Published : 16 Mar 2019 10:34 AM
Last Updated : 16 Mar 2019 10:34 AM

தேனியிலிருந்து மதுரைக்கு இடம்பெயரும் ஓபிஎஸ் மகன்: உள்ளூர் அரசியல் எதிரிகளை சமாளிக்க முடியாமல் தொகுதி மாறுகிறாரா?

தேனி மக்களவைத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதாக கூறப்பட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு தற்போது மதுரையில் ‘சீட்’ கொடுப்பதற்கு திரைமறைவு முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார். இவர் தேனி மாவட்ட ஜெ., பேரவை மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். 

இவர், கடந்த சில நாளுக்கு முன் நடந்த அதிமுக வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டார். அவருக்கு நேர்காணல் முதலமைச்சர் கே.பழனிசாமி, கொடுத்த ராஜமரியாதையைப் பார்த்து,  அவருக்கு தேனி தொகுதிக்கு ‘சீட்’ உறுதி என்று கட்சியினர் கூறி வந்தனர்.

தேனி தொகுதியில் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டால் அவரை வீழ்த்துவது மூலம் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்தலாம் என்று அவரின் அரசியல் எதிரி தங்க தமிழ்செல்வனும், அமமுக கட்சியினரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதனால், தற்போது ஓ.பன்னீர் செல்வம் மகனை தேனி தொகுதிக்கு பதிலாக மதுரை தொகுதியில் நிறுத்தலாமா? அல்லது ‘சீட்’ கொடுக்காமல் விட்டுவிடலாமா? என்று ஆலோசித்துக் கொண்டு குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தங்க தமிழ்செல்வன் குடைச்சல் கொடுப்பதால் மகனை விருதுநகரில் நிறுத்த முடிவு செய்திருந்தார். விருதுநகர் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுகிறது. அதனால், மதுரையில் நிறுத்தலாம் என்று ஆலோசிக்கிறார்.

ஆனால்,  மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் மகன் போட்டியிட்டால் அவர் நிச்சயம் தோற்று போய்விடுவார். மதுரையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் நெருக்கம் கிடையாது. யாருக்கும் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.

ஏற்கணவே, தந்தை துணை முதலமைச்சர், அவரது தம்பி கூட்டுறவுத்துறை சேர்மன், மகன் எம்பி ‘சீட்’டா என்று, குடும்பத்தினருக்கே ஓ.பன்னீர்செல்வம் பதவிகளை கொடுப்பதாக கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் மகனை எங்கு வேண்டுமென்றாலும் அவர் நிறுத்த அதிகாரம் உள்ளது.

ஆனால், வெற்றிப்பெற வைக்க முடியுமா? என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனியில் தங்க தமிழ் செல்வனம், ஓ.பன்னீர் செல்வத்திற்காக எதிராக அரசியல் செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். அதனால், மகனை தேனியில் நிறுத்தினால், தங்கதமிழ்செல்வன், அதற்காக எதையும் செய்ய தயராகுவார்.

தேனி மக்களவைத்தொகுதியில் அமமுகவுக்கு ஒரளவு செல்வாக்கும் உள்ளது.  டிடிவி.தினகரன், ஏற்கணவே அங்கு போட்டியிட்டவர் என்பதால் அவருக்கு கட்சித் தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும், மக்களிடமும் நல்ல அறிமுகம் உண்டு.

அதனால்,  தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மகன் நின்றால் அவருக்கு எதிரான தேர்தல் வியூகத்திற்கும், பிரச்சாரத்திற்கும் டிடிவி.தினகரன், அதிக முக்கியத்துவம் கொடுப்பார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் மகனை வீழ்த்துவதை அவர் தன்னுடைய கவுரவப்பிரச்சனையாக கருதுவார்.

அதனால், அரசியல் எதிர்களை எதிர்த்து  முதல் முறையாக மகனை களம் இறக்க ஓ.பன்னீர் செல்வம் தயங்குகிறார். ஜெயலலிதா மறைவின்போது அதிமுகவில் சசிகலா ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோது, முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வதற்கு எதிராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குரல் கொடுத்தார்.

அதனால்,  அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அரசியலில் இடையில் சிறு விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசலை, ஓ.பன்னீர் செல்வம் மகனை மதுரை அல்லது விருதுநகரில் நிறுத்தி வெற்றிப்பெற வைக்க வைத்து சரிக்கட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நினைக்கிறார். ஆனால், விருதுநகர் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட உள்ளதால் மதுரையில் ரவீந்திரநாத்குமாரை நிறுத்த வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். 

ஆனால், மதுரையில் மகனை நிறுத்தினால் அரசியல் எதிரிகளுக்கு பயந்து ஓ.பன்னீர் செல்வம் பின்வாங்குகிறார் என்ற அவப்பெயரும் ஏற்படும். அதனால், இரு தலை கொள்ளி எறும்பாக தவிக்கிறார்.

அரசியல் எதிரிகள், உள்கட்சி எதிர்ப்பு, தொடர்ந்து குடும்பத்திற்கே பதவிகளை வழங்குவது போன்றவற்றை சமாளிக்க மகனை போட்டியிட வைக்காமல் இருக்கலாமா? என்ற முடிவிலும் ஓ.பன்னீர் செல்வம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், கட்சி ஒருங்கிணைப்பாளராக மகனுக்கு ‘சீட்’ கொடுக்கும் அதிகாரம் இருந்தும் மகனை போட்டியிட வைக்க முடியாமல் விரக்தியடைந்துள்ளார், ’’ என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x