Last Updated : 29 Mar, 2019 03:51 PM

 

Published : 29 Mar 2019 03:51 PM
Last Updated : 29 Mar 2019 03:51 PM

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு; தமிழகத்தில் வலுவிழந்த குழந்தைகள் நல உரிமை ஆணையம்: தேவநேயன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு இடையே கோவையில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொடுமையான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன் புதூரைச் சேர்ந்தவரின் 7 வயது மகள் திப்பனூர் அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 25-ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல்போக அடுத்த நாள்  காலை சிறுமி இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் , ''சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், சிறுமியின் வாயையும், மூக்கையும் துணியால் அழுத்தியும், கழுத்தை கயிறால் இறுக்கியும் சிறுமியை கொடூரமாக கொலை செய்தனர்'' என்று தெரியவந்துள்ளது.

போக்ஸோசட்டத்தில் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ள போலீஸார், இவ்வழக்கு  தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்த 6 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

இந்த வழக்கில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில், குழந்தைகளின் பாதுகாப்புக்கான குரலை தொடர்ந்து  வலுவாக எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் சமூகம் உள்ளது. குழந்தைகளுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை சம்பவங்கள் இதை உணர்த்துகின்றன.

ஆனால், மாறாக குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் குற்றங்கள் நிகழும் போதெல்லாம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கொடூரமான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தும் பின்னர் மெல்ல மறைந்தும் விடுகின்றன.

உண்மையில் நமது சமூக அமைப்பு குழந்தைகளையும், அவர்களது பாதுகாப்பையும் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறதா? ஏன் இந்தக் குற்றவாளிகள் அவர்களது பாலியல் இச்சைக்கு குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்? 

இவர்களுக்கும் குழந்தைகளுக்கும்  இடையேயான உறவில் ஏன் நட்பு இல்லாத ஒரு இடைவெளி விழுந்திருக்கிறது என்பதை தீவிரமாக ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன. ஒரு மணி நேரத்தில் இந்தியாவில் 4 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பில் நமது அரசும், நமது சட்டமும் என்ன செய்து கொண்டிருக்கின்றன? குழந்தைகளுக்கான பாதுகாப்பான ஒரு சமூகத்தை நாம் ஏன் உருவாக்கவில்லை போன்ற முக்கியக் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தோழமை தொண்டு நிறுவன அமைப்பின் இயக்குனர், குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன்.

''ஒருகுற்றம் நடந்து முடிந்த பின்னர் அதனைப் பார்க்கும் பார்வையாளராகத்தான் நமது அரசும், நமது காவல் துறையும் உள்ளது. பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்னர் அதனைத் தடுப்பதற்கான வேலைகளை நாம் செய்வதில்லை.

குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலையும், நட்பு சூழல்களையும்  நாம் பேசுவதே கிடையாது. இது குடும்பம், அரசாங்கம், சமூகம் என எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.

நாம் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தொடர்ந்து போதனைகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பக்கம் பேசுவதில்லை. இதில் குட் டச், பேட் டச் கருத்திலிருந்து முரண்படுகிறேன்.

2 வயது, 5 வயதுக் குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு இவர்கள் கூறும் குட் டச், பேட் டச் பற்றிய புரிதல் இருக்குமா?

தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கே அறிவுரை வழங்கும் நாம் ஏன் ஆண் குழந்தைகளுக்கு  அறிவுரைவுகளை வழங்குவதில்லை?

ஆண் குழந்தைகளுக்கு சக பெண்களைப் பார்க்கும் பார்வை, கலாச்சார ரீதியலான புரிதலை சொல்லிக் கொடுக்கும் மன நிலையில் நாமும் இல்லை. 

இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து ஆண் குழந்தைகளுக்கு பாலினப் பாகுபாட்டை அவர்களது எண்ணத்தில் ஏற்றி விடுகிறோம். அதற்கான சூழலை ஆண் குழந்தைகளுக்கு நாம் வலுவாக ஏற்படுத்தியும் கொடுத்து விடுகிறோம். அவர்களிடம் பாலினப் புரிதலையோ, பாலின நீதியையோ, பாலினக் கல்வியையோ பற்றி நாம் பேசுவதில்லை.

ஒரு வளர்நிலை பருவத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அதனை இளம்பருவத்தில் இருக்கும் ஆண்கள் கையாள்வது எப்படி? என்று அவர்களிடம் நாம் பேசுகிறோமா? எது சரி, எது தவறு என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோமா?

அவர்கள் யாரை தங்களது ஆத்மார்த்த நாயகனாக ஏற்றுக் கொள்கிறார்கள.  பெண்களைக் கிண்டல் செய்கிறவர்கள், மாலை ஆறு மணிக்கு மேலே கையில் பீர் பாட்டிலுடன் இருப்பவர்கள். இவர்கள்தான் ஆண் என்ற நிழற்படத்தை சினிமாவும், ஊடகமும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றன. இதனை அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு வகுப்பறையில் பாலினச் சமத்துவத்தை நாம் புகுத்தாதவரை அவர்கள் வழிதவறி சில விஷயங்களை முயற்சி செய்து பார்க்கிறார்கள். நமது சமூகம்  தொடர்ந்து பாலினம் சார்ந்த விஷயங்களை  தொடர்ந்து மூடி வைக்கிறது. செக்ஸ் என்பது இயற்கையானது, இயல்பானது. ஆனால் பாலினக் கல்வி (sex education) என்பது ஏதோ தவறான கண்ணோட்டத்திலேயே  நமது சமூகத்தில் பார்க்கப்படுகிறது. இதனை நாம் நெறிப்படுத்த வேண்டும்.

பாலினக் கல்வியை அவர்களுடன் ஆலோசிக்கும் வகுப்பறைகள் இருக்கிறதா? பெற்றோர்களும் இதனை வீடுகளில் குழந்தைகளுக்குச் சொல்வதில்லை. வேறு எங்கு அவர்கள் தெரிந்து கொள்வார்கள். எனவே அந்த இளைஞர்கள் வேறு வழியைத் தேர்வு செய்கிறார்கள். செல்போன் வந்த பிறகு அவர்களுக்குக் காட்டும் தவறான பாதைகள் அதிகமாகி விட்டன.

 

 

அடுத்தது கடந்த சில ஆண்டுகளில் எத்தனை பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தனை பேரை  நாம் ஆய்வு செய்திருக்கிறோமா? உளவியல் மருத்துவரையோ, பாலியல் நிபுணரையோ வைத்து ஏன் இந்தக் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது என்று நாம் ஆய்வு செய்கிறோமா?

அவர்களுக்குள் பிரச்சினை இருக்கும் தானே. இது இரண்டு வகையாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று குற்றம், மற்றொன்று நோய்.

எல்லா பாலியல் துன்புறுத்தல்களையும் நீங்கள் குற்றமாகப் பார்த்துவிட முடியாது. நோயாகப் பார்த்தால் இதற்குத் தீர்வு காண  வேண்டும். இதனைவிட்டு அவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடு என்றால்? தூக்கு தண்டனை கொடுத்தால் இந்தக் குற்றங்கள் குறைந்து விடுமா?  நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு  தூக்கு தண்டனை கொடுத்தார்கள்.அதன் பின்னர் குற்றங்கள் குறைந்து விட்டதா? அப்படி என்றால்  நமது சமூகத்தில் எங்கோ சிக்கல் இருக்கிறது.

சரி குற்றம் நடந்துவிட்டது. இதன் பின்னர் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது?

கிட்டத்தட்ட 2016-ல் மட்டும் 1,543 பாலியல் குற்ற வழக்குகள் போக்சோ சட்டத்தில்  தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தண்டனை பெறப்பட்ட வழக்குகள் 199. தண்டிக்கப்பட்டவர்கள் 213 பேர்.

ஆனால் போக்ஸோ, குழந்தைகளுக்கு  எதிரான பாலியல் வழக்கை நீங்கள் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? குற்றவாளிகள் 20 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறாதா? போக்ஸோசட்டத்தில்( குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டத்தை யார் காண்காணிக்கிறார்கள். அதற்கென ஒரு அமைப்பு இருக்கிறதா?

இதில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்று  தமிழகம் முழுவதும் 45 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

45 பேர் வேலை செய்தும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கான வழியையும் செய்யவில்லை. நடந்த பின்னர் தண்டனை கொடுப்பதற்கான வேலையையும் செய்யவில்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையத்துக்கு என்று வழக்கறிஞர்கள் கிடையாது. இந்த ஆணையத்துக்கு என்று முறையான ஆவணமும் கிடையாது.  மனித உரிமை ஆணையத்துக்கு  இணையான குழந்தை நல உரிமைகள் ஆணையத்துக்கு  என்று தமிழக அரசு ஒதுக்கும்  நிதி ரூ.55 லட்சம் மட்டுமே.

இதே குழந்தைகள் நல உரிமை ஆணையத்துக்கு கேரள அரசு ஒதுக்கும் நிதி ரூ.6.5 கோடி. வித்தியாசத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

நமது மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையத்தில் தலைவர் இருக்கிறார். உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு குற்ற வழக்கு வந்தால் அதனைப் பதிவு செய்ய ஊழியர்கள் சரியாக இருக்கிறார்களா? பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு யார் ஆலோசனை வழங்குகிறார்கள்? அப்படி என்றால் நீங்கள் எந்த தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். 

தமிழகத்தில் இருக்கும் குழந்தைகள் நல அமைப்புகள் எல்லாம் குழந்தை இறந்த பின் பார்க்கும் அமைப்பாக இருக்கிறது.

இங்கு குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க அமைப்பு இருக்கிறதா?  நான் மீண்டும், மீண்டும் அழுத்தமாக சொல்வது ஒன்றுதான். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒரே வழக்காக கடந்துவிடக் கூடாது. கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து போக்சோ சட்டத்தின் அமலாக்கம் என்ன? இதனைப் பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும்.

நமது அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனி அமைச்சகம் இருக்கிறது. அதுபோல தமிழகத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள 45 அதிகாரிகளும் இங்கு தனித்தனியாக இயங்குகிறார்கள். எனவே, இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று தனி ஆணையரகம் ஒன்று உருவாக்க வேண்டும். இந்த 45 பேரும் இந்த ஆணையத்துக்குக் கீழே வர வேண்டும்.

தொடர்ந்து குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைந்து கொண்டே வருகிறது. அதனை அதிகரிக்க வேண்டும்.அடுத்து மிக முக்கியம்  குழந்தைகள் பாதுகாப்பு உரிமை தொடர்பான கல்வி, பாலினச் சமத்துவத்துக்கான கல்வியைக் கொண்டு வரவேண்டும்.

அடுத்து குழந்தைகளுக்காக உள்ள அமைப்புகளில் சரியான நபர்கள் ( குழந்தைகள் பாதுகாப்பு, உரிமை, உளவியலில்  நிபுணத்துவம் கொண்டவர்கள்) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேலும் குழந்தைகள் பாதுகாப்புக்குச் சட்டங்கள் கொண்டு வருவது மட்டுமில்லாது குழந்தைகள் பாதுகாப்புக்கான கலாச்சாரத்தை அனைத்து இடங்களிலும் உருவாக்க வேண்டும்.

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும். இவற்றை எல்லாம் கொண்டு வந்தால் மட்டுமே குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகம் உருவாகும்'' என்கிறார் தேவநேயன்.

எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொலைகள் எற்படும்போது மட்டும் குரல் எழுப்புவதோடு மட்டுமில்லாது தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்புகாகவும், அவர்களது உரிமைகளுக்காக அழுத்தமாக குரலை சமூகத்தில் பதிவு செய்யும் கடமை நமக்கிறது.

இத்துடன் இளைய தலைமுறையினருக்கும்  பாலின புரிதல் பற்றிய உரையாடல்களை எளிமையாக பேசும் கலாச்சாரத்தைக் கொண்ட சமூகத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்.

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x