Published : 03 Mar 2019 10:27 AM
Last Updated : 03 Mar 2019 10:27 AM
மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியின் வெற்றியை மதுரை கிழக்கு, மதுரை மத்தி சட்டப்பேரவை தொகுதிகள் பறித்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியினரை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள இத்தொகுதியில் கூட்டணி, வேட்பாளர் தேர்வை பொறுத்தே வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மக்களவைத் தொகுதி 1952-ல் உருவாக்கப்பட்டது. இதுவரை 16 தேர்தல்களை சந்தித்த இத்தொகுதியில் காங்கிரஸ் 8 முறையும், மார்க்சிஸ்ட் 3, இந்திய கம்யூ., தமாகா, ஜனதா, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. பெரும்பாலும் இத்தொகுதியில் திமுக, அதிமுகவின் கூட்டணி கட்சிகளே போட்டியிட்டு வந்தன. இந்நிலையில், 2009-ம் ஆண்டு தேர்தலில் திமுக நேரடியாக களமிறங்கி வெற்றிபெற்றது. அதேபோல் கடந்த (2014) தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது.
2019-ல் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியை மீண்டும் திராவிட கட்சிகள் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இம்முறை மதுரை தொகுதியை திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் கேட்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் மதுரையில் போட்டியிட தேமுதிக விரும்புகிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை வேட்பாளராக்க தேமுதிக தீவிரம் காட்டி வருகிறது.
திமுக நேரடியாக போட்டியிட்டால், அவர்களின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.வேலுச்சாமி, முன்னாள் மேயர்கள் வி.குழந்தைவேலு, செ.ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அதிமுக நேரடியாக களம் காணும்பட்சத்தில், தனது மகன் ராஜ் சத்யனை போட்டியிட வைக்க வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், கட்சித் தலைமை மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிட தயாராக உள்ளதாக தற்போதைய எம்.பி கோபாலகிருஷ்ணன், கிரம்மர் சுரேஷ் உள்ளிட்ட சிலர் காத்திருக்கின்றனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையாத நிலையில், பாஜகவுக்கு மதுரையை ஒதுக்கவும் வாய்ப்புள்ளது. அப்படியொரு சூழலில் பாஜகவின் மாநில செயலாளர் ஆர்.னிவாசன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கேற்ப கடந்த 4 ஆண்டுகளாக அவர் களப்பணியாற்றி வருகிறார் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
யாருக்கு செல்வாக்கு அதிகம்?
மதுரை மக்களவைத் தொகுதியில் மேலூர், மதுரை கிழக்கு, மத்தி, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை கிழக்கு, மத்தியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. மற்ற நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. சட்டப்பேரவை தொகுதி அடிப்படையில் மதுரை கிழக்கில் 33 ஆயிரம், மத்தியில் 6 ஆயிரம் என 39 ஆயிரம் வாக்குகள் திமுக அதிகம் பெற்றுள்ளது. இதர 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 77 ஆயிரம் வாக்குகளை அதிமுக அதிகம் பெற்றுள்ளது. மொத்தத்தில் திமுகவைவிட அதிமுக 38 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்றே அதிமுக 1.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது பாஜக, பாமக அதனுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளதால், அதிமுகவுக்கு சாதக மான நிலையே உள்ளது.
அதே நேரம் அமமுகவுக்கு மேலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் செல்வாக்கு உள்ளதால், அது அதிமுகவுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். அதோடு, மதுரை கிழக்குத் தொகுதி திமுக எம்எல்ஏ பி.மூர்த்தியின் களப்பணியால் அப்பகுதியில் திமுக அதிக வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளது. அதேபோல் மத்திய தொகுதியில் திமுக எம்எல்ஏ பிடிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு இருக்கும் நற்பெயரால் திமுக கணிசமான வாக்குகளைப் பெறும். இந்த 2 தொகுதிகளின் வாக்குகள் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எனினும், தெற்கு தொகுதியில் பாஜகவுக்கும், மத்தியில் தேமுதிகவுக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. பாஜக ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், தேமுதிகவும் வந்துவிட்டால், அது திமுகவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும்.
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மதுரை தொகுதியை இம்முறையும் திராவிட கட்சிகளே கைப்பற்றுமா என்பதே கேள்வியாக இருக்கிறது. வேட்பாளர் தேர்வு, தேர்தல் களப்பணியில் திறம்பட செயல்படும் அணிக்கே வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT