Published : 09 Mar 2019 09:19 PM
Last Updated : 09 Mar 2019 09:19 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இழுபறி நீடிக்கிறது. நாளை இறுதியாகும் என தெரிகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன்தான் முதன் முதலில் கூட்டணியை இறுதிப்படுத்தியது. இதில் புதுச்சேரி தொகுதி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதிகளை ஒதுக்கியது.
இதில் காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் என அறியப்பட்ட தொகுதிகள் தவிர திமுக தொகுதிகள் சிலவற்றையும் கேட்பதாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளை கேட்க இருப்பதாலும் குழப்பம் நீடிக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு என உள்ள தொகுதிகள் கன்னியாகுமரி, ஆரணி, சேலம், சிவகங்கை ஆகிய தொகுதிகளை கூறுகிறார்கள். மேற்கண்ட தொகுதிகள் கிட்டத்தட்ட இறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் மீதமுள்ள 5 தொகுதிகளில் காங்கிரஸ் கேட்பது தென் சென்னை, திருச்சி, ஈரோடு, விருதுநகர், தென்காசி ஆகிய தொகுதிகள் ஆகும். இந்த தொகுதிகளில் சென்னையில் ஒரு தொகுதியில் காங்கிரஸுக்கு எப்போதும் இடம் ஒதுக்கப்படுவது வாடிக்கை. அதுவும் தென் சென்னை அதிகம் இருக்கும்.
ஆனால் தென் சென்னை திமுக தன்வசம் வைத்துக்கொள்ள விரும்புவதால் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் இன்று காலை நடந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் மாலை மீண்டும் பேசலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் திமுக, காங்கிரஸ் இடையே உள்ள இழுபறி காரணமாக உள்ள பட்டியலை டெல்லி மேலிடத்துக்கு காங்கிரஸ் அனுப்பி அவர்கள் வழிகாட்டுதல்படி பேச உள்ளனர்.
அதனால் இன்று பேச்சுவார்த்தை இல்லை, நாளை தொடர உள்ளது. நாளை இறுதிப்படுத்தப்படும் என திமுக வட்டார தகவல் தெரிவிக்கிறது. இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தையும் தொடர்கிறது.
அவர்களுக்கு நாளை பேச்சுவார்த்தை முடிவில் தொகுதி இறுதிப்படுத்தப்படும். அநேகமாக கோவை, மதுரையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடன்பாடு கண்டுவிட்டதாகவும் என்ன தொகுதிகள் என்று அறிவிக்க முடியாது திமுக தலைவர் நாளை அறிவிப்பார் என முத்தரசன் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
இதுகுறித்து விசாரித்தபோது திருப்பூர், தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பூர் ஒதுக்கப்பட்டால் மூத்த தலைவர் சுப்பராயன் போட்டியிட வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT