Last Updated : 10 Mar, 2019 09:15 AM

 

Published : 10 Mar 2019 09:15 AM
Last Updated : 10 Mar 2019 09:15 AM

`சைவ ஆட்டுக்கால் சூப்!- கொல்லிமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஆட்டுக்கால் சூப், கோழிக்கால் சூப் என அசைவப் பிரியர்களுக்கு மட்டும்தான் வகைவகையான சூப்கள் உள்ளன என்று ஏக்கம் கொள்கின்றனர் சைவப் பிரியர்கள். இவர்களுக்காகவே ‘சைவ ஆட்டுக்கால்’ சூப் கிடைக்கிறது தெரியுமா?  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கிடைக்கும் இந்த சூப்பைக் குடிக்க குவிகின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு எனும் ஒருவகை மூலிகைக் கிழங்கு கிடைக்கிறது. இந்த மூலிகைக் கிழங்கு, ஆட்டுக்கால் போன்ற தோற்றத்தில் காணப்படும். இதன் மேல்புறத்தில் உள்ள தோலை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சூப் வைத்துக் குடித்தால், ஆட்டுக்கால் சூப்பே தோற்றுவிடும் என்கின்றனர் கொல்லிமலை மக்கள்.

இது தொடர்பாக கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால் கிழங்கைக்கொண்டு சூப் தயாரித்துக் கொடுப்போர் கூறும்போது, "கொல்லிமலை வனப் பகுதியில் பரவலாக கிடைக்கிறது முடவன் ஆட்டுக்கால் கிழங்கு. இது ஒரு வகையான மூலிகைக் கிழங்கு. வனத் துறையினர் அனுமதியுடன் இந்தக் கிழங்கை வெட்டி எடுத்து வருகிறோம். பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போன்ற தோற்றம் இருப்பதால்,  `ஆட்டுக்கால் கிழங்கு' என அழைக்கிறோம்.

இதில் சூப் வைத்துக் குடித்தால், மூட்டு வலி நீங்கும் என்பதால் முடவன் என சேர்த்து,  `முடவன் ஆட்டுக்கால் கிழங்கு' என்றும் அழைக்கிறோம்.

கிழங்கின் மேல் தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து  சூப் தயாரிக்கிறோம். இதில், தக்காளி, புளி சேர்க்கக் கூடாது.

கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள்,  இந்த சூப்பைக் குடிக்கத் தவறுவதில்லை. இதன் சுவை ஆட்டுக்கால் சூப் போலவே இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். சூப் குடிப்பதற்காகவே கொல்லிமலை வருவோரும் உண்டு.

கொல்லிமலையில் பரவலாக இந்த சூப் கிடைத்தாலும், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி போன்ற இடங்களில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. அருவிக்கு ஏறி, இறங்கிச் சென்று குளித்துவிட்டு வருவோர், இந்த சூப்பைக் குடித்தால் புத்துணர்ச்சி பெறுவர்" என்றனர்.

நாமக்கல் எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் எஸ்.பூபதிராஜா கூறும்போது, "முடவாட்டுக் கிழங்கு அல்லது முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என அழைக்கப்படும் இக்கிழங்கு, கொல்லிமலையில் கிடைக்கிறது. இந்த மூலிகைக் கிழங்கை சூப் வைத்து குடிப்பதால், கை, கால் மூட்டு வலி நீங்கும் என்பது உண்மைதான். சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலையிலும் இந்தக் கிழங்கு கிடைக்கிறது. எனினும், கொல்லிமலையில்தான் அதிகம் கிடைக்கிறது" என்றார்.

மண்ணில் வளராத செடி...

கொல்லிமலையில் ‘முடவன் ஆட்டுக்கால்’ என்றழைக்கப்படும் இக்கிழங்கு,  மலைப் பகுதியில் விளையக்கூடிய `பாலிபோடியேசியே'  குடும்பத்தைச் சேர்ந்த, ஒருவகை  புறணிச் செடியாகும்.

இவை பெரிய மரங்களின் மேல் படரும்,  ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. இந்தக் கிழங்குச் செடி மண்ணில் வளராது. பாறைகளிலும், மரங்களின் மீதும்தான் படர்ந்து வளரும். `டிரைனேரியா குர்சிபோலியோ' என்ற தாவரவியல் பெயர் கொண்ட இச்செடியின் வேர்தான் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரக்கூடிய தன்மை கொண்டது என தாவரவியல் ஆய்வாளர்கள் மற்றும்  சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டு வலி மட்டுமின்றி, செரிமானப் பிரச்சினைகளும் குணமாக்கும் தன்மை கொண்டது இது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x