பாலாஜி, பஸ்ஸை பின் தொடர்ந்து சென்றார். கோயம்பேடு பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய பாலாஜிக்கு கைப்பை கிடைக்கவில்லை.
இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய காவல் நிலையத்தில் பாலாஜி புகார் செய்தார். ஆனால் போலீஸார், வண்டலூர் பகுதியில் பையை தவறவிட்டதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி திருப்பி அனுப்பினர். பின், வண்டலூர் எல்லைக்கு உட்பட்ட ஓட்டேரி காவல் நிலையத்துக்கு அவர் சென்றார்.
ஆனால் அங்கிருந்த போலீஸார், "ஓட்டேரி காவல் நிலையம் காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உரிய தொழில்நுட்ப வசதி இல்லை. எனவே, பெருங்களத்தூரில் பையை தவறவிட்டதாக பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டுக்குள் புகார் வந்துவிடும். பின்னர் பையில் இருந்த செல்போன் ஐ.எம்.ஈ.ஐ. எண்ணை வைத்து கண்டுபிடித்துவிடலாம்" என பாலாஜியிடம் யோசனை தெரிவித்தனர். ஆனால், "பை தொலைந்த இடம் வேறு என்பதால், பீர்க்கன்காரணை போலீஸில் புகார் தெரிவித்தால் அது சிக்கலில் முடியும்" என பாலாஜியின் நண்பர்கள் கூறியதையடுத்து மீண்டும் அவர், ஓட்டேரி காவல் நிலையத்துக்கே புகார் அளிக்கச் சென்றார்.
ஆனால், அங்கிருந்த எஸ்ஐ ஒருவர், புகாரை வாங்க மறுத்துவிட்டார். பாலாஜி எவ்வளவோ மன்றாடியும், எஸ்ஐ புகாரை பெறவில்லை. பாலாஜி முயற்சியை தளர விடாமல் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு மீண்டும் மீண்டும் சென்றார். அப்போது, பிரதாப் சந்திரன் என்ற எஸ்ஐ பாலாஜியிடம் விவரம் கேட்க, அவரும் நடந்தவற்றை எடுத்துக் கூறினார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்ஐ, செல்போன் ஐ.எம்.ஈ.ஐ. எண்ணைக் கொண்டு ஆய்வு செய்தார். அதில் மாயமான செல்போனை, விழுப்புரம் மாவட்டம், மேல்சிறுவாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, பெரியசாமி என்பவர் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த எஸ்ஐ, செல்போன் பயன்படுத்துபவரின் முகவரியை கண்டுபிடித்து, பாலாஜியிடம் கொடுத்தார். மேலும், போலீஸ் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகும். எனவே, அந்த முகவரிக்குச் சென்று, சம்பந்தப்பட்டவரிடம் பேசி பொருளை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
அதன்படி பாலாஜி, சம்பந்தப்பட்ட முகவரிக்குச் சென்று விசாரித்ததில், ஞாபக மறதியாக ஆர்த்தியின் பையை எடுத்துவந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அந்தப் பொருட்கள் கொண்ட பையை பாலாஜியிடம் ஒப்படைத்தனர். ஆனால், பணத்தை செலவு செய்துவிட்டதாக கூறியுள்ளனர். உழைத்து சம்பாதித்த பொருட்கள் மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த பாலாஜி, ஓட்டேரி காவல் நிலையம் சென்றார். அங்கு பணியில் இருந்த அனைத்து போலீஸாருக்கும் இனிப்பு வழங்கினார். அப்போது, பாலாஜியிடம் முன்பு புகாரை வாங்க மறுத்த எஸ்ஐ அங்கு பணியில் இருந்தார். அவர் பாலாஜியிடம் இனிப்பை வாங்க மறுத்துவிட்டார். பாலாஜி வற்புறுத்தியதும் அந்த எஸ்ஐ இனிப்பை பெற்றுக் கொண்டார்.
தாம் புகாரை பெற மறுத்தாலும், பெட்டிக்கடைக்காரர் ஒருவர் தொடர்ந்து முயன்று பிரச்சினைக்கு தீர்வு கண்டது மட்டுமின்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கிய சம்பவத்தால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த எஸ்ஐ குனிந்த தலை நிமிராமல் பணியை தொடர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT