Published : 28 Mar 2019 10:34 AM
Last Updated : 28 Mar 2019 10:34 AM
தென் மாவட்டங்களில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மக்களவை தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணியில் களமிறக்கப்பட்டுள்ள 8 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் ஆவர். இவர்கள் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் மூலம் இதை அறிந்துகொள்ள முடிகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி தனது வேட்பு மனுவில் சொத்துமதிப்பு ரூ.30.08 கோடி என்றும் ரூ.1.92 கோடி கடன் இருப்பதாகவும், தனது கணவர் அரவிந்தன் பெயரில் ரூ.13.83 லட்சம் சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சவுந்திரராஜன் தனது பெயரில் ரூ.2 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும், ரூ.1.87 லட்சம் கடன் இருப்பதாகவும், கணவர் சவுந்திரராஜன் பெயரில் ரூ.8.90 கோடி சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி
தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமார் தனக்கு ரூ.4.24 கோடி சொத்து இருப்பதாகவும், ரூ.27.16 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனக்கு ரூ.25.95 கோடி சொத்துகளும், ரூ.1.62 கோடி கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின்போது தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.17.75 கோடி என்றும், ரூ.1.59 கோடி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த 3 ஆண்டுகளில் இவரது சொத்து மதிப்பு ரூ.7 கோடி உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஹெச்.வசந்தகுமார் தனக்கு ரூ.417.49 கோடி மதிப்புள்ள சொத்துகளும், ரூ.154.75 கோடி கடனும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதி உறுப்பினராக இருக்கும் இவர், கடந்த 2016 சட்டப் பேரவை தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ.337 கோடி என்றும், கடன் ரூ.121.99 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தார். கடந்த 3 ஆண்டுகளில் இவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
இத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தனக்கு ரூ.7.49 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டபோது இவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.4.19 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் இவரது சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் தனது பெயரிலும், மனைவி, பிள்ளைகள் பெயரிலும் ரூ.10.34 கோடி சொத்து உள்ளதாகவும், ரூ.2.85 கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் ரூ.23.27 கோடி சொத்துகள் இருப்பதாகவும், ரூ.4.61 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் 8 பேரின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.520 கோடியை தாண்டுகிறது. இவர்களில் குறைந்த சொத்து மதிப்புள்ள கோடீஸ்வர வேட்பாளராக தனுஷ்குமாரும், அதிக சொத்து மதிப்புள்ள கோடீஸ்வர வேட்பாளராக வசந்தகுமாரும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT