Published : 02 Mar 2019 10:26 AM
Last Updated : 02 Mar 2019 10:26 AM
ஆசிய அளவிலான ரோல்பால் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று, வெற்றிக்கு வழி வகுத்துள்ளார் கோவை மாணவி சி.எஸ்.மகிமாஸ்ரீ. இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மாணவிகளில் தென்னிந்தியாவிலிருந்து சென்று பங்கேற்றது இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கேட்டிங், கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய மூன்று விளையாட்டுகளின் சங்கமம் ரோல்பால் போட்டி. கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சறுக்கிச் செல்வதுடன், பிரத்தியேக பந்தை கையில் கொண்டுசென்று வலைக்குள் வீச வேண்டும். 2003-ல் புனேவைச் சேர்ந்த ராஜு டபாடே என்பவர் இந்த விளையாட்டைக் கண்டறிந்தார். தற்போது சர்வதேச அளவில் 60 நாடுகளில் இது விளையாடப்படுகிறது. இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், தேசிய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம் ஆகிய அமைப்புகளால் இந்த விளையாட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, 6 பேர் களத்தில் விளையாடுவார்கள்.
ஆசியப் போட்டியில் தங்கம்
அண்மையில் கர்நாடக மாநிலம் பெல்காம் நகரில் நடைபெற்ற 3-வது ஆசிய ரோல்பால் போட்டியில், இந்தியா, சவுதி, ஏமன், பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் பூடான், கம்போடியா, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 17 நாடுகளில் பங்கேற்றன. இதில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கோப்பையைக் கைப்பற்றியன.
இந்திய பெண்கள் அணியில் கோவை சுகுணா பிப்ஸ் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி சி.எஸ்.மகிமாஸ்ரீ(15) இடம்பெற்று, வெற்றிக்கு வழிகுத்துள்ளார். இந்திய அணியில் தென்னிந்தியாவிலிருந்து இடம்பெற்றது மகிமாஸ்ரீ மட்டுமே. விளையாட்டு ஆர்வலர்களின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டிருந்த மகிமாஸ்ரீ-யை சந்தித்தோம்.
“அப்பா எம்.சித்தாபதி, அம்மா கே.சந்திரவதனா ரெண்டுபேருமே பல் டாக்டர்கள். மூணாவது படிக்கும்போது டென்னிஸ் கத்துக்கிட்டேன். 5-வது படிக்கும்போது ஸ்கேட்டிங் பயிற்சிக்குப் போனேன். டென்னிஸ், ஸ்கேட்டிங் ரெண்டுமே தனிப்பட்ட விளையாட்டுங்க. எனக்கு ஒரு டீம்ல சேர்ந்து விளையாடணும்னு ஆசை. இதைப் பத்தி பள்ளி உடற்கல்வி இயக்குநர் ஆல்வின்கிட்ட பேசினேன். `அப்ப நீ ரோல்பால் கத்துக்க. ஸ்கேட்டிங், கூடைப்பந்து, கைப்பந்துனு மூணும் கலந்த விளையாட்டு. உனக்கு சரியா இருக்கும்’னு சொன்னாரு. அப்புறம்தான் ரோல்பால் கத்துக்கிட்டேன். கொஞ்ச நாள்லயே கோவை மாவட்ட அணிக்கு தேர்வானேன். 2016-ல் மாநிலப் போட்டியில கலந்துக்கிட்டேன். என்னோட ஸ்பீடும், பால் எடுத்துக்கிட்டுப்போற லாவகமும் பார்த்து, மாநில அணிக்கு தேர்வு செஞ்சாங்க. உதய்்பூர்ல நடந்த தேசிய ரோல்பால் போட்டியில தமிழ்நாடு அணியில விளையாடினேன்.
அப்புறம் பெரம்பலூரில் நடந்த மாநிலப் போட்டியில, கோவை மாவட்ட அணியோட கேப்டனா பொறுப்பு வகிச்சேன். அந்தப் போட்டியில கோவை அணி தங்கம் வென்றது. தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் புனேவுல நடந்த, பள்ளிகளுக்கு இடையிலான தேசியப் போட்டியில பங்கேற்ற சிபிஎஸ்இ பள்ளிகள் அணியில் இடம் பிடிச்சேன். 2017-ல் கோவாவில் நடந்த தேசிய ரோல்பால் போட்டியில தமிழ்நாடு அணிக்காக விளையாடினேன். அதுல வெண்கலப் பதக்கம் வென்றோம்.
2018-ல 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநிலப் போட்டி திண்டுக்கல்ல நடந்தது. அதுல கோவை மாவட்ட அணிக்காக விளையாடினேன். ராஜஸ்தான்ல நடந்த தேசிய போட்டியில தமிழ்நாடு அணியில இடம்பெற்றேன். அதே ஆண்டு, இலங்கையில நடந்த சர்வதேச நட்புமுறை போட்டியில, இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்தேன். அந்தப் போட்டியில இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைச்சது.
அண்மையில் பெல்காம்ல நடந்த ஆசிய ரோல்பால் போட்டியில இந்திய அணி தங்கம் வென்றது. அந்த அணியில் இடம்பிடிச்சிருந்த பொண்ணுங்கள்ள நான் தான் சின்ன பொண்ணு. மத்தவங்க என்னைவிட பல வருஷம் பெரியவங்க. இறுதிப் போட்டியில பங்களாதேஷ் அணியை 4-3 கோல் கணக்கில ஜெயிச்சோம்.
கோச் ராஜசேகர், அஜீஸ், பாலா ஆகியோர் கடந்த 4 ஆண்டுகளாக கடும் பயிற்சி அளித்து வர்ராங்க. பெற்றோரும், பள்ளித் தாளாளர் சுகுணா, உடற்கல்வி இயக்குநர் ஆல்வினனும் நல்லா ஊக்குவிக்கறாங்க.
உலகக் கோப்பை போட்டியில இந்திய அணிக்காக விளையாடி, தங்கப் பதக்கம் வெல்லணும்ங்கறதுதான் என் ஆசை.
இதுக்காக கடும் பயிற்சியில ஈடுபட்டிருக்கேன். தினமும் காலை, மாலையில ஒரு மணி நேரம் பயிற்சி செய்வேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் 6-7 மணி நேரம் பயிற்சி செய்து வருகிறேன்” என்றார் நம்பிக்கையுடன்.
பியானோ, ரெக்கார்டர் இசை…
விளையாட்டில் மட்டுமே, படிப்பு, பொது அறிவு, இசையிலும் இவர் சுட்டிதான். ஒலிம்பியாட் நடத்திய பள்ளி அளவிலான பொது அறிவுப் போடடியில் முதலிடம் வென்றுள்ளார். பியானோ மற்றும் ரெக்கார்டர் இசைக் கருவிகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாநில அளவில் ரெக்கார்டர் இசைக்கருவி வாசித்தலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவரது தாத்தா எஸ்.கே.கார்வேந்தன்.
முன்னாள் எம்.பி. “பெற்றோர் மாதிரி டாக்டராக விருப்பமா?” என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே, நிச்சயம் கிடையாது. நான் வழக்கறிஞராக விரும்புகிறேன்” என்றார் மகிமாஸ்ரீ.
இவரது சகோதரி சி.எஸ்.பூர்விகாஸ்ரீயும் ரோல்பால் விளையாட்டில் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்ட ரோல்பால் சங்கப் பொதுச் செயலர் வி.ராஜசேகர் கூறும்போது, “எல்லோரையும் போலத்தான் மகிமாஸ்ரீ பயிற்சியைத் தொடங்கினார். ஆனால், அவரது வேகம், பந்தைக் கையாளும் திறன் ஆகியவற்றால் தேசிய அணிக்குத் தேர்வானார். இந்தியாவில் உருவான இந்த விளையாட்டு, இன்று பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டு, மூன்று முறை உலகக்கோப்பை போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் ரோல்பால் போட்டி ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும். அப்போது, நிச்சயம் இந்திய அணிக்காக மகிமாஸ்ரீ விளையாடுவார். அந்த அளவுக்கு கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கோவை மாவட்டத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் ரோல்பால் பயிற்சி மேற்கொள்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறோம். பல்வேறு மாநில அரசுகளும் ரோல்பால் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கின்றன. அதேபோல, தமிழக அரசும் ரோல்பால் போட்டிகளை ஊக்குவிப்பதுடன், விளையாட்டு வீரர்களின் திறமைகளை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT