Published : 15 Mar 2019 10:17 AM
Last Updated : 15 Mar 2019 10:17 AM
நீலகிரி மாவட்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் தேனாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் அவர். தேசிய அளவில் புதுமையான கற்பித்தல் முறை போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். மத்திய மனித வள அமைச்சகம் நடத்திய போட்டியில் கலந்து கொள்ளத் தமிழகத்தில் இருந்து தேர்வான 6 பேரில் ஆசிரியர் தர்மராஜும் ஒருவர். தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதுமையான முறையில் கற்பித்ததற்கான பரிசு அது. தொழில்நுட்பம் வழியாக மட்டுமே பயணிக்காமல், பழங்குடி இன மக்களின் கல்வி மேம்பாட்டுக் காகவும் பாடுபடும் இவர், தேனாடு பள்ளியின் `ஹைடெக் ஆசானாக` வலம் வருகிறார். கணினி குறித்த விவரமே தெரியாத நிலையிலும், தனது முயற்சியால் மாணவர்களுக்கு கணினியைஅறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள குக்கிராமமான தேனாடு என்னும் ஊரில் உள்ள ஆரம்பப் பள்ளி, 4 மாணவர்கள் மட்டும் பயின்றதால், மூடப்படும் நிலையில் இருந்தது. அங்கிருந்த ஆசிரியர், 4 மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, வேறு பள்ளிக்கு மாறச் சொல்லிவிட்டார்.
இந்நிலையில், அப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஆசிரியர் தர்மராஜ், மாணவர் சேர்க்கையில் கவனம் செலுத்தினர். இதற்காக, பள்ளியின் சுவர்களில் விலங்குகள், தாவரங்கள், நிலங்களின் வேறுபாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை ஓவியங்களாக வரைந்தார். அந்த நான்கு மாணவர்களையும் அழைத்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மெல்ல மெல்ல அப்பள்ளியின் மீது மக்களுக்கு ஈடுபாடு வர ஆரம்பித்தது. மாணவர்கள் சேரத் தொடங்கி, கல்வியும் கற்கத் தொடங்கினர்.
கணினிமயமாகிய பள்ளி
ஆசிரியர் தர்மராஜுக்கு 2005-ம் ஆண்டு வரை, கணினி என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இருந்துள்ளது. பாடப் புத்தகங்களை வைத்து மட்டுமே கற்பித்துள்ளார். 2006-ல் சென்னையில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் கணினி பயிற்சி எடுத்தவர், அங்குதான் முதன்முதலில் மடிக்கணினியையே பார்த்திருக்கிறார்.
“அப்போதுதான் முதன்முதலாக அந்தக் கறுப்பு நிறக் கணினியை பார்த்தேன். அபூர்வப் பொருளாகக் காட்சியளித்தது அது. அங்கிருந்த அதிகாரியிடம், `இதைத் தொட்டுப் பார்க்கலாமா?’ என்று கேட்டேன். உடனே அவர், அதை இயக்கி, அடிப்படைச் செயல்பாடுகளைக் கற்றுக் கொடுத்தார்” என்றார் ஆசிரியர் தர்மராஜ்.
சென்னையில் இருந்து கோவை வந்திறங்கிய இவர், நண்பர்கள் சிலரின் உதவியுடன் மடிக்கணினி ஒன்றை வாங்கிய பின்னரே, வீடு திரும்பியுள்ளார். மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகூட இல்லாத தேனாடு பள்ளிக்கு, மடிக்கணினியை எடுத்துச் சென்றார். காலையில் வீட்டிலேயே சார்ஜ் செய்து பள்ளிக்கு எடுத்து வந்து, மதியம் வரை தனக்குத் தெரிந்த அடிப்படை விஷயங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
மதிய உணவு இடைவேளைகளில், அருகிலிருக்கும் வீடுகளில் சார்ஜ் செய்து, திரும்பவும் கற்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தேசிய அளவில் அங்கீகாரம்
2009-ல் மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் நடத்திய ஓவியப் போட்டியில், மாணவர்களைக் கலந்துகொள்ளவைத்தார். எரிசக்தியின் பயன்பாடுகள் என்ன? அவற்றை எப்படி சேமிப்பது? இயற்கை வளங்களின் முக்கியத்துவம் உள்ளிட்டவைகளைத் தன் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, போட்டிக்காக மாணவர்களைத் தயார் செய்தார்.
2009-ல் இருந்து 12 வருடங்களாக தேசிய அளவில் நடந்து வரும் இந்தப் போட்டியில், ஆயிரக்கணக்கான மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளுடன் போட்டிபோட்டு, 7 முறை முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறது தேனாடு அரசுப் பள்ளி.
பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலோடு, செயல்வழிக் கற்றல் முறையைக் கணிணிவழிப்படுத்தி இருக்கிறார் இவர். ஆறாம் வகுப்பில் தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலான பாட வகைகளுக்கு, அது தொடர்பான இடங்களுக்குச் சென்று படம்பிடித்து, காணொளியாக்கி, அதன் பின்னணியில் தமிழில் குரல் விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார்.
உதாரணமாக, காடு மற்றும் விலங்கு வகைகள் என்னும் தலைப்பில் இருக்கும் காணொளியில், இந்தியா முழுக்க உள்ள காடுகள், அதன் வகைகள், இருப்பிடங்கள், பயன்பாடுகள், மழைப்பொழிவுகள், வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு உள்ளிட்ட தகவல்களை, நேரடியாகச் சென்று படம்பிடித்து, தொகுப்பாக்கி, பின்னணி இசை சேர்த்து, உள்ளடக்கத்துக்கான குரல் கொடுத்திருக்கிறார் இவர்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதலுக்குப் பின்னரான வெளியீட்டுக்காக காணொளித் தொகுப்புகள் காத்து நிற்கின்றன.
ஆச்சரியமூட்டும் ஆசிரியரை சந்தித்தோம். “என்னுடைய சொந்த ஊர் கோத்தகிரி. படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்டம் முதுகுளம் என்ற ஊரில் அரசு நடுநிலைப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில், கிராமத்திலிருக்கும் பள்ளியில் சேர்ந்துவிட்டோமே என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால், அங்கு படித்த மாணவர்களின் ஆர்வம், என் கருத்தை தூக்கியெறிந்தது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் புதுமையான முறையில் கற்பிக்க எண்ணினேன். தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வாங்கப்பட்டன. மாணவர்கள் தினமும் படித்துவிட்டு, காலை இறை வணக்கத்தின்போது அதை வாசிக்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டுநடப்புகளைத் தெரிந்து கொண்டதுடன், அவர்களது மொழியறிவும் வளர்ந்தது.
ஓவிய வகுப்புகளின்போது, பத்திரிகைகளில் வரும் கேலிச் சித்திரங்களை மாணவர்கள் கரும்பலகைகளில் வரைய வேண்டும்.
வேதியியல் பாடத்தில் தனிம அட்டவணைகளில் இருக்கும் தனிமங்களின் அணு எண், நிறை எண், அணு எடை ஆகியவற்றை, எண் வரிசை அடிப்படையில் கற்றுக்கொடுத்தேன்.
ஆர்வமாய்க் கற்றவர்கள், நாட்கள் செல்லச் செல்ல, அப்படியே அதை ஒப்பிக்கத் தொடங்கினர்.
புல் வெளியில் இந்தியா!
அதுபோக, சமூக அறிவியலையும் ஆர்வத்துடன் படிக்க, செயல்முறைகளோடு கற்பிக்கலாம் என்று தோன்றியது. இந்திய வரைபடத்தைக் கருப்பொருளாக எடுத்து, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வரையும் எண்ணம் வந்தது. ஊருக்குப் போகும்போது, உதகையில் இருந்து புல் கொண்டு வந்தேன். அதை மைதானத்தில் வளர்க்கத் தொடங்கினோம். புற்கள் புல்வெளியாய் மாறத் தொடங்கியதும், இந்திய எல்லைகளுக்கு ஏற்றவாறு, புல்வெளியைச் சீர்ப்படுத்தினோம்.
இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகிய நீர்நிலைப் பகுதிகளை ஏற்படுத்த, சுமார் நான்கரை அடிக்குப் பள்ளம் தோண்டினோம். தண்ணீர் வற்றாதவாறு அதில் கான்கிரீட் தளம் போட்டு, தண்ணீர் பாய்ச்சினோம். மேலே இமயமலை, பர்வத மலைகளுக்குக்
கற்கள் இட்டு நிரப்பினோம். வெளியிலிருந்து யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், ஆசிரியர்களும் மாணவர்களுமே இதை செய்து முடித்தோம். மாநில எல்லைகள், தலைநகரங்கள், தொழில்பேட்டைகள் ஆகியவற்றையும் அதில் குறித்தோம். மாணவர்கள் சலிக்காமல் இந்தியா குறித்த கேள்வி- பதில்களைக் கற்றுக்கொண்டே இருந்தனர்.
2002- 2003-ல் தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்கள் பள்ளியிலே முதல்முறையாக அதை ஏற்படுத்தினோம்” என்றார் பெருமிதத்துடன்.
கல்வியைத் தாண்டி, மாணவர்களை வெவ்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபடச் செய்கிறார் தர்மராஜ். இவரது முயற்சியால் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டனர். சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், மேடைப்பேச்சுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இங்கு 8-ம் வகுப்பு முடித்து, உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள மாணவர்கள் இவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
மாணவர்களுக்கு இயற்கை மீதான அக்கறையை வளர்த்தெடுக்க, மொட்டை மாடித் தோட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். தொட்டிகளில் செடிகள் வைக்காமல், மண் கொண்டுபோய், பாத்தி கட்டி, உதகையில் இருந்து பூச்செடிகள் எடுத்து வந்து, மாடியில் நட்டனர். மாணவர்களின் முறையான பராமரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறை நாட்களிலும், பள்ளியைப் பராமரிப்பதிலேயே நேரத்தை செலவிடுகிறார் தர்மராஜ். பள்ளி சுவர்களுக்கு வெள்ளை
யடிப்பது, வர்ணம் பூசுவது என இவரது செயல்களால், விடுமுறைக்கு பின்னர் புதிய பொலிவாய் காட்சியளிக்கிறது பள்ளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT