Published : 10 Mar 2019 04:08 PM
Last Updated : 10 Mar 2019 04:08 PM
5 புதிய டிஜிபிக்கள் பதவி உயர்வு அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி பரிந்துரைக்காக 3 தகுதியான அதிகாரிகளின் பெயர் பட்டியலுக்காக என காவல் துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவிக்காலம் வரும் ஜூன் இரண்டாவது வாரத்துடன் முடிவதால் அடுத்த டிஜிபியைத் தேர்வு செய்யும் கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு முறைகள் காரணமாக புதிய டிஜிபி தேர்வு சிக்கலாக உள்ளதாக காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
காவல்துறையில் உச்சகட்ட மரியாதை ஐபிஎஸ் அதிகாரியாவதே. ஐபிஎஸ் அதிகாரிகள் பெருமையாகக் கருதுவது சென்னை காவல் ஆணையர் பதவி, சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி. இதில் வாழ்நாளில் ஒருமுறையாவது அமர்ந்துவிட வேண்டும் என ஒவ்வொரு ஐபிஎஸ்ஸும் கனவு காணுவார்கள்.
காவல்துறையில் மாநிலத்தில் உயர்ந்த அதிகாரம் உள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் ஓய்வுப்பெற ஒருநாள் உள்ள நிலையில் மீண்டும் பணி நீட்டிப்பு வழங்குவது, உளவுத்துறை, குற்றப்பிரிவுக்கு டிஜிபியாக நியமித்துவிட்டு சட்டம் ஒழுக்கை கூடுதலாக கவனிக்கச் சொல்வது, நியாயமாக பதவி உயர்வு வரவேண்டியவருக்கு ஒதுக்காமல் சர்வீஸ் குறைவாக உள்ளவர்களை நியமிப்பது போன்ற காரியங்கள் பல மாநிலங்களில் நடந்தது.
இந்த விவகாரம் அனைத்து மாநிலங்களிலும் நடந்ததை அடுத்து காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்நிலையில், அந்தத் தீர்ப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி மத்திய அரசு மனு செய்தது.
அந்த மனு மீது கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அவை பின்வருமாறு. * சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள் தகுதி வாய்ந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
* மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை யூபிஎஸ்சி ஆணையத்துக்கு அனுப்பிவைத்து, அவர்கள் 3 பேரை பரிந்துரைப்பார்கள்.
* அந்த 3 அதிகாரிகளில் ஒருவரை மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமித்துக்கொள்ளலாம்.
* ஓய்வுபெறும் காலத்துக்கு குறுகிய நாட்களுக்கு முன் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்குவதை மாநில அரசுகள் அறவே தவிர்த்துவிட வேண்டும்.
* சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள், தங்களுடைய பதவி முடியும் காலம்வரை 2 ஆண்டுகள் வரை பணியாற்றும் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
* தற்போது பதவியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெறும் காலத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்கும் பணிகளை அரசு தொடங்கிவிட வேண்டும்.
* தகுதிவாய்ந்த, அனுபவம் நிறைந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை யூபிஎஸ்சி குழுவுக்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
* அதிலிருந்து 3 பேர் பட்டியலை யூபிஎஸ்சி அனுப்பும் அதிலிருந்து ஒருவரை மாநில அரசு நியமிக்கலாம்.
* கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மாநில அரசுகள் ஏதேனும் சட்டம், உத்தரவுகள் பிறப்பித்திருந்தால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் இருந்தது.
இந்நிலையில் இடையில் மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியை தாங்களே நியமனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பஞ்சாப், ஹரியாணா, உ.பி., மேற்கு வங்கம், பிஹார் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இந்த உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தன. இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.
டிஜிபிக்கள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே உள்ளது. அவை அப்படியே தொடரவேண்டும் என தெரிவித்த அமர்வு 5 மாநிலங்களின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஓய்வுபெறுவதை ஒட்டி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உத்தரவுப்படி அடுத்த டிஜிபிக்கான 3 பேர் கொண்ட பேனலை மூன்று மாதத்துக்கு முன் அதாவது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழக அரசு அனுப்ப வேண்டும்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு வருபவர் அடுத்து இரண்டு ஆண்டுகள் சர்வீஸ் உள்ளவராக (அதாவது 2021 ஜூன் வரை பதவிக்காலம் உள்ளவராக) இருக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள தகுதியான டிஜிபிக்கள் 9 பேரில் ஒரே ஒருவரைத் தவிர யாருக்குமே அந்த தகுதி இல்லை.
தற்போது உள்ள ஐபிஎஸ்களில் டிஜிபியாக உள்ளவர்கள்
1. ஜாங்கிட் வரும் ஆகஸ்டு மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.
2. திரிபாதி அடுத்த ஆண்டு மே மாதத்தில் ஓய்வு பெறுகிறார்.
3.காந்திராஜன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார்
4.ஜாஃபர் சேட் 2020 டிசம்பர் மாதம் ஓய்வுபெறுகிறார்.
5. லட்சுமி பிரசாத் 2020 மே மாதம் ஓய்வு பெறுகிறார்.
6. அசுதோஷ் சுக்லா 2021 ஜனவரி மாதம் ஓய்வு பெறுகிறார்.
7. மிதிலேஷ் குமார் ஜா 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். (இவர் மட்டுமே தகுதியாக உள்ளார்)
8. தமிழ்ச்செல்வன் 2021-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெறுகிறார்.
9. ஆஷிஸ் பங்க்ரா இந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார்.
அவரவர்கள் ஓய்வுபெறும் தகுதியின் அடிப்படையில் பார்த்தால் 3 பேர் பேனலுக்கான பட்டியலிலேயே மிதிலேஷ் குமார் ஜா மட்டுமே தகுதியாகிறார். அவரும் அயல் பணியில் பணியாற்றுவதால் டிஜிபி சட்டம் ஒழுங்கு பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மீதமுள்ள 8 டிஜிபிக்களும் 2 ஆண்டுகள் முழுமையான பதவி இல்லாதிருப்பதால் தகுதியிழந்தவர்கள் ஆகிறார்கள். இதுபோன்ற இடியாப்பச் சிக்கல் இதற்கு முன் வந்ததே இல்லை. ஆகவே இதலிருந்து தங்களுக்கு விதிவிலக்கு கேட்டுத்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து 2 ஆண்டுகள் சர்வீஸ் உள்ள 1987-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளான சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, பிரதீப் வி பிலிப் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர் அளிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதனடிப்படையில் 1987-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான கூடுதல் டிஜிபிக்கள் சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, பிரதீப் வி பிலிப், ஆர்.சி.கொட்வாலா, விஜயகுமார் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் சைலேந்திர பாபு ஜூன் 2022 வரை சர்வீசில் இருப்பார், கரன்சின்ஹா ஜன.2022 வரை சர்வீசில் இருப்பார், பிரதீப் வி பிலிப் 2021 செப்டம்பர் வரை சர்வீசில் இருப்பார். கொட்வாலா வரும் ஜூன் மாதமும், விஜயகுமார் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதமும் ஓய்வு பெற உள்ளனர்.
புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியில் ஏற்கக் கூடிய வகையில் சர்வீஸ் உள்ளவராக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் அடிப்படையில் சைலேந்திரபாபு, பிரதீப் வி பிலிப், கரன்சின்ஹா ஆகியோர் கொண்ட பட்டியல் அனுப்பப்படும் என தெரிகிறது. இவர்களில் ஒருவரே அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
பணியில் உள்ள டிஜிபிக்களும் பணிக்காலமும்:
1. டி.கே.ராஜேந்திரன் - சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜூன் 2019-ல் ஓய்வு 2. ஆர்.சி.கொட்வாலா - பயிற்சி பிரிவு டிஜிபி ஜூன்.2019-ல் ஓய்வு 3. ஆசிஷ் பங்க்ரா - செயலாக்கம் பிரிவு டிஜிபி ஜூன் 2019- ஓய்வு
4. ஜாங்கிட் - காவலர் போக்குவரத்துக்கழக டிஜிபி ஆக.2019-ல் ஓய்வு
5. காந்திராஜன் - மாநில மனித உரிமை ஆணைய இயக்குனர் அக்.2019-ல் ஓய்வு
6. திரிபாதி - சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி மே.2020-ல் ஓய்வு
7. ஸ்ரீ லட்சுமிபிரசாத் - மின்வாரிய விஜிலென்ஸ் டிஜிபி மே. 2020-ல் ஓய்வு
8. விஜயகுமார் - சட்டம் ஒழுங்கு சிறபு டிஜிபி - செப்.2020-ல் ஓய்வு
9. ஜாஃபர் சேட் - சிபிசிஐடி டிஜிபி - டிசம்பர் 2020-ல் ஓய்வு
10/அசுதோஷ் சுக்லா சிறைத்துறை டிஜிபி ஜன. 2021-ல் ஓய்வு
11.தமிழ்செல்வன் தொழில்நுட்பப்பிரிவு டிஜிபி மே. 2021 -ல் ஓய்வு
12.மிதிலேஷ் குமார் ஜா அயல்பணியில் வெளிநாட்டில் உள்ளார்- ஜூலை. 2021-ல் ஓய்வு
13.பிரதீப் வி பிலிப் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி செப். 2021-ல் ஓய்வு
14.கரன் சின்ஹா போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு பிரிவு டிஜிபி பிப்- 2022-ல் ஓய்வு
15.சைலேந்திரபாபு ரயில்வே டிஜிபி ஜூன் -2022-ல் ஓய்வு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT