Last Updated : 12 Mar, 2019 12:35 PM

 

Published : 12 Mar 2019 12:35 PM
Last Updated : 12 Mar 2019 12:35 PM

பிரியும் வாக்குகளை சரிகட்ட வழி என்ன?- உளவுத்துறையிடம் கேட்கும் அதிமுக

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அதிமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்துகளைவிட, காவல் துறையில் உளவுத்துறையின் தகவல்களை அவர் நம்புவார்.

வேட்பாளர் தேர்வு, யாருக்கு சாதகம், பெரும்பான்மை ஓட்டுகளாக இருப்பவர்கள், அந்த ஓட்டுகள் யாருக்கு வாய்ப்பு, தொகுதி வாரியாக என்ன மாதிரியான பிரச்சினைகள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அது யாருக்கு  எதிரொலிக்கும் என்றெல்லாம் பல் வேறு கோணங்களில் உளவுத்துறையிடம் ரிப்போர்ட்டை எதிர்பார்ப்பது வழக்கமாக இருந்தது.

அறிவிப்புக்கு முன், உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் குறித்து ரகசியமாக சாதக, பாதக விவரங்களும் சேகரிக்க உளவுத்துறைக்கு ஜெயலலிதா அறிவுறுத்துவார்.

உளவுத்துறை தவிர, தனியார் ஏஜென்சி ஒன்றை ஏற்பாடு செய்து அதன்மூலம் உள்ளூர், உளவுத் துறையினருக்கு தெரியாமலே வேட்பாளர்கள் பற்றி விசாரிக்கும் நடைமுறையும் ஜெயலலிதா காலத்தில் இருந்தது.

மேலும், பிற கட்சிகள் அறிவிக்கும் முன்பே, தடாலடியாக தங்களது கட்சி வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து, அவர்களுக்கு மக்கள், தொண்டர்களிடம் எந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது என்ற பின்னணியும் பின்பற்றப்படுவதும் உண்டு.

இதுபோன்ற பல்வேறு நடைமுறைகள் இருந்தாலும், இறுதியில் உளவுத்துறையின் தகவல்களையே நம்பி  தேர்தல் களத்தை ஜெயலலிதா தீர்மானிப்பார். அதில் பெரும்பாலும் வென்றும் இருக்கிறார் என, உளவுத்துறையினர் கூறுகின்றனர்.

அதே பாணியை அதிமுக தலைமை ஒரளவுக்குப் பின்பற்றினாலும், இறுதிக்கட்டத்தில் மக்களின் மனநிலை குறித்து தகவல்களைச் சேகரிக்க, உளவுத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக உளவுத்துறை போலீஸார் பல்வேறு தகவல்களைச் சேகரிக்கின்றனர்.

இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:

ஜெயலலிதா உளவுத்துறையின் தகவல்களை முழுசாக நம்புவார். தேர்தலையொட்டி அதற்கான அதிகாரிகளும் முன்கூட்டியே இத்துறையில் நியமிக்கப்படுவர்.

மனுத்தாக்கல் செய்த நபர்களில் மூவரை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து, அவர்கள் பின்னணி, செல்வாக்கு பற்றி விசாரித்து அறிக்கை பெறுவார். இதில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும். தற்போதைய அதிமுக மேலிடம் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் தகவல் கேட்கவில்லை.

ஆனாலும்,  வழக்கமாக தேர்தல் நிலவரம் குறித்த தகவல்களை எங்களது உயரதிகாரிகளுக்கு அனுப்புகிறோம். வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்த பின், அவர்கள் பற்றிய பின்னணிகளை  விவரம் விசாரிக்க உத்தரவிடலாம். 

ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிமுகவில் இருந்து டிடிவி பிரிக்கும் ஓட்டுகளை, ஈடுகட்ட என்ன வழிமுறை என, சில தகவல்களை ஏற்கெனவே அனுப்பி இருக்கிறோம். இதையொட்டி கூட்டணியை அதிமுக பலப்படுத்துகிறது. இதனால்தான் விமர்சனங்களைக் கடந்தும் தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது எனத் தெரிகிறது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, தோல்வி நிலவரம் மாறுவது குறித்து ஜெயலலிதாவுக்கு அறிக்கை கொடுத்தோம்.

இதன் பின், பிரசாரம் சில உத்திகளை மாற்றியதால் திமுகவை விட குறைந்த அளவு தொகுதிகளில் மட்டுமே அதிமுகவால் முந்திச் சென்று ஆட்சியைக் கைப்பற்றியது. மக்களவைத் தேர்தலில் பலமுனைப் போட்டி இருக்கும். வேட்பாளர், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பொறுத்து இறுதிக்கட்ட நிலை மாறலாம், என்றார்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x