Last Updated : 03 Mar, 2019 09:50 AM

 

Published : 03 Mar 2019 09:50 AM
Last Updated : 03 Mar 2019 09:50 AM

படியில் பயணம்... நொடியில் மரணம்... விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசுப் பேருந்து ஓட்டுநர்!

தம்பி படியில நிக்காதீங்க,  வரிசையில நின்னு பஸ்ஸுல ஏறுங்க, ஒருத்தர் பின்னால ஒருத்தரா ஏறுங்க" என்றெல்லாம் ஒரு அரசுப் பேருந்து ஓட்டுநர் கூறிக்கொண்டிருப்பதை நாமக்கல்லில் பார்க்கலாம். வழக்கமாக, அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மாணவ, மாணவிகளை நடத்தும்விதம் வேறு மாதிரியாக இருக்கும் சூழலில், இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்காக தனியாக பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதால், அங்கு பயில்வோர்  நெரிசலில் சிக்காமல், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அதேசமயம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள்,  அரசுப் பேருந்து அல்லது சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை நம்பியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச பேருந்துப்  பயண அட்டை வழங்கியுள்ளதால், தொலைவில் இருந்து வரும் பெரும்பாலான மாணவ, மாணவியர் அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். எனினும், கூட்ட நெரிசலால் படிக்கட்டுகளில் தொங்கியபடி, ஆபத்து பயணம் மேற்கொள்வதையும் காணநேரிடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் எஸ்.சுப்பிரமணியன், கடந்த 23 ஆண்டுகளாக அரசுப்  பேருந்தில் பயணிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளை,  வரிசையாக நிற்க வைத்து  பேருந்தில் ஏற்றி, இறக்குவதை கடமையாகக் கொண்டுள்ளார். இவரது பணியை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, போக்குவரத்துத்  துறை ஊழியர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

அரசுப் பேருந்து ஓட்டுநர் எஸ்.சுப்பிரமணியன் கூறும்போது, " 1991-ல் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தேன். கடந்த 25 ஆண்டுகளாக விபத்து ஏற்படுத்தாமல் பணிபுரிந்து வருகிறேன். ஓய்வு நாட்களில் எனது மகன், மகள்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். அப்போது, பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் மாணவர்கள், பேருந்து வரும் சமயத்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறுவர். கூட்ட நெரிசலால் சிலர் தடுமாறி கீழே விழுவார்கள்.  மாணவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை. பள்ளிக்குச் செல்லும் ஆவலில் முண்டியடித்துக் கொண்டு ஏறி, கீழே விழுவார்கள்.

இதனால்,  வீட்டருகே உள்ள கொசவம்பட்டி பேருந்து நிறுத்ததுக்குச்  சென்று, மாணவர்களை வரிசையில் நிற்க வைத்து, பேருந்தில் ஏற்றி விடுவேன். காலை கொசவம்பட்டியிலும், மாலை ரெட்டிப்பட்டியிலும் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து, பேருந்துகளில் ஏற்றிவிடுவேன்.  திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் இப்பணியில் ஈடுபடுவேன். மற்ற நாட்களில் பணி சூழல் காரணமாக செய்ய இயலாது. எனினும், நான் வராத நாட்களிலும், மாணவர்கள் வரிசையில் நின்று பேருந்தில் ஏறுகின்றனர்.

அதேபோல, படியில் நின்று பயணம் மேற்கொள்ளக்கூடாது எனவும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். 1993 முதல் 25 ஆண்டு

களுக்கு மேலாக இப்பணியை மேற்கொள்கிறேன். தற்போது, ஈரோடு-துறையூர்  பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறேன். மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே எனதுநோக்கம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x