Last Updated : 06 Mar, 2019 09:57 AM

 

Published : 06 Mar 2019 09:57 AM
Last Updated : 06 Mar 2019 09:57 AM

பட்டுப்பூவே மெட்டுப்பாடு... மல்பெரி சாகுபடி தொழில்நுட்பம்!

ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என நவநாகரிக ஆடைகளுக்கு மாறினாலும், நமது பாரம்பரிய பட்டுச் சேலைகள் மீது விருப்பமில்லாத பெண்கள் குறைவுதான். குறிப்பாக, திருமணம் மற்றும் விசேஷ காலங்களின் பட்டுச் சேலை சரசரக்க வரும் பெண்களைப் பார்த்தால், மற்றவர்கள் அந்த சேலையைப் பற்றி விசாரிக்காமல் இருப்பதில்லை. இப்படியான பட்டுச் சேலைகள் எப்படி உருவாகின்றன. பட்டுப் புழுக்கள் கட்டும் கூட்டிலிருந்துதான் கிடைக்கும் நூல்தான், பட்டுச் சேலை நெய்யத் தயாரிக்கப்படுகிறது. பட்டுப்புழு வளர்ப்பில் முக்கியப் பயன்பாடு மல்பெரி இலைகள்!

மல்பெரி இலைகளே,  பட்டுப்புழு வளர்ப்புக்கு அடிப்படை ஆதாரம். பட்டுப் புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எதையும் உண்பதில்லை. எனவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பிறகே,  பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட இயலும். மல்பெரி இலை உற்பத்தி ஆண்டு முழுவதும் பலன் தரும் என்றாலும், பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்காக, தோட்டம் அமைத்து, பராமரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் மல்பெரி வி-1 ரகம் குறித்து விளக்குகிறார், கோவை பட்டு வளர்ச்சித் துறையைச் சேர்ந்த  உதவி பட்டு ஆய்வாளர் ச.சாந்தினி.

“மல்பெரி சாகுபடி செய்வதற்கு முன்பு நாற்றங்கால் அமைத்து, விதைக் குச்சிகளை உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு மார்ச் முதல் ஜூன் வரையிலான பருவம் ஏற்றது.  ஒரு ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்ய 324 சதுரடி மீட்டரில் நாற்றங்கால் படுக்கை அமைக்க வேண்டும். இதை 4 X 1.5 நீள, அகலம் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மண் பரிசோதனை செய்வது அவசியம். மல்பெரி சாகுபடிக்கு மண்ணில் நைட்ரஜன் அதிகம் இருக்க வேண்டும்.  மண் மாதிரியை சேகரித்து, சேலத்தில் உள்ள மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி, இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.

விதைக்குச்சிகளை நோய் தாக்குதல் இல்லாத,  நல்ல ஆரோக்கியமான, 8-12 மாதமுள்ள மல்பெரி மரங்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். அதை, தண்டின் கீழ்ப்பகுதியிலும் இல்லாமல், மேற்பகுதியிலும் இல்லாமல், நடுப்பகுதியில் ‘பென்சில்’ அளவு தடிமன் கொண்ட 10-12 செ.மீ. நீளமுள்ள குச்சிகளாகத்  தேர்ந்தெடுக்க வேண்டும்.

3-4 கணுக்கள் இருக்குமாறு அடிப்பகுதியை 45 டிகிரி குறுக்கு வாக்கில் வெட்டி எடுக்க வேண்டும். பின்னர், ஒரு கிலோ `அசோஸ்பைரில்லம்’ இயற்கை உரத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து, கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும். இதன்மூலம் வேர்விடும் திறன் அதிகரிக்கும். நடவுக்கு முன்பு 45 டிகிரி குறுக்காக வெட்டப்பட்ட விதைக் குச்சியின் பகுதியை அந்த கரைசலில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

நாற்றங்கால் அமைக்கும் நிலம் நன்றாக சூரியஒளி படுமாறு இருக்க வேண்டும். அதில்,  645 கிலோ தொழு உரமிட்டு மண்ணைக் கிளறிவிட வேண்டும். பின்னர்  ‘வேம்’  என்ற உயிர் உரத்தை சதுர மீட்டருக்கு 100 கிராம்  என்ற அளவில் இட்டு, நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர்,  ஊறவைத்த வேர்க்குச்சிகளை 15 X 7 செ.மீ. இடைவெளியில் 45 டிகிரி சாய்வாக, குறைந்தது ஒரு கணுவாவது வெளியில் தெரியுமாறு நடவு செய்ய வேண்டும்.  மூன்று  நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். கரையான்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மெலத்தியான் 5-டி அல்லது குயினால்பாஸ் 1.5-டி ஆகிய ஏதாவது ஒன்றை நிலத்தில் தூவி விட வேண்டும். இதேபோல் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டசிம் 50 டபுள்யூ.பி. மருந்தை 2 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது டிரைக்கோடர்மா விரிடி இயற்கை பூஞ்சாணக் கொல்லி 40 கிராமை தண்ணீரில் கலந்து பூவாளி மூலமாக தெளிக்கலாம். அவ்வப்போது தோன்றும் களைகளை அகற்ற வேண்டும். நடவு செய்த 55-60 நாட்களுக்கு பின்னர், ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் என்ற அளவில் யூரியாவை தூவி விட்டால், மல்பெரிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து எளிதாகக் கிடைக்கும். யூரியாவில் 46 சதவீதம் நைட்ரஜன் சத்து நிறைந்துள்ளது.

சாகுபடி தொழில்நுட்பம்

மூன்று, நான்கு மாதங்களில் மல்பெரி மரக்கன்றுகள் தயாராகிவிடும். அவை அமிலத் தன்மை மிக்க மண் உள்ளிட்ட அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. ஒரு ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்ய 5,500 மரக்கன்றுகள் தேவைப்படும். நாற்றங்காலைப் போலவே, மல்பெரி தோட்டம் அமைக்கும் நிலத்திலும் மண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரம் கொண்ட பகுதிகள் சாகுபடிக்கு ஏற்றவை. 24-28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, 65-80 சதவீதம் ஈரப்பதம்  மல்பெரி வளர்ச்சிக்கு ஏற்றது. குளிர், கோடைகாலங்களில் மல்பெரி சாகுபடியை தவிர்த்து, பருவமழை தொடங்கும் தருணங்களில் சாகுபடி செய்வது நல்லது. நடவு செய்த மூன்று மாதம் கழித்து 375: 140: 140  கிலோ என்றளவில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்களை இட வேண்டும்.

உயிர் உரங்களான அசோஸ்

பைரில்லத்தை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் கவாத்து செய்த பின்னர் 5 முறையும், பாஸ்போ பாக்டீரியத்தை 10 கிலோ என்ற அளவிலும் இருமுறையும் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

இவ்வாறு பராமரித்தால் ஏக்கருக்கு 24 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும். நீண்டகால பயிரான மல்பெரி, 20-25 ஆண்டுகள் பலன் தரும். இதைக் கொண்டு ஆண்டுக்கு 800-1200 பட்டு முட்டைத் தொகுதிகளை வளர்க்க முடியும். அதன்மூலம் 520-680 கிலோ வரை பட்டுக்கூடுகள்  அறுவடை செய்யலாம். அதில்  122.4 கிலோ பட்டு தயாரிக்கலாம். ஒரு கிலோ பட்டுக்கூடு தயாரிக்க ரூ.150-200 செலவாகும். அதற்கு சந்தையில் ரூ.380-400 விலை கிடைக்கும். கோவை மாவட்டத்தில் மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம்,தொண்டா

முத்தூர், ஆலாந்துறை, அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகள் மல்பெரி சாகுபடிக்கு ஏற்றவை என்பதால், விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்து பயன் பெறலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x