Published : 28 Mar 2019 10:04 AM
Last Updated : 28 Mar 2019 10:04 AM

மீனு வாங்கலியோ மீனு

மீன் சாப்பிடுங்க’... இப்போதெல்லாம் நிறைய  டாக்டர்கள், தங்கள் பேஷண்டுகளுக்குச் சொல்வது இதுதான். குறிப்பாக,  இதய நோய், அதிக எடை, அதிக கொழுப்பு கொண்டவர்களுக்குப் பரிந்துரைப்பது மீன் தான். நோய் எதிர்ப்பு சக்தி,  உடல் வலிமை, புத்திக்கூர்மை என்று மனிதரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில்  மீனின் பங்கு அதிகம் என்றே கூறலாம். அசைவப் பிரியர்களின் முதல் சாய்ஸும் மீன் தான். அதனாலேயே, மீன் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. குறிப்பாக, கோவையில் வகை வகையான மீன் விற்பனை உச்சத்தைத் தொட்டிருக்கிறது எனலாம்.

கடல், ஆறு, ஏரி, குளம், கிணறு என அத்தனை நீர்நிலைகளிலும் கிடைக்கும் மீனின் ருசி இணையற்றது. பழைய சோறு இருந்தால்கூட, ஒரு துண்டு மீனைத் தொட்டுக்கொண்டு ருசியாக சாப்பிடலாம். ஆதி காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பிரபலமான மீனை நம்பி கோடிக்கணக்கானோர் வாழ்கின்றனர். குறிப்பாக, அமுதசுரபிபோல மீன்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது கடல். கடல் வளம் என்பதே, அதில் உள்ள மீன் வகைகளைத் தான் குறிப்பிடுகிறது. இறந்த பிறகும் காயவைத்து, உப்பு சேர்த்து, கருவாடாக சாப்பிடுகின்றனர். ஏறத்தாழ 40,000 ஆண்டுகளுக்கு முன்பே, கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தியான் யுவான் வம்சத்தினர் மீன் உணவு சாப்பிட்டதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், மீன் விற்பனையில் ஈடுபடுவோரின் பிரச்சினைகள், தேவைகளும் அதிகமுள்ளன. கோவையைப் பொருத்தவரை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள மொத்த மார்க்கெட்டும், உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மீன் அங்காடியும் முக்கியமானவை. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து மொத்தமாகவும், சில்லறை விற்பனை அடிப்படையிலும் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.பேரூர் பைபாஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மீன் அங்காடிக்குச் சென்று, மீன் விற்பனை தொடர்பான தகவல்களைக் கூறுங்கள் என்று கேட்டபோது, அங்கிருந்தோர் கை காட்டியது ஒருவரைத்தான். அவர், கோவை மீன் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலர் எம்.பி.சுபையர் (49).  அவரை சந்தித்தோம்.

“அப்பா எம்.கே.பாப்பு. பாலக்காடு பூர்வீகம். பிழைக்க வழி தேடி, அவரோட சின்ன வயசுலேயே கோயம்புத்தூருக்கு வந்துட்டார். அப்ப டவுன்ஹால் கார்ப்பரேஷன் பில்டிங் பின்னாடி மீன் மார்க்கெட் இருந்தது. நாங்க 5 குழந்தைங்க. சிஎஸ்ஐ பள்ளிக்கூடத்துல 10-வது முடிச்சிட்டு, அப்பாகூட மீன் வியாபாரத்துக்குப் போனேன்.

1980-கள்ல கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில், இப்ப மாநகராட்சி அலுவலகம் இருக்கற பகுதிக்குப் பின்னாலதான் பழைய மார்க்கெட் இருந்தது. மீன், பழம், இரும்பு எல்லாம் ஒரே இடத்துல இருந்தது. ஒரு கட்டத்துல நெருக்கடி அதிகமானதால, மார்க்கெட்டுகளை வெவ்வேறு இடங்களுக்கு மாத்தினாங்க. இரும்பு மார்க்கெட் லாரி மார்க்கெட் பகுதிக்குப் போனது.  உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல மீன் மார்க்கெட்டும், பழ மார்க்கெட்டும் மாத்தினாங்க.

அப்பவெல்லாம் மீன் வியாபாரம் பெரிசா இருக்காது. கொஞ்சம் கொஞ்சமா விற்பனை அதிகமாச்சு. பேரூர் பைபாஸ் சாலையில வரிசையா மீன் வண்டிக் கடைங்க நின்னுக்கிட்டிருக்கும். ஒரு கட்டத்துல நெருக்கடி அதிகமாச்சு. அதனால, லாரிப்பட்டைக்கு மொத்த வியாபாரத்தை  மாத்தினாங்க. 2011-12-ல சில்லறை வியாபாரத்துக்காக உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையில் மாநகராட்சி சார்பாக கடைகள் கட்டினாங்க. லாரிப்பேட்டையில இருந்து, பேரூர் பைபாஸ் சாலை கடைக்கு மாத்தினப்ப, நிறைய பிரச்சினைங்க இருந்தது. ஒரு வழியாக மீன் வியாபாரிங்க இங்க வந்தாங்க. இங்க 64 கடைகள் இருக்கு. மீன் கடைகள் போக, இறைச்சி, பழங்கள் விக்கவும் கடை ஒதுக்கியிருக்காங்க.

 ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விசாகப்பட்டனம், மங்களூரு, கொச்சின், கோழிக்கோடுனு பல இடங்கள்ல இருந்தும் கோயம்புத்தூருக்கு மீன்கள் வருது. மத்தி, அயிரை, வஞ்சிரம், விலா, சங்கரா, நெய் மீன், கொடுவா, கருப்பு வாவல், நண்டு, இறால், மாந்தல்னு வகைவகையா மீன்கள் வருது. அதேபோல, அணைகள்ல இருந்து கட்லா, ரோகு, நெய்மீன், விரால், ஜிலேபி, கெண்டைனு பல ரகங்கள் வருது. இங்க இருந்து மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, உதகைனு பல இடங்களுக்கும் மீன் அனுப்பறாங்க. 300-க்கும் மேல சில்லறை வியாபாரிங்களும், 1,000 சைக்கிள்காரங்களும் மீன் வாங்கிட்டுப் போறாங்க. நேரடியாவும், மறைமுகமாகவும் 10,000 குடும்பங்கள் மீன் வியாபாரத்தை நம்பி இருக்கு.

லாரிப்பேட்டை மீன் மார்க்கெட்டைப் பொருத்தவரை, மீன்களை வெட்டும் இடத்துல ஷெட் எதுவுமில்லை. வியாபாரிங்களே சுத்தமா வெச்சிக்க முயற்சி செய்யறாங்க. லாரி நிறுத்தர இடத்துல கான்கிரீட் தளம் அமைக்கணும். கழிவுநீர் வசதி செஞ்சிக் கொடுக்கணும். கழிவுகளை முறையா அகற்றணும். குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யணும். இந்த மார்க்கெட் மீன் வளத் துறை கட்டுப்பாட்டுலதான் இருக்கு.

அதேசமயம், பேரூர் பைபாஸ் சாலை மீன்  அங்காடி, மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கு. மூணு வருஷத்துக்கு ஒருமுறை 15 சதவீதம் வாடகை ஏத்தறாங்க. ஜிஎஸ்டி கட்டறோம். அதேசமயம், மார்க்கெட்டுக்கு வெளியில, வெளியாளுங்களும் கடை வைத்து, மீன் விக்கறாங்க. வாடகை, ஜிஎஸ்டி-னு எதுவும் இல்லை. அவங்கமேல எந்த நடவடிக்கையும் இல்லை.இந்த மார்க்கெட்டுல குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை வசதியும் போதுமானதாக இல்லை. வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி இல்லை.

சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல கடுமையான நெருக்கடி நிலவுது. மீன் வாங்க வர்றவங்க வண்டி நிறுத்த இடமில்லாம தவிக்கிறாங்க. மீன் கழிவுகளை வியாபாரிங்களே எடுத்துக்கிட்டுப் போயிடறாங்க.  உரம், மீன் உணவு தயாரிக்க இது உதவுது. ஆனா, மற்ற கழிவுகளை சரியாக அகற்றுவதில்லை. மீன் விற்பனை மூலமா அரசுக்கும், மாநகராட்சிக்கும் அதிக வருவாய் கிடைக்கது. அதனால, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றணும் என்றார் சுபையர்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் `ஒமேகா-3’

வேறெந்த உணவிலும் கிடைக்காத சில சத்துகள், கடல் உணவுகளில் இருப்பதை மறுக்க முடியாது. மீன் உணவில் கொழுப்பு கிடையாது. அதிகம் புரதச்சத்து உள்ளது. இதில் உள்ள ஒமேகா- 3 என்ற ஒரு வகை அமிலம், வேறு எதிலும் இல்லை.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் இதற்கு முக்கியப் பங்குண்டு.எனினும், ஒரே விதமான மீன்கள் உண்பதை தவிர்த்து, பல்வேறு விதமான மீன்களை மாற்றி மாற்றி உண்ணலாம். அதேபோல, மீன்களைப் பொரித்துச் சாப்பிடுவதைக் காட்டிலும்,  சமைத்து உண்பது நல்லது. மீன் உணவு சாப்பிட்டு வருவோரை ஆஸ்துமா நோய் அண்டாது என்பார்கள். மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவு. பல்வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில், மீனில் உள்ள ஒமேகா-3 பங்கு வகிக்கிறது. மேலும், கொழுப்பு முற்றிலும் இல்லாததால், இதய பாதிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள்

சங்க இலக்கியங்களில்...

சங்க இலக்கியங்களில் மீன்கள் குறித்தும், மீனவர்கள் குறித்தும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுளளன.கடலும், கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும். இங்கு வசிப்போரை  சேர்ப்பன், துறைவன், புலம்பன், பரதவன், திமிலர், நுளையன், நுளைத்தியர் என்றெல்லாம் அழைப்பார்கள். கடற்கரையில் குடில் அமைத்து வாழ்ந்த இவர்கள்,  படகில் சென்று மீன் பிடித்துள்ளனர். மீன் பிடித்தல் மட்டுமின்றி, மீன் விற்பது, முத்து எடுப்பது, உப்பு தயாரிப்பு என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.பரதவர் கடலில் சென்று மீன் பிடித்து வந்து,  கடற்கரையில் கொட்டுவர் என்பதை, 'எறிதிறை தந்திட இழந்தமீன் இன்துறை மந்திரை வருந்தாமற் கொண்டாட்டு தெறிதாழ்ந்து'  என்று குறிப்பிடுகிறது கலித்தொகை.சங்க இலக்கியங்களில் மீன் பிடிக்கும் தொழில் பற்றிய குறிப்புகள் பரவலாக உள்ளன. தற்போதைய மீனவர்களை, சங்க காலத்தில் வலைஞர் என்று குறிப்பிட்டுள்ளனர். இது ஒரு காரணப் பெயர். கடல் மட்டுமின்றி, மடு, குளம், கழனி போன்ற நீர்நிலைகளிலுமிருந்து மீன் பிடித்த குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன. அகநானூற்றுப் பாடலில், கடலுக்குள் சென்று மீன்பிடிப்பவரை ‘திமிலோன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாணாற்றுப் படையில் குளத்தில் மீன் பிடிப்போரை, வலைஞர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x