Published : 22 Mar 2019 09:27 AM
Last Updated : 22 Mar 2019 09:27 AM
தனித்துவமான ருசி கொண்ட மாம்பழங்களுக்குப் புகழ்பெற்ற சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு சீசன் தொடங்கியுள்ளது. இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை உள்ளிட்ட ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
சேலம் மாவட்டத்தில் விளையும் மாங்கனி இந்திய அளவில் புகழ்பெற்றது. இதனால் சேலத்துக்கு மாங்கனி மாவட்டம் என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் சேலம், அயோத்தியாப்பட்டணம், மேட்டூர், சங்கிரி உள்ளிட்ட வட்டாரங்களில் விளையும் மாம்பழம் தரத்திலும், சுவையிலும் தனிச்சிறப்பு கொண்டது.
மா பயிரிடப்படும் சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஓரளவு பெய்ததால், மா பூக்கள் அதிகளவு பூத்தது. இவை தற்போது மாங்காய்களாக முதிர்ந்து வருகின்றன. கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், சேலம் மாவட்டத்தில் மாம்பழங்கள் அறுவடை தொடங்கப்பட்டு, சந்தைக்கு விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
சேலத்தில் உள்ள மாம்பழ விற்பனை மண்டிகளுக்கு இமாம்பசந்த், பெங்களூரா உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுகுறித்து மாம்பழ மொத்த வியாபாரி எம்.சந்திரசேகரன் கூறியதாவது:மண்ணில் கால்சியம் சத்து அதிகமாக உள்ள இடங்களில் விளையும் மாம்பழங்கள் மிகுந்த சுவையாகவும், நீண்ட நாட்கள் கெடாமலும் தனித்துவத்துடன் இருக்கும். சேலம் மாவட்டத்தில் சேலம் வட்டாரத்தில் செட்டிச்சாவடி, அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வரகம்பாடி, மேட்டூர் வட்டாரத்தில் வீரக்கல், சோரகை, மேட்டூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் மண்ணில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளன.
எனவே, சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்குத் தனிச்சுவை உண்டு. குறிப்பாக, இந்த மாம்பழங்கள் பழுத்த பின்னரும் 15 நாட்கள் வரை கெட்டியாக இருக்கும். சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். இதனால், சேலத்தில் அறுவடை செய்யப்படும் மாங்காய்களை வட மாநிலங்களில் விரும்பி வாங்கிச் செல்வர். இங்கிருந்து லாரிகளில் நீண்ட தூரம் அனுப்பினாலும் மாம்பழங்கள் சேதமடையாமல் இருக்கும்.
வழக்கமாக, சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் மாம்பழ சீசன் தொடங்கிவிடும். இந்த ஆண்டு கோடை மழை தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், சற்று தாமதமாக மாம்பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளது. சீசன் தொடக்கம் என்பதால், நாளொன்றுக்கு 2 டன் மாம்பழம் வரத்து இருக்கிறது. ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் நாளொன்றுக்கு 10 டன் வரை மாம்பழம் வரத்து இருக்கும்.
இப்போது வரும் இமாம்பசந்த் 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை, பெங்களூரா ரூ.90 முதல் ரூ.120 வரை, நடுசாலை ரூ.70 முதல் ரூ.90 வரை, அல்போன்சா ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விற்பனையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT