Published : 02 Mar 2019 01:03 PM
Last Updated : 02 Mar 2019 01:03 PM
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக நியமன எம்எல்ஏக்கள் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கேள்வி எழுப்பியும் பதில் தராததால் பேரவையிலிருந்து ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம், திட்டங்களுக்கான செலவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ஆளும் அரசு மார்ச் மாத இறுதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். அப்போது நிதி ஒதுக்கி சட்டப்பேரவையின் அனுமதி பெறப்படும் தொகையானது அந்த நிதியாண்டின் இறுதிக்காலமான மார்ச் மாதம் வரை செலவு செய்யப்படும்.
ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது. மீண்டும் ஏப்ரலில் இருந்து செலவு செய்வதற்கு சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி பெற வேண்டும். அதன் காரணமாகத்தான் பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், புதுச்சேரியில் அது கடந்த 8 ஆண்டு காலமாக முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இல்லை. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை சட்டப்பேரவை கூடியது. முதல் நிகழ்வாக எழுத்தாளர் பிரபஞ்சன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், முன்னாள் எம்எல்ஏ சீத்தா வேதநாயகம், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதையடுத்து அதிமுக எம்எல்ஏ அன்பழகன் குறுக்கிட்டு, "ஏன் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட், ஆறு நாட்கள் தர்ணா தொடர்பாக விளக்கம் தேவை" என்று கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, "ஆட்சியாளர்களே போராட்டம் நடத்துகிறீர்கள். ஆட்சி நடத்த திறமை இல்லை. புதுச்சேரி மோசமாகியுள்ளது. ஆளத் திறமையில்லாவிட்டால் விலகுங்கள். மக்களை துன்புறுத்துவது ஏன்? மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாகக் கூறுகிறீர்களே" என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் முதல்வர் இருக்கைக்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வரிடம் கேள்வியும் எழுப்பினர். பதில் தராததால் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
பேரவை கூட்டத்தில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி ரூ. 2,703.63 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். மொத்தமாக வரும் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கான செலவுகளுக்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT