Published : 25 Mar 2019 09:01 AM
Last Updated : 25 Mar 2019 09:01 AM
பிறக்கும்போது நாமெல்லாம் உறவுகளுடன்தான் இருக்கிறோம். துரதிருஷ்டவசமாய் இறக்கும்போது சிலர் ஆதரவற்றோராய் மாறிவிடுகின்றனர். பலருக்கோ, மரணச் சடங்கு செலவு செய்யக்கூட வசதியில்லாத குடும்பமே அமைகிறது. இவர்களது மரணமும், மற்றவர்களைப்போல மரியாதையான நிகழ்வுகளுடனே இருக்க வேண்டுமென்பதே தாய்மை அறக்கட்டளையின் லட்சியம். இதை நோக்கியே எங்கள் பயணம் தொடர்கிறது” என்கிறார் கோவை சதீஷ்.
கோவையில் ஆதரவற்றோர் அல்லது மிகுந்த வறுமையில் வாடுவோர் இல்லத்திலிருந்து அழைப்பு கிடைத்தவுடன், தாய்மை அறக்கட்டளையின் உறுப்பினர்கள், தங்கள் குழந்தைகளுடன், குடும்ப சகிதமாய் சேவையாற்றப் புறப்படுகின்றனர். தங்களுடன், சாமியானா, டேபிள், சேர், டீ பிளாஸ்க், சடலத்தை வைக்கும் குளிர்சாதன சவப்பெட்டி (ஃப்ரீஸர் பாக்ஸ்) ஆகியவற்றையும் கொண்டுசெல்கின்றனர். தேவைப்படும் பொருட்களை அங்கு வழங்கிய பின்னர், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து புறப்படுகின்றனர். வேறு ஏதேனும் உதவிகள் தேவையா என்றும் விசாரிக்கத் தயங்குவதில்லை. இதற்கெல்லாம் ஒரு பைசா கூட அவர்கள் வசூலிப்பதில்லை. பொருட்களை கொண்டுவரும் வாகனத்துக்கான கட்டணத்தைக் கூட இவர்கள் கேட்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை நீலிகோணம்பாளையத்தைச் சேர்ந்த தாய்மை அறக்கட்டளையின் அறங்காவலரும், கௌரவ ஆலோசகருமான கோவை சதீஷை தேடிச் சென்றோம். அப்போதுதான், ஒரு இறப்பு நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்றுவந்திருந்த அவர், சரளமாய் பேசத் தொடங்கினார்.
“பூர்வீகமே கோயம்புத்தூர்தான். பெற்றோர் பழனிசாமி-ஜெகதீஷ்வரி. அப்பா மில் தொழிலாளி. எனக்கு 2 தங்கைகள். நடுத்தரக் குடும்பம். சித்ரா பகுதியில இருக்கும் பத்மாவதி அம்மாள் பள்ளியில் 10-ம் வகுப்பு முடிச்சிட்டு, கே.கே.நாயுடு பள்ளியில் பிளஸ் 2 முடிச்சேன். அதுக்கப்புறம் தனியார் பாலிடெக்னிக்குல டிப்ளமோ முடிச்சிட்டு, ஏ.சி. மெக்கானிக்கா வேலை செஞ்சேன். சின்ன வயசுல இருந்தே, கஷ்டப்படறவங்களைப் பார்த்தா மனசுக்கு பாரமா இருக்கும். நம்மால முடிஞ்ச உதவி செய்யனும்னு தோணும்.
ஏழைக் குழந்தைகளுக்கு கொஞ்ச நாள் இலவசமாக டியூசன் சொல்லிக்கொடுத்தேன். பல பேருக்கு ரத்த தானம் வழங்கினேன். 2008-ல திருமணம். மனைவி சாரதா. ஏ.சி. மெக்கானிக் தொழில்ல கிடைத்த வருமானம் பத்தலை. அதனால, கட்டிடப் பராமரிப்புப் பணியில ஈடுபட்டேன்.
சமூகப் பணிகள் ஆர்வம் காரணமாக, சில அறக்கட்டளை, அமைப்புகளோட இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணிகள்ல ஈடுபட்டேன். இந்த சமயத்துல, ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் ஆத்மா அறக்கட்டளையோட சேர்ந்து, பல இடங்களுக்கும்போய், சடலங்களை அடக்கம் செய்ய உதவினேன். இதுக்குநடுவுல, விழிப்புணர்வு குறும்படம் இயக்க முடிவு செஞ்சேன்.
விருது பெற்ற குறும்படம்!
முதல்ல, முதியோர்களோட கஷ்டத்தையும், அவர்களைப் பாதுகாக்க வேண்டியதோட முக்கியத்துவத்தையும் விளக்கும் `நரை’ங்கற குறும்படம் இயக்கினேன். 2011-ல் ஆதரவற்ற சடலங்கள் தொடர்பான `மிட்டாய் தாத்தா’ என்கிற குறும்படம் இயக்கினேன். எனக்கு தெரிஞ்சி, ஆதரவற்ற சடலம் தொடர்பாக உலக அளவுல எடுத்த முதல் குறும்படம் இதுதான். இது நல்ல வரவேற்பை பெற்றது. பல பள்ளிக்கூடங்கள், அமைப்புகள், இயக்கங்கள் எல்லாம் இந்தக் குறும்படத்தை திரையிட்டாங்க. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், `சிறந்த படைப்பாளி’ விருது கொடுத்தாங்க. இந்த ஊக்கத்தால, தபால், நெகட்டிவ், பொய்முகங்கள் அப்படினு நிறைய குறும்படங்களை இயக்கினேன்.
என்னோட சமூக ஆர்வத்துக்கு, இதெல்லாம் போதாதுன்னு மனசு சொல்லிச்சு. 2017-ல தாய்மை அறக்கட்டளைங்கற அமைப்பை தொடங்கினேன். மனைவி சாரதா, நண்பர்கள் மகேஸ்வரி, சந்தோஷ், கார்த்தி, மோகன், கீதா, சுமலதா எல்லாம் என்னோட இணைஞ்சாங்க. அந்த வருஷம், கோயம்புத்தூர்ல டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவியது. இதுக்கு தீர்வுகாணும் வகையில, கோயம்புத்தூர் மாநகராட்சியில, 100-க்கும் மேற்பட்ட இடங்கள்ல இலவசமாக நிலவேம்பு கஷாயம் கொடுக்கும் முகாம்களை நடத்தினோம். அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த விஜயகார்த்திகேயன், எங்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாரு.
தொடங்கியது நீத்தார் சேவை...
அடுத்ததா, நீத்தார் சேவையில எங்களோட கவனத்தை திருப்பினோம். நண்பர்கள் உதவியோட, சாமியானா, டேபிள், சேர், டீ பிளாஸ்க்னு வாங்கினோம். ஆதரவற்றோர் அல்லது ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தோர் இறப்பு நிகழ்வுக்குப் போய், இலவசமாக இதெல்லாம் கொடுத்தோம். இதுக்கு நிறைய வரவேற்பு இருந்தது. இதேபோல 10 மாதத்துல, 100-க்கும் மேற்பட்ட குடும்பத்துக்கு `நீத்தார் சேவை’ பொருட்கள் வழங்கினோம். இதைப் பார்த்துட்டு சிலர் சேர், டேபிள்கள்னு வாங்கிக் கொடுத்தாங்க. வாகராயம்பாளையம் ரோட்டரி சங்கம், இலவசமாக குளிர்சாதன சவப்பெட்டி வாங்கிக் கொடுத்தாங்க. தேவைப்படறவங்களுக்கு அதுவும் கொடுக்கறோம். இப்பவெல்லாம் தினமும் 2-க்கு குறையாம நீத்தார் சேவை வழங்கறோம். சில நாட்கள்ல 7 அழைப்புகள்கூட வருது. ஆனா, எல்லோருக்கும் கொடுக்கற அளவுக்கு எங்கள்கிட்ட பொருட்கள் இல்லை. இதைப் பெற தீவிரமாக முயற்சி செய்யறோம்.
பாரத மாதா இளைஞர் நற்பணி மன்றம் அமைப்பு, விருது கொடுத்து எங்களை ஊக்குவிச்சாங்க. அதேபோல, ரோட்டரி சங்கமும் சிறந்த அர்ப்பணிப்பு சேவைனு விருது கொடுத்தாங்க. முகநூல் மூலமா இந்த தகவல் தெரிஞ்ச பலரும், எங்களோட சேவையாற்ற இணைஞ்சாங்க.
இறந்த வீட்டுக்குப் போகும்போது, பெண்கள், குழந்தைகள்னு குடும்பமா நாங்க போறதால, அங்க இருக்கறவங்க எங்களை முதல்ல வித்தியாசமாக பாத்தாங்க. எங்களோட செயல்பாடுகளைப் பார்த்துட்டு, மனதாரப் பாராட்டறாங்க. நோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு லட்சக்கணக்குல செலவு செஞ்சும், அவங்க காப்பாத்த முடியாமலும், இறந்த துக்கத்திலும் இருக்கும் குடும்பத்தாருக்கு, எங்களோட உதவி பெரிய விஷயமா இருக்கு. எங்க கையப்பிடிச்சிக்கிட்டு, எங்க சொந்தக்காரங்க மாதிரி, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம உதவறீங்க, ரொம்ப நன்றிங்கனு கண்கலங்க சொல்லறதே, எங்களுக்கு கிடைக்கற பெரிய விருதாகவும், ஊக்குவிப்பதாகவும் அமையுது. இது போதுங்க எங்களுக்கு” என்றார் சதீஷ் நெகிழ்ச்சியுடன்.
“வழக்கமாக இறப்பு வீட்டுக்குச் சென்றி திரும்பியவுடன், குளிப்பது வழக்கம். ஆனால், சில நாட்கள் 5-க்கும் மேற்பட்ட நீத்தார் சேவையில் ஈடுபடுவதாக கூறுகிறீர்களே? எத்தனை முறை குளிப்பீர்கள்”என்ற கேள்வியை முன்வைத்தோம். “ஆரம்பத்துல சில நாட்கள் குளிக்க முடிஞ்சது. அதுக்கப்புறம் தொடர்ந்து சேவையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் குளிப்பது சாத்தியமில்லாம போனது. அதனால, ஒரு புரிதலோடு, ஒவ்வொரு முறை குளிக்கும் சடங்கை கைவிட்டுட்டோம். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லீங்க. சம்பந்தப்பட்ட வீட்டுக்காரங்களோட கண்ணீரே, எங்களை சுத்தப்படுத்தியதாக கருதறோம்” என்றார் சதீஷ். (சேவை தொடர்புக்கு: 98947 31460.)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT