Published : 02 Mar 2019 10:24 AM
Last Updated : 02 Mar 2019 10:24 AM
ஒரு நாட்டின் வளர்ச்சியை, அதன் கட்டமைப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடுகிறார்கள். அந்த வகையில், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் கட்டமைப்புகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
குறிப்பாக, பல நாடுகளில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட மேம்பாலங்கள், அந்த நாட்டின் வளர்ச்சியை உணர்த்துகின்றன. நேரில் பார்க்க முடியாதவர்கள்கூட, திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிநாடுகளில் உள்ள பிரம்மாண்டமான மேம்பாலங்களைப் பார்த்து வியந்து போவார்கள். அதுபோல, நமது ஊரிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படுமா என ஏங்குவார்கள். சேலத்து மக்களுக்கு இந்த ஏக்கம் இனி இருக்காது என்று கூறும் வகையில், தமிழகத்தின் மிக நீண்ட சாலை மேம்பாலம் என்ற பெருமையுடன் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பாலத்தின் ஒரு பகுதி ஈரடுக்கு மேம்பாலமாக கட்டப்படுவது சிறப்புக்குரியது.
மற்றொரு சிறப்பு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட செக்மென்ட் தொழில்நுட்பத்துடன் (Segment Technology) இந்த பாலம் கட்டப்படுவதுதான்.
தமிழகத்தின் மிக நீளமான இரண்டு அடுக்கு மேம்பாலம் என்ற சிறப்புடனும் உருவாகி வரும் பாலம், சேலத்தின் அடையாளமாக விளங்கப்போகிறது என்று பெருமிதம் கொள்கின்றனர் சேலம் மக்கள்.
இத்தகைய பெருமைகளைக் கொண்ட புதிய மேம்பாலம், காசி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சேலம் நகருக்குள் வரும் வாகனங்கள், சாலை சந்திப்புகளில் சிக்கித் தவிப்பதை தவிர்க்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.
சேலத்தின் முக்கிய சாலை சந்திப்புகளான நான்கு ரோடு, ஐந்து ரோடு மற்றும் சாரதா கல்லூரி சாலை ஆகியவற்றில் அதிகரித்துவிட்ட நெருக்கடியால், எதிர்காலத்தில் வாகனங்கள் ஆமை வேகத்தில் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதைத் தவிர்க்கவே, பிரம்மாண்டமான மேம்பாலம் உருவாகி வருகிறது.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சேலத்துக்குள் நுழையும் வாகனங்களுக்காக ஒரு பாலம், பெங்களூரு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் சேலத்துக்குள் வருவதற்காக மற்றொரு பாலம் அமைக்கப்படுகிறது. இந்த இரு பாலங்களும் சேலம் ஐந்து ரோடு சந்திப்பில் இணைவது போல தோன்றினாலும், அவை தனித்தனியாகத்தான் உள்ளன.
இந்த பாலங்களின் மொத்த நீளம் 7.8 கிலோமீட்டர். இதில் ஐந்து ரோடு முதல் சேலம் புதிய பேருந்து நிலையம் வரை இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, இரண்டு அடுக்கு பாலங்களையும் ஒற்றை வரிசையில் அமைந்த தூண்களே தாங்கிப் பிடிக்கின்றன என்பது வியப்புக்குரியது.
பாலத்தின் ஓடுதளமானது, மெட்ரோ ரயில் திட்டத்தில் பயன்படுத்திய செக்மென்டல் தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்த மேம்பாலம் திறக்கப்படும்போது,
தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலம் இதுதான் என்ற பெருமையையும் பெறப் போகிறது.
இதுகுறித்து சேலம் மக்கள் கூறும்போது, “கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கும் சேலம் நகருக்கு, இந்தப் பாலம் ஆறுதல் அளிப்பதாக அமையும். அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த பாலங்களை அமைக்கின்றனர்.
எனினும், பாலம் கட்டும்பணியால் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. எனவே, இந்தப் பணியை முடிந்தஅளவுக்கு துரிதமாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு பாலங்களை திறந்துவைக்க வேண்டும். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பழனிசாமி, தமிழக முதல்வராக இருப்பதால், இந்தப் பாலத்தை சேலத்துக்கு கொண்டு வந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் மேலும், பணிகளைத் துரிதப்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
படங்கள்: எஸ்.குருபிரசாத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT