Published : 07 Mar 2019 10:13 AM
Last Updated : 07 Mar 2019 10:13 AM
பிரதமர் மோடி, கடந்த மாதம் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், எப்போது மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் ரூ.1,264 கோடியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டே மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு, அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் மத்திய, மாநில அரசுகள் இடையே முரண்பாடு ஏற்பட்டு 4 ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ் அமையும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பிறகும் தாமதம் ஏற்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். மத்திய அரசின் ஆணையில் 45 மாதங்களில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் முடிக்கப் படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 750 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் 100 எம்பிபிஎஸ் இடங்கள், செவிலியர் படிப்புகள், 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு என தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.
அதனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை முழு வீச்சில் செயல்படத் தொடங்கினால், மதுரை மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளதாக தென் மாவட்ட மக்கள் புளகாங்கிதம் அடைந்தனர். ஆனால், பிரதமர் மோடி அடிக்கல்நாட்டிச் சென்ற பிறகு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான அறிகுறிகள், அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் கூட நடக்கவில்லை. விரைவில் மக்களவைத் தேர்தல் வர உள்ளது. அதில் வெற்றி பெறுவதில்தான் தற்போது மத்திய, மாநில ஆட்சியாளர்களின் முழு கவனமும் உள்ளது. அவர்கள் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டு மானப் பணிக்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானப்பணி டெண்டர் உள்ளிட்ட செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதாக தெரிய வில்லை என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை யாரால் வந்தது என பட்டிமன்றம் வைத்த உள்ளூர் அதிமுகவினர் மற்றும் பாஜக வினர் எய்ம்ஸ் நிதி ஒதுக்கீடு பெறும் முயற்சியில் ஆர்வம் காட்டவில்லை என மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் கூறியதாவது: தற்போது மத்திய அரசு பட்ஜெட்டிலும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அது சம்பந்தமான எந்த விவரங்களையும் அறியவும் முடியவில்லை. ஆனால், பாஜகவினர் 2015-ம் ஆண்டு தமிழகத்துக்கு ‘எய்ம்ஸ்’ அறிவித்தபோதே நிதி ஒதுக்கி விட்டதாகக் கூறுகின்றனர். அரசு ஆணை, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பிறகுதான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால், பாஜகவினரின் கூற்று முரணாக உள்ளது. அதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை சம்பந்தமாக சில விவரங்களை கேட்டுள்ளேன். அப்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT