Published : 22 Mar 2019 09:23 AM
Last Updated : 22 Mar 2019 09:23 AM
சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் 5 ரயில்களில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றை இயக்க டீசல் ஜெனரேட்டருக்கு பதில் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்தியதன் மூலம் ரூ.5 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் நிலையங்களில் இருந்து ரயில் புறப்படுவதற்கு முன்பே பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் இருக்கும் மின் விளக்குகள், மின்விசிறி, ஏசி ஆகியவை இயங்குவதைப் பார்த்திருப்போம். இவ்வாறு, இயங்க டீசல் ஜெனரேட்டர் (ரயில் இன்ஜினுக்கு அடுத்து உள்ள பகுதி) மூலம் கிடைக்கும் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு டீசலைப் பயன்படுத்தி ஒரு யூனிட் மின்சாரத்தை பெற சுமார் ரூ.30 செலவாகிறது. இதனால், ரயில்வேக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், டீசலுக்கு பதில் நேரடியாக மின்சாரம் மூலம் விளக்குகள், மின்விசிறி, ஏசி ஆகியவற்றுக்கு இணைப்பு கொடுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, ரயில் இன்ஜினுக்கு மேல் செல்லும் மின் வழித்தடத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை, 'கன்வர்டர்' மூலம் ஜெனரேட்டருக்குள் செலுத்தி, அதன்மூலம் மின்விளக்குகள், ஏசி ஆகியவற்றை இயக்கும் முறை (ஹெட் ஆன் ஜெனரேஷன்) பின்பற்றப்பட்டது. தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட 5 ரயில்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அதிர்வு இல்லாமல் செல்லும் எல்எச்பி பெட்டிகளை கொண்ட கோவை-சென்னை இடையேயான சேரன் விரைவு ரயில், கோவை-பெங்களூரு இடையேயான ‘டபுள் டெக்கர்’ உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (2018 ஜூன் முதல்), சென்னை- திருவனந்தபுரம் இடையேயான திருவனந்தபுரம் மெயில் ஆகிய ரயில்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
டீசல் செலவு மிச்சம்இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோவை-சென்னை இடையேயான ரயில் வழித்தடம் நீண்ட நாட்களுக்கு முன்பே மின்வழித்தடமாக மாற்றப்பட்டுவிட்டது. எனவே, வழி நெடுக மின்சாரம் கிடைக்கிறது. ரயில் இன்ஜினை இயக்க மட்டும் அதைப் பயன்படுத்தாமல், ஏசி உள்ளிட்டவற்றை இயக்குவதற்கும் அதை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. டீசலுக்கு பதில் மின்சாரத்தை பயன்படுத்தியதால் ஒரு யூனிட்டுக்கு ரூ.13 மட்டுமே செலவாகிறது. அதன்படி, கடந்த 2018 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஓராண்டில் 7.17 லட்சம் லிட்டர் டீசல் சேமிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் ரூ.5 கோடி மிச்சமாகியுள்ளது.
மின்சாரத்தை பயன்படுத்துவதால், டீசல் ஜெனரேட்டரை இயக்கும்போது ஏற்படும் ஒலி மாசு ஏற்படுவதில்லை. மேலும், டீசல் ஜெனரேட்டரை இயக்காததால், புகை வருவது தவிர்க்கப்பட்டு காற்று மாசு தவிர்க்கப்படுகிறது. பராமரிப்பு செலவும் குறைகிறது. நாம் சேமிக்கும் பணம், சம்பாதிக்கும் பணத்துக்கு ஈடானது. எனவே, இனிவரும் நாட்களில் மற்ற ரயில்களிலும் படிப்படியாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT