Published : 17 Mar 2019 12:13 PM
Last Updated : 17 Mar 2019 12:13 PM
கட்சி நிர்வாகிகளிடையே ஒற்றுமையில் லாததால் தேனி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக தலைமை ஒதுக்கிவிட்டதாக உள்ளூர் கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர்.
பெரியகுளம் மக்களவைத் தொகுதி, கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து தேனி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. இத்தொகுதியில் மிக அதிகமாக காங்கிரஸ் கட்சி 5 முறையும், அதிமுக 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 1980, 1996 ஆகிய 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலும் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே இத்தொகுதியை திமுக ஒதுக்கி வந்துள்ளது. இந்த முறையும் இத்தொகுதி காங்கிரஸ் கட்சி வசமே சென் றுள்ளது.
பிற மாவட்டங்களில் எல்லாம், தங்கள் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சியினர் முனைப்பு காட்டி வந்த நிலையில், தேனியிலோ கிணற்றில் போட்ட கல்லாக அனைவரும் அமைதியாக இருந்துவிட்டனர் என்று அக்கட்சியின் தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர். எப்படியிருந்தாலும் கூட்டணி கட்சிக்குத்தானே போகப்போகிறது என்ற மனப்பான்மை இருந்ததால், அது சார்ந்த அறிவிப்பு வெளியானபோதுகூட சிறு சலசலப்போ, அதிருப்தியோ கட்சி நிர்வாகிகளிடம் ஏற்படவில்லை. மாறாக திமுக வட்டாரத்தில் நிம்மதி பெருமூச்சுதான் வெளிப்பட்டது.
மாவட்டத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அரவணைத்துச் செல்ல வலிமையான தலைமை இல்லாததே காரணம் என அக்கட்சியினர் கூறுகின்றனர். கோஷ்டி பூசலை சமாளித்து சமரசப்படுத்தாமல் இருப்பதால், சொந்த கட்சியினரே ஒருவருக்கு எதிராக மற்றொருவர் உள்ளடி வேலைகளை செய்கின்றனர். இதன் காரணமாகத்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய 4 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றிவிட்டது.
இந்த ‘வரலாறு’ தெரிந்ததால்தான் கட்சி நிர்வாகிகள் யாரும் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்குமாறு தலைமையிடம் வலியுறுத்தவில்லை. மேலும், இத்தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்லவம் மகன் ரவீந்திரநாத் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதனால் பொருளாதார ரீதியான போட்டியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் திமுக தரப்பில் தயக்க நிலை இருந்து வந்தது.
இருப்பினும் திமுக மாநில தேர்தல் குழு செயலாளர் செல்வேந்திரன், தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், பாலமுருகன், கருப்பையா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர். ஆனாலும் மாவட்டத்தின் ‘நிலைமையை’ அறிந்த தலைமை, இத்தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கே ஒதுக்கி உள்ளது. இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கட்சியினரை ஒருங்கிணைப்பதில் மாவட்ட தலைமையிடம் தடுமாற்றம் நிலவுகிறது. இதனால், கட்சியினரிடையே கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. கட்சி சார்பில் யாராவது போட்டியிட்டால், உள்ளடி வேலைகளால் பெரும்பாலும் தோல்வியை தழுவும் நிலையே உள்ளது. இதனால்தான் கூட்டணி கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கும் நிலை தொடர்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT