Published : 10 Mar 2019 09:36 AM
Last Updated : 10 Mar 2019 09:36 AM
தருமபுரி மாவட்டத்தில் 2900-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் தற்சார்பு வாழ்க்கைக்கு பட்டுக் கூடு உற்பத்தி தொழில் காரணமாக அமைந்துள்ளது. வனம் மற்றும் மலைப் பகுதிகளை கணிசமான அளவில் கொண்ட மாவட்டம் தருமபுரி. இதனால் ஓரளவு மழைப்பொழிவு பெறும் மாவட்டமாக உள்ளது. இருப்பினும், மிகவும் மேட்டுப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாக இருப்பதால் மாவட்டத்தின் பெரும்பகுதி நிலப்பரப்பு எளிதில் வறட்சிக்கு இலக்காகி விடும். இதனால் கோடை காலங்களில் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான தண்ணீரை பெறுவதே பெரும் சிரமமாகி விடுகிறது. அதேநேரம், விவசாய குடும்பங்கள் தங்களின் பாரம்பரிய தொழில் மூலம் தான் கோடை காலத்திலும் குடும்ப செலவுகளை சமாளிக்க வருமானம் ஈட்ட வேண்டும். கோடையில் தண்ணீர் அளவு சுருங்கி விடும் நிலையில், கைவசம் இருக்கும் நீரைக் கொண்டு குறைந்த அளவு நிலப்பரப்பில் காய்கறிகள் போன்றவற்றை கடந்த காலங்களில் நடவு செய்தனர். இடையில் பட்டுக் கூடு உற்பத்தி குறித்து அறிந்த விவசாயிகள் தொடர்ந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலுமே மல்பெரி சாகுபடியும், பட்டுக் கூடு உற்பத்தியும் நடந்து வருகிறது. பட்டுக் கூடு உற்பத்திக்கான புழுக்களை வாங்க முன்பெல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, ஓசூர் போன்ற பகுதிகளுக்கு விவசாயிகள் சென்று வந்தனர். தற்போது, தருமபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பட்டுப் புழு உற்பத்தி கூடங்களும் உள்ளன. கூடு உற்பத்தி மனையின் அளவுக்கு ஏற்பவும், பட்டு வளர்ச்சித் துறையின் பரிந்துரைக்கு ஏற்பவும் புழுக்களை வாங்கி வந்து மனையில் விட்டு வளர்க்கின்றனர். புழுக்கள் விடப்பட்ட நாளில் இருந்து 22 முதல் 24 நாட்களில் கூடுகள் அறுவடைக்கு வந்து விடும். 50 ஆயிரம் புழுக்களை ஒரு பேட்ச்க்கு வளர்க்க சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் மல்பெரி இலை தேவைப்படும். இவை வளர்ந்து கிடைக்கும் கூடுகள் சராசரியாக 70 கிலோ வரை கிடைக்கும். பராமரிப்புக்கு ஏற்ப கூடுதல் எடையும் கிடைக்கலாம். தருமபுரி மாவட்ட பட்டுக் கூடு உற்பத்தி விவசாயிகளுக்கு மேலும் ஒரு கூடுதல் வாய்ப்பாக தருமபுரி 4 ரோடு அருகிலேயே அரசு பட்டுக் கூடு விற்பனையகம் உள்ளது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நீங்கலான அனைத்து நாட்களிலும் இங்கு காலையில் பட்டுக் கூடு ஏலம் நடக்கிறது. தமிழகத்திலேயே இது பெரிய பட்டுக் கூடு விற்பனை மையம். எனவே, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களின் பட்டுக் கூடுகளை இங்கே விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் தங்களின் குடும்ப செலவுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு குறைந்தபட்ச பொருளாதாரத்தை ஈட்டும் தொழிலாக பட்டுக் கூடு உற்பத்தி தொழில் உள்ளது. தருமபுரி மாவட்ட பட்டுக் கூடு உற்பத்தி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உள்ள நீரை சிக்கனமாகவும், சொட்டு நீர் போன்ற நுட்பங்கள் மூலம் பயன்படுத்தி மல்பெரி வளர்ப்பு மேற்கொண்டு வாழ்வை தற்சார்பு கொண்டதாக மாற்றியமைத்துள்ளனர்.
பட்டுக் கூடு விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘பட்டுக் கூடு உற்பத்தி ஒரு நிரந்தர வருவாய் கொடுக்கும் தொழிலாக உள்ளது. பட்டுப் புழுக்களை பராமரித்து கூடுகளை உற்பத்தி செய்யும் பணி, பச்சிளங் குழந்தைகளை வளர்ப்பது போன்றது. இதற்காக, கடும் உழைப்பை வழங்க வேண்டியுள்ளது. இதுபோன்ற விவசாய பணிகளுக்கு தற்போது போதிய பணியாளர்களும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக ஊதியம் வழங்கும் நிலை உள்ளது. எனவே, பட்டுக் கூடுகளுக்கான விலை அவ்வப் போது ஏற்ற, இறக்கங் கள் நிறைந் ததாக உள்ளது. பட்டுக் கூடுகளை ஏலம் எடுக்க வரும் வியாபாரிகளில் பலர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க விடாமல் செய்கின்றனர். இதுபோன்ற சில பிரச்சினைகளை தீர்ப்பதுடன், கூடுதல் விலை கிடைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.
தருமபுரி மாவட்ட பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அருணாச்சலம் கூறும்போது, ‘தருமபுரி மாவட்டத்தில் 4600 ஏக்கர் நிலப்பரப்பில் மல்பெரி நடவு செய்யப்பட்டுள்ளது. 2975-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மல்பெரி நடவு செய்து பட்டுக் கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் பட்டுக் கூடு உற்பத்தித் தொழில் 50 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவுக்கு அடுத்த நிலையில் பட்டு உற்பத்தியில் ஜப்பான் இருந்து வந்தது.
ஆனால், தற்போது 2-ம் இடத்துக்கு இந்தியா வந்துள்ளது. இந்தியாவின் பட்டு உற்பத்தியில் கணிசமான அளவு தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத் தக்கது. தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் பரவலாக பட்டுக் கூடு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் நேரம், காலம் கருதாமல் கடுமையாக உழைக்கக் கூடியவர்களாக உள்ளனர். விவசாயிகள் அவரவர் திறனுக்கும், சூழலுக்கும் ஏற்ற அளவில் பட்டுக் கூடு உற்பத்தி மனையை அமைத்து கூடு தயாரிக்கின்றனர். இந்த கூடு உற்பத்தித் தொழில், மாத ஊதியம் பெறும் பணியில் இருப்பதற்கு நிகரான தொழில். ஒரு மாத காலம் பராமரித்து மாத இறுதியில் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தால் கையில் பணத்தை பெற்றுச் சென்று விடலாம். மாவட்டத்தில் பட்டுக் கூடு உற்பத்தி விவசாயிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், நவீன நுட்பங்களை பின்பற்றி தரமான கூடுகளை உற்பத்தி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை பட்டு வளர்ச்சித் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT