Published : 27 Mar 2019 09:25 AM
Last Updated : 27 Mar 2019 09:25 AM
பிரதமர், முதல்வர் பங்கேற்ற பொதுக்கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் நடத்தி முடித்ததாக, திருப்பூரில் போலீஸார் சார்பில் கிடா வெட்டி கறி விருந்து வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில், குறிப்பிட்ட காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நிகழாமல் இருக்க வேண்டி, காவல் துறை சார்பில் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் கடவுளுக்கு கிடா வெட்டி, பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு கறி விருந்து வைக்கப்படும்.
அதேபோன்றதொரு சம்பவம், திருப்பூர் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பெருமா நல்லூரில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம்,பொதுக்கூட்ட மேடைக்கு அருகே தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் பிரதமருடன் பங்கேற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளுக்காக ஒரு வாரம் முன்னதாகவே, போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தின் மேற்கு மண்டலமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீஸார், இரு தினங்களுக்கு முன்னதாகவே நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். சிறிய அளவிலான அசம்பா விதங்கள்கூட நிகழ்ந்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, விடுப்பு மற்றும் ஓய்வு இல்லாமல் பெருமாநல்லூர் காவல் நிலைய போலீஸார் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட அடிக்கல் நாட்டு விழா உட்பட பல்வேறு நிகழ்வுகள், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றன.
இதில் பங்கேற்க முதல்வர் உள்ளிட்டோரின் தொடர் வருகை, அடுத்து பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் விழா உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. மேற்கண்ட அனைத்தும் நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவி தங்களும், பிரச்சினைகளும் இல்லாமல் நிறைவு பெற்றதால், கடினமாக உழைத்த போலீஸாரை ஊக்கப்படுத்தும் வகையில், பெருமாநல்லூர் போலீஸார் சார்பில் காவல் நிலையம் அருகே தனியார் மண்டபத்தில் கிடா வெட்டி கறி விருந்து அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் துறை அதிகாரிகள், காவலர்கள், முக்கிய உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு, எதிர்ப்பு என கலப்பு விமர்சனங்களை உண்டாக்கியது.
இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸார் கூறும்போது, ‘பிரதமர், முதல்வரின் வருகை, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள், கோயில் குண்டம் விழா உள்ளிட்ட அனைத்து பெரிய நிகழ்வுகளும் அசம்பாவிதங்கள் இல்லாமல் முடிக்கப்பட்டன. ஆண்டுதோறும் குண்டம் விழாவில் வழிப்பறி, நகைப்பறிப்பு குற்றங்கள் நடப்பது உண்டு. ஆனால், இந்த ஆண்டு எந்தவித குற்றங்களும் நடைபெறவில்லை. அதற்காகவே, இந்த விருந்து நிகழ்வு நடைபெற்றது' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT